TamilSaaga

“சம்பாதிக்க துப்பு இல்ல.. பொண்ணு கேட்குதா”?… அவமானப்படுத்திய காதலியின் தந்தை – சிங்கையில் சம்பாதித்து அடுக்குமாடி வீடு கட்டிய ரோஷக்காரர்!

சிங்கப்பூர் பலருக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளது. இன்னும் சிலருக்கு ஓஹோவென நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளது. அந்த ஒரு சிலரில் சரவணனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர். சிங்கை மண் தன் வாழ்க்கை தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியது என்பது குறித்து நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தித் தளத்தின் “Exclusive” பிரிவுக்கு மனம் விட்டு பேசியிருக்கிறார். இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக…

“வணக்கம் சார்.. எனக்கு எப்படி ஆரம்பிக்குறதுன்னே தெரியல.. ம்ம்… (சிரிக்கிறார்).. சரி சார்.. மனசுல உள்ளதை சொல்றேன். என்னோட பேச்சு வெளிநாட்டில வேலைப் பார்க்குறவங்களுக்கு உபயோகமாக இருக்கும்-ங்குற நம்பிக்கையில இதை பகிர்ந்துக்குறேன்.

என்னுடைய ஊர் நீடாமங்கலம். ஓரளவுக்கு சொத்துப்பத்து உள்ள குடும்பம் தான். சொல்லிக்கிற அளவுக்கு நிலமும் வச்சிருக்கோம். ஆனா, எனக்கு படிப்பு வரல.. வீட்டுல-யும் அதை பெருசா எடுத்துக்கல. இன்னும் சொல்லப்போனா, நான் என்ன படிக்குறேன்-னு கூட அப்பா பெருசா கேட்டுக்கமாட்டார்.

இருந்தாலும் கேட்டரிங் படிச்சிருந்தேன். சமையல் பண்றதுல கொஞ்சம் ஆர்வமும் இருந்துச்சு. நான் அஜித் சாரோட ஃபேன். எவ்வளவு பெரிய ஸ்டாரா இருந்தாலும், பிடிச்சிருந்தா அவரே தன்னோட இருக்கிறவங்களுக்கு பிரியாணி சமைச்சுக் கொடுப்பார். அதுக்காகவே நானும் நல்லா பிரியாணி பண்ண கத்துக்கிட்டேன். என் நண்பர்களுக்கு என்னோட பிரியாணி எப்போதும் ஃபேவரைட் தான்.

நான் எப்போ வெளிநாட்டுல இருந்து வந்தாலும், பிரியாணி சமைக்குறதுக்காகவே என்னை அழைச்சுக்கிட்டு தோப்புக்கு போயிடுவாங்க. அந்த அளவுக்கு கொஞ்சம் கைப்பக்குவமா சமைப்பேன். அப்படி என் சமையலை விரும்பி சாப்பிட்ட நண்பர்களில் என் ‘கனி’யும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருத்தி.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் S Pass, Work Permitல் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம் – சிங்கை அரசு கொடுத்த “புதிய Update”

பள்ளி நாட்கள் இருந்தே பழக்கம். ஒரே ஊரு.. பக்கத்து வீடு.. ஆனா, எங்களை விட பல மடங்கு ரொம்ப வசதியான வீட்டுப் பொண்ணு. ஆரம்பத்துல நண்பர்களா இருந்தோம். காலேஜ் படிக்க அவங்க வெளியூர் போயிட்டாங்க. திருச்சியில ஹாஸ்டல்ல தங்கி படிச்சாங்க. அப்போ தான், நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணதை உணர்ந்தேன். ஒருநாள் ஃபோன் செஞ்சு, ‘உன்னை பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கட்டுமா’-னு கேட்டேன். அதுக்கு அவங்க, ‘இதை வீட்டுல பேசிக்கோங்க’-னு சொல்லிட்டாங்க.

‘வேண்டாம்.. உங்களை பிடிக்கலை’-னும் மறுக்கல.. அதை சமயம் “நானும் உங்கள விரும்புறேன்-னும் சொல்லல. வீட்டுல பேசிக்கோங்க-னு சொல்லிட்டாங்க. அப்பவே என் மேல அவங்களுக்கு அபிப்ராயம் இருக்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

முதல்ல என்னோட வீட்டுல இந்த விஷயத்தைப் பற்றி சொன்னேன்.. நான் படிக்குறதுக்கு கூட பெருசா ரியாக்ட் பண்ணாத அப்பா, இந்த விஷயத்துல ரொம்ப கண்டிப்போட நடந்துக்கிட்டார். ‘பக்கத்துல-யே இருக்குற பொண்ணு வேண்டாம், காதல்-லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது-னு கறாரா சொல்லிட்டார். அம்மா எதுவும் சொல்லல. ஆனா, நானும் என் முடிவுல உறுதியா இருந்தேன்.

அப்படி இப்படினு ஆறு மாசம் கழிச்சு, ஒரு வழியா கன்வின்ஸ் ஆன அப்பா, அம்மாவோட சேர்ந்து அவங்க வீட்டுக்கே போய் பொண்ணு கேட்டார். ஆனா, அவரு என் அப்பாட்ட, ‘வீட்டுக்கு வந்துட்டீங்களே-னு உள்ள கூப்டு உட்கார வச்சா, பொண்ணு கேட்பீங்களோ’-னு சொல்லிட்டார்.

ஆரம்பத்துல என்னோட காதலுக்கு ஒத்துக்காத என்னோட அப்பா, கனியோட அப்பாகிட்ட ரொம்ப இறங்கி பேசினார். ஆனா, அவரோ ‘சம்பாதிக்கவே துப்பு இல்லாத உங்க பையனுக்கு, என் பொண்ணு கேட்குதா? சம்பாதிச்சு சொத்து சேர்க்க சொல்லுங்க உங்க பையன… இப்படி அடுத்தவன் பொண்ணையும் பெத்து சொத்தையும் சேர்த்து வச்சிருப்பான்.. அவன்ட்ட பொண்ணு எடுத்து ஈஸியா செட்டில் ஆக நினைக்குறானா உங்க பையன்?’-னு ரொம்ப கேவலமா பேசிட்டாரு.

மேலும் படிக்க – 52 வயதில் பெற்ற தாய்க்கு “மறுமணம்” – கேன்சரால் தவித்தவருக்கு சம்பிரதாயங்களை தகர்த்து திருமணம் செய்து வைத்த வெளிநாட்டு ஊழியர்

விஷயத்தை கேள்விப்பட்ட எனக்கு கனியோட அப்பா மேல கோவமே வரல.. இன்னும் சொல்லப்போனா அவருக்கு நன்றி சொல்லணும்-னு தோணுச்சு. ஏன்னா… பெருசா வாழ்க்கை பற்றிய கவலை இல்லாம இருந்த எனக்கு, “சம்பாதிக்கவே துப்பு இல்லாத உங்க பையனுக்கு, என் பொண்ணு கேட்குதா?”-னு அவர் நாக்கை புடுங்கிக்குற மாதிரி கேட்ட வார்த்தை, என் வாழ்க்கையை மாத்திடுச்சு. அதுக்கு அப்புறம் தான், ‘நாம இத்தனை நாளா எவ்வளவு காலத்தை வீணடிச்சி இருந்திருக்கோம்’-னு புரிஞ்சிக்கிட்டேன்.

வீட்டுல பேசினேன்.. நண்பர்கள் கிட்ட பேசினேன்.. ஒருவழியா ‘துபாய்’ போலாம்-னு முடிவு ஆனுச்சு. அங்க என்னோட சொந்தக்காரர் வேலைப் பார்த்துட்டு இருந்தார். பணம் கட்டுறதும் கம்மியா இருந்துச்சு. சரி, துபாய் போலாம்-னு எல்லா வேலையும் பார்த்துகிட்டு இருந்தேன். இந்த விஷயம் எப்படியோ, என் அம்மாவோட அண்ணனுக்கு தெரிஞ்சிடுச்சு. அவர் சிங்கப்பூர்-ல வசிக்கிறார். அங்கயே PR வாங்கி செட்டில் ஆகிட்டாரு. 2001-லேயே அவரு PR வாங்கிட்டாரு. (‘இப்போ வாங்குறது-லாம் ரொம்ப கஷ்டம்-ங்க’ என்று சொல்லி சிரிக்கிறார்). சில குடும்ப பிரச்சனைகளால அம்மாவும், மாமாவும் சில வருஷமா பேசிக்காம இருந்தாங்க. நானும் பேசினதில்ல.

ஆனா, நான் துபாய் போக ஏற்பாடு பண்றேன்-ங்குறத ஊர்ல யார் மூலமாகவோ தெரிஞ்சிக்கிட்டு, உடனே அம்மாகிட்ட ஃபோன் பண்ணி பேசினார். அப்புறம், அவரு மூலமா நான் சிங்கப்பூர் வேலைக்கு போனேன். மாமா அங்க இருந்ததால, எனக்கு செலவு ரொம்ப ஆகல. ஆனா, வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. டேபிள் துடைக்குறதுல இருந்து, Files பாக்குறது வரைக்கும் எல்லா வேலையும் பார்த்தேன்.

சிங்கப்பூரை பொறுத்தவரை நம்ம முதலாளிய impress பண்ணிட்டோம்-னா நம்ம வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அப்படித்தான் நான் வளர்ந்தேன். ‘Overtime சரவணன்’-னு என்னோட சக ஊழியர்கள் சொல்லும் அளவுக்கு ஓவர்டைம் வேலை பார்ப்பேன். முதலாளி ஒன்னு சொல்றதுக்கு முன்னாடி அதை செஞ்சு முடிச்சிடுவேன். அவர் அந்த வேலையை என்கிட்ட சொல்லும் போது, ‘அப்பவே அதை முடிச்சிட்டேன் சார்’ என்று நான் சொல்வதைக் கேட்டு அவர் முகம் மலரும் பாருங்க. அந்த ‘மலர்ச்சி’ தான் என்னோட ‘வளர்ச்சி’.

டிக்கெட்டே எடுக்காமல் 3000 கிலோமீட்டர் விமான பயணம்.. 9 வயது சிறுவனின் “அப்பாட்டக்கர்” வேலை – போட்டிப்போட்டு பேட்டியெடுக்கும் ஊடகங்கள்

வேலைக்கு சேர்ந்த போது, என்ன சம்பளம் வாங்கினேனோ, அதை விட மூன்று மடங்கு சம்பளத்தை 15 மாசத்துல வாங்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு பைசா அனாவசியமா செலவு பண்ணல. எனக்கு தேவையானது போக, மிச்சத்தை ஊருக்கு அனுப்பினேன். இப்படியே 5 வருஷம் போச்சு.

இதுக்கு இடையில, கனிக்கு கல்யாணம்-னு அம்மா ஃபோன் பண்ணி சொன்னாங்க. அன்னைக்கு மட்டுமே, வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு ரூமுக்கு வந்துட்டேன். அழக் கூடாது-னு எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. முடியல அழுதுட்டேன். அப்படி அழுதது நல்லதா போச்சு.. எப்போ அவங்க கழுத்துல வேற ஒருத்தர் தாலி ஏறணுச்சோ, அந்த நிமிஷமே, மனசுல இருந்த எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டேன்.

ஆனால், மனசுக்குள்ள ஒண்ணே ஒன்னு மட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு.. ‘சம்பாதிக்கவே துப்பு இல்லாத உங்க பையனுக்கு, என் பொண்ணு கேட்குதா?. அப்படி கேட்ட அந்த நல்ல உள்ளத்துக்கு முன்னாடி ஏதாவது செஞ்சு காட்டணும்-னு தோணிட்டே இருந்துச்சு. அந்த கேள்விக்கு வட்டியும் முதலுமா, நான் கொடுத்த பதில், 40 லட்சத்துக்கு நான் கட்டுன வீடு தான். அவரு வீடு பக்கத்துல-ங்குறதால ரொம்ப வசதியா போச்சு. நார்த் இந்தியாவுல இருந்து வீட்டுக்கு கல்லு பதிக்க இறக்குனேன். எல்லாத்தையும் பக்கத்துல இருந்தே அவர் பார்த்தார்.

என்னோட ஒரே குறிக்கோள், அவருடைய வீட்டை விட, நான் கட்டும் வீடு, ஒரு அடியாவது உயரமா இருக்கணும்-ங்குறது தான். அதை செஞ்சு முடித்தேன். அவரு வீட்டு மாடில நின்னு பார்த்தால் கூட, என் வீட்டை அண்ணாந்து தான் பார்க்கணும். ஆனா, அப்போ கூட எனக்கு அவரு மேல கோபம் வரல. அன்னைக்கு அவரு அந்த வார்த்தையை சொல்லலைனா நான் எப்படி இருந்திருப்பேன்.. என்னவாகி இருப்பேன்னு கூட எனக்கு தெரியல. சில சமயம்.. சிலர் நம்மை புறக்கணிப்பது கூட நல்லது தான். ஏன்னா, அந்த புறக்கணிப்பு அவங்களுக்கும் நல்லதா போயிடும்.. நமக்கும் நல்லதா அமைஞ்சிடும். இப்போ கனியும் சந்தோஷமா இருக்கா… நானும் நிம்மதியா இருக்கேன்” என்றார்.

“சரி..உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கேட்டதற்கு, “கல்யாணம் பண்ணிக்க தோணல சார்!” என்று சரவணன் நமது பேட்டியை முடித்த போது, அவரது முகத்தில் அத்தனை நேரம் இருந்த ஆர்வம், மகிழ்ச்சி, திருப்தியை காணவில்லை!.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts