கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்றப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு மக்கள் வலியுறுத்திய நிலையில் நமது அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
“இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று MFA தெரிவித்துள்ளது.
“அவர்கள் போராட்டங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை, நீண்ட கால மின்தடை, அதீத எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எரிபொருள் வாங்க வரிசையில் நின்றபோது பல பொதுமக்கள் இறந்த அவலமும் அங்கு ஏற்பட்டுள்ளது.
பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல்போனதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடந்த சனிக்கிழமை ராஜபக்சேவின் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 13ம் தேதி ராஜபக்சே ராஜினாமா செய்வார், அதே நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க அனுமதிக்கும் வகையில் பதவி விலகுவதாகக் கூறினார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.