TamilSaaga

இந்த உலகில் நான் வியக்கும் ஒரே “சூப்பர் ஸ்டார்” லீ குவான் யூ – ரஜினிகாந்த் பெருமிதம்

கருப்பாக இருந்தால் திரையுலகில் நிலைத்து நிற்கமுடியாது என்ற ஒரு கோட்பாட்டை சும்மா சுக்குநூறாக உடைத்தவர் தான் சிவாஜி ராவ் கெய்க்வாட். சுமார் 46 ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகை தனது மாயக்கட்டில் வைத்திருக்கும் ஒரு மாயாவி. “ஒளிரும் நட்சத்திரம்” என்ற பொருள்படும் பெயரை முழு நிலா நாளன்று தனது குரு நாதர் இயக்குனர் சிகரம் பாலசந்தர் அளிக்க அன்று முதல் ரஜினிகாந்த் என்ற பெயரோடு வலம்வரும் அந்த மாயாவிக்கு வயதோ 71. சின்ன கண்கள், பரட்டை தலை, கருத்த மேனி என்று சினிமா உலகம் அதுவரை கண்டிராத ஒரு அற்புதம், அவர் அபசுவரத்தில் முளைத்த அபூர்வ ராகம். அரசியல் களத்தில் அவர் மீது ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கலையுலகில் இவரே முடிசூடிய மன்னன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிரடி : கட்டுக்கட்டாக சிக்கிய பெட்டிகள், இரு “வெளிநாட்டு நபர்கள்” கைது – உள்ளே இருந்தது என்ன?

உலகே வியக்கும் சூப்பர் ஸ்டார்கள் கூட இவரை தங்களின் குருவாக பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2010ம் ஆண்டு, இயக்குநர்கள் சங்கம் தங்களுடைய 40வது ஆண்டு விழாவை கொண்டாடியது. அந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க பல்வேறு முன்னணி நடிகர்கள் அதில் கலந்துகொண்டு பேசினார்கள். அதில் முக்கியமான ஒரு நிகழ்வு தான் இயக்குநர் சிகரம் பாலசந்தர் தனது சிஷ்யன் ரஜினிகாந்திடம் வெகு சகஜமாக உரையாடியது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த விளங்கினாலும் தனக்கு நடிகனாக உயிர்கொடுத்த குருநாதர் K.B முன் இருகை நுனியில் பவ்வியமாக அமர்ந்திருந்து அவருடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார் அவர்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த நேர்காணலில் சரியாக 21வது நிமிடம் கடந்தபோது பாலச்சந்தர் அவர்கள் ரஜினிகாந்திடம் சினிமா உலகை தவிர பிற துறையில் உள்ள சூப்பர் ஸ்டார்களில் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டபோது சற்றும் தாமதிக்காமல், யோசிக்காமல் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அவரை வணங்குகிறேன் என்று கூறினார். உண்மையில் சூப்பர் ஸ்டார்களே ரசிக்கும் ஒரு மாமனிதனாகத் தான் வாழ்ந்திருக்கிறார் நவின சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ.

1954-ம் ஆண்டு பிரிட்டன் கட்டுப்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்கு நடத்தப்பட்ட முதல் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் 5 ஆண்டுகள் கழித்து 1959-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2-வது தேர்தலில் 51 இடங்களில் 43 இடங்களில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக பொறுப்பேற்றார் மக்கள் செயல் கட்சியின் நிறுவனத் தலைவர் லீ குவான் யூ. யாரும் எதிர்பார்க்காத விதமாக 1961-ல் மலேசிய பிரதமர் TUNGU ABDUL RAHMAN-னிடம் இருந்து மக்கள் செயல் கட்சிக்கு அழைப்பு வந்தது. சிங்கப்பூர், மலேசியா, புருனாய் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய மலேசிய கூட்டமைப்பு உருவாக்க அவர் ஆலோசனை வழங்கினார்.

1963-ல் உதயமானது மலேசிய கூட்டமைப்பு, ஆனால் எதிர்பார்த்ததைப் போல இந்த மலேசிய கூட்டமைப்பு சிங்கப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் மலேசியாவிற்கு சிக்கல்கள் இருந்தன. இதன் விளைவாக போர் மேகங்கள் இருநாடுகளையும் சூழ, இறுதியில் இரண்டே ஆண்டுகளில் தனிநாடாக உருவெடுத்தது சிங்கப்பூர்.

தனிதேசமாக சிங்கப்பூர் உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. “பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்!” என்று சொன்ன பிரதமர் லீ குவான் யூ, சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். கதை முடிந்தது என்று எண்ணிய போது, மீண்டு எழுந்து வந்தார் லீ. இங்கிருந்துதான் இன்று நாம் காணும் நவீன சிங்கப்பூரின் கதையே ஆரம்பமாகிறது. யார் இந்த லீ குவான் யூ என்ற கேள்விக்கு சிங்கப்பூரின் தந்தை என்ற ஒன்றை வார்த்தை நிச்சயம் பதிலாகாது.

“வளர்ச்சி பாதையில் சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி” – எதிர்வரும் ஆண்டிலும் இது தொடருமா?

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts