பிள்ளைகளின் ஆசைக்காக அவர்கள் எதை கேட்டாலும் செய்கின்ற ஒரு நிலையில் தான் தற்கால பெற்றோர்கள் உள்ளனர் என்றால் அது சற்றும் மிகையல்ல. ஆனால் அவர்கள் அப்படி செய்வது பல சமயங்களில், அந்த பிள்ளைகளின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டுவருகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் குடும்பத்திற்காக உழைக்கும் தந்தைகள் அவர்களின் மகனோ, மகளோ எது கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் கேட்ட பணத்தை அனுப்பும் நிகழ்வுகள் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
இந்த வரிசையில் கடலூரை சேர்ந்த ஒரு மாணவனின் பரிதாப சாவு தற்போது இணைந்துள்ளது, அண்டை நாடான இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நகரம் தான் கடலூர். பிரசாந்த் என்ற அந்த மாணவனின் தந்தை தற்போது உயிரோடு இல்லை என்றபோதும் நமது சிங்கப்பூரில் அவர் பணி செய்து வந்த காலத்தில் கஷ்டப்பட்டு உழைத்த காசை தனது ஒரே மகனுக்காக நல்ல முறையில் சேமித்து வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட தாயின் அரவணைப்பில் பிரசாந்த் வளர்ந்து வந்துள்ளார்.
ஒரே செல்ல மகன் என்பதால் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் தாய், அண்மையில் தனது மகன் ஆசைப்பட்டு கேட்டான் என்பதற்காக சுமார் 2.78 லட்சம் (இந்திய ரூபாய்) செலவு செய்து ஒரு பைக்கை வாங்கிக்கொடுத்துள்ளார். புது வண்டி கிடைத்த சந்தோஷத்தில் பிரசாந்த் அதை தனது நண்பனிடம் காட்ட தொழுதூர் என்ற இடத்தை நோக்கி தலைக்கவசம் இல்லாமல் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது ஒரு சாலை வளைவில் வேகத்தை குறைக்காமல் வண்டியை திருப்ப, அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி பிரசாந்த் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
பிரசாந்த் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு B.Tech படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு கணவர் சேமித்த காசை, மகன் கேட்கின்றான் என்ற ஒரே காரணத்திற்காக கொடுத்த தாய் இன்று அந்த மகனையும் இழந்து தனிமையில் தவித்து வருகின்றார். மகனுக்கு அந்த பைக்கை வாங்கிக்கொடுத்து இன்னும் இரண்டு நாள் கூட முடியவில்லை என்று கூறி அந்த தாய் அழுத காட்சி மனதை உலுக்கியது.