சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) இன்று சனிக்கிழமை காலை (மே 28) செம்பவாங்கில் உள்ள தொழில்துறை கட்டிடமான Nordcom IIல் ஏற்பட்ட இரசாயன கசிவை அணைக்க விரைந்தது. இன்று காலை 7.15 மணியளவில் 2 Gambas Crescentல் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததாக SCDF தனது Facebook பதிவில் கூறியுள்ளது.
SCDF தீயணைப்பு வீரர்கள் கெமிக்கல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி, தரைத்தளத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் குளோரின் வாயு இருப்பதைக் கண்டறிந்தனர்.
அறையைச் சுற்றியுள்ள நீராவிகளை நீர்த்துப்போகச் செய்ய தீயணைப்பு வீரர்கள் வாட்டர் ஜெட் ஒன்றைப் பயன்படுத்தினர். அறைக்குள் நீராவிகளைக் கட்டுப்படுத்த இரண்டு மின்விசிறிகளும் பயன்படுத்தப்பட்டன என்றது SCDF.
சம்பவத்தின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த வளாகத்தில் இருந்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர். இன்று காலை 10 மணிக்கு கிடைத்த தகவலின்படி யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது SCDF. குளோரின், தண்ணீரில் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படுகிறது மற்றும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீருக்கான துப்புரவு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
அதிக அளவு குளோரின் வாயு வெளிப்பட்டு அதை மக்கள் உள்ளிழுக்கும்போது குமட்டல், வாந்தி, மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.