சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தீமிதி திருவிழாவானது சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். என்னதான் சிங்கப்பூரில் நம் மக்கள் ஸ்டைலாக வாழ்ந்தாலும் பக்தி என்று வரும் பொழுது நம்மூரில் உள்ளது போலவே, மிகவும் கவனமாக விரதம் இருந்து தீயில் இறங்குவதை பார்க்கும் பொழுது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை காண்பதற்காக ஏராளமான சிங்கப்பூர் மக்களும் திரண்டு வருவது வழக்கம். சிங்கப்பூரில் வசிக்கும் ஏராளமான தமிழ் மக்கள் இந்த திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்வது உண்டு.
இந்நிலையில் இந்த ஆண்டு தீமிதி திருவிழாவானது நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ மிதி திருவிழா தொடர்பான பூஜைகள் ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து தொடங்கும் எனவும், அன்றைய தினம் முதல் முதலாக கொடி ஏற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்களான அங்கப்பிரதட்சணம், பால்குடம் தூக்குதல், பூக்குழி இறங்குதல் போன்ற வேண்டுதல்களுக்கு முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவானது செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலேயே ரசீதுகள் வழங்கப்படும் எனவும் கோவிலில் நேராக வழங்கப்படாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண் பக்தர்கள், ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து பூக்குழி நிகழ்விற்கு வர வேண்டும் எனவும் நேரடியாக கோவிலுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை திருவிழா தொடர்பாக நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வமான youtube மற்றும் facebook தளங்களில் நேரடி அலைகளாக ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூக்குழி இறங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை 62234064 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் இந்த ஆண்டு திருவிழாவானது கலைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.