சிங்கப்பூருக்கு வருகை தந்த தர்மபுரி ஆதீனத்தின் தலைவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த சுவாமிகள் அவர்கள் சிங்கப்பூர் கோயில்களின் தூய்மை, பராமரிப்பு மற்றும் சிங்கப்பூர்வாழ் தமிழர்களின் ஒற்றுமையை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். மேலும் ஒற்றுமை கட்டுக்கோப்பு ஆகிய இரண்டிலும் சிங்கப்பூர் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கின்றது என்றும் ஆலயங்களை கட்டி காப்பதிலும், நிர்வாகம் செய்வதிலும் சிங்கப்பூரின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர் என்று தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் சிங்கப்பூரை பற்றி ரசனையாக கூறியவர், பல வண்ண பூக்களின் ஒற்றுமையோடு மாலை தொடுத்தால் தான், அழகான மாலை கிடைக்கும் என்றும் அதுபோல குடும்பம், அலுவலகம், பள்ளிகள் போன்றவை ஒழுங்குடன் இயங்குவதற்கு ஒற்றுமை அவசியம் எனவும் குறிப்பிட்டு காட்டினார். அதற்கு எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் கோவில்களின் நிர்வாகம் உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். சிங்கப்பூர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் ஓதுவராக உள்ள நாதன் என்பவர், தர்மபுரி ஆதீனம் அவர்களின் மாணவராவார். இவர் சீனப்பெண் வருவதற்கு தேவார பாடல்களை, திறம்பட மற்றும் தெளிவாக சொல்லிக் கொடுத்ததன் மூலம் புகழ்பெற்றவர் ஆவார். அவரது திறமையை எடுத்துக்காட்டி பாராட்டி பேசினார்.
2016 ஆம் ஆண்டு இவர் ஆதீனமாக பதவி ஏற்ற பின்பு, கடல் கடந்து பயணம் செய்த முதல் நாடு சிங்கப்பூர் என தெரிவித்தார். பழங்காலத்தில் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் சிங்கப்பூர், பர்மா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று, அங்கு தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு கோவில்களை அமைத்து நெறியுடன் வழிபட்டதை எடுத்துக் கூறினார். மேலும் சிங்கப்பூரில் அவர்கள் ஈட்டிய செல்வத்தை வைத்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு, திருப்பணிகள் மேற்கொள்ள உதவியதையும் எடுத்துக் கூறினார்.