TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அவர்களது வாழ்க்கை வரமா? சாபமா?

நமது சிங்கப்பூர், பன்முக திறமையும் பல இனங்களை சேர்ந்த மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழும் ஒரு அழகிய தீவு நாடு. தொழில்முறை வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நமது நாடு பல நாட்டு தொழிலாளர்களுக்கும் சிறந்த ஒரு நாடாக விளங்குகிறது. 2019ம் ஆண்டு வெளியான தரவுகளின் அடிப்படையில் சுமார் 2.19 மில்லியன் அளவிற்கு பிற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் சிங்கப்பூரில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

மனிதவள அமைச்சக தரவுகளின்படியும், கடந்த டிசம்பர் 2020ம் ஆண்டு வெளியான நிலவரப்படியும் சிங்கப்பூரில் EP வைத்திருக்கும் 1,77,000 பேர் உட்பட 1,231,500 வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதே போல அண்டைநாடான இந்தியாவை பொறுத்தவரை சிங்கப்பூரில் இந்திய தொழிலாளர்களின் விகிதம் 2005 முதல் 2020 வரை 13 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக, இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி தங்கள் தாய்மண்ணை விட்டுவிட்டு பல்லாயிரக்கணக்கான மயில்கள் கடந்து வந்து பணிசெய்யும் இந்த பணியாளர்களுக்கு அவர்களுடைய இந்த வாழக்கை ஒரு வரமா? அல்லது சாபமா? என்பதை இந்த பதிவில் காணலாம்.

வரமா ?

சிங்கப்பூர் வரும் பல நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் பல கனவுகளோடு இங்கு வருகின்றனர். சொந்த ஊரில் கடன் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சமாளிக்க இந்த வெளிநாட்டு வேலை மிகுந்த உதவியாக இருக்கும் என்று கருதுகின்றனர். அதேபோல சிங்கப்பூர் வந்து, எந்தவிதமான தவறான காரியங்கள், அற்ப ஆசைகளில் தங்களை கவனத்தை செலுத்தாமல் நல்ல முறையில் உழைத்து ஆயிரக்கணக்கான வெள்ளிகளை தங்கள் குடும்பத்திற்கு அனுப்பி அவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழ்கின்றனர்.

சிங்கப்பூரை பொறுத்தவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தகுந்த மரியாதையும் சிறந்த சேவையும் அளித்து வருகின்றது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஊழியர்களுக்கு தேவையான சட்ட பாதுகாப்பையும் வழங்குகிறது. ஆகவே பிற நாடுகளில் இருந்து வரும் பணியாளர்கள் சிறந்த முறையில் உழைத்து பணத்தை சேமித்து தங்கள் கனவுகளை மெய்யாக்கி வருகின்றனர்.

சாபமா ?

எத்தனை ஆனந்தமாய் வெளிநாடுகளில் வேலை செய்தாலும் தாய்மண்ணை போல ஒரு சொர்கம் இல்லை என்று பலரும் நினைப்பதும் உண்டு. என்னதான் பணத்தை குடும்பங்களுக்கு வாரி இறைத்து அவர்கள் மகிழ்வதை காணொளிகளாக கண்டாலும், அவர்களுடன் இருந்து அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது.

அருமையான Hitech வாழ்க்கை, கைநிறைய சம்பளம் என்றாலும் குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரத்தை செலவிடமுடியாத வாழ்க்கை அர்த்தமற்றதாக உள்ளது. உழைத்து களைத்து ஒரு கட்டத்தில் நாடு திரும்பும்போது, தொலைத்த அந்த வாலிப வாழ்க்கை பலருக்கு கனவாகவே மாறிவிடுகிறது. வெளிநாடுகளில் அதிக அளவு சம்பளம் என்றபோதும் அதை முழுமையாக அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

சரி வெளிநாட்டு வாழ்க்கை என்பது வரமா அல்லது சாபமா என்பது குறித்த கருத்தை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறோம். உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் பதிவிடுங்கள்.

Related posts