TamilSaaga

சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர்.. சிங்கப்பூரிலும் பிரதமர் லீக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் – ஐந்து மணிநேரத்தில் ஆளைத்தூக்கிய போலீஸ்

நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு எதிராக வன்முறையை தூங்கும் வகையில் பேசியதாக சந்தேகிக்கப்படும் 45 வயது நபர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று சிங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரதமருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான பதிவில், CNA செய்தி நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடந்த விசாரணையில் மத்திய போலீஸ் பிரிவு அந்த முகநூல் பயனரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். புகார் அளிக்கப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு மடிக்கணினி, ஒரு டேப்லெட் மற்றும் நான்கு மொபைல் போன்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வன்முறையைத் தூண்டும் எந்தவொரு மின்னணுப் பதிவையும் உருவாக்குதல் அல்லது அது தொடர்புடைய குற்றத்திற்காக எவரும் கைதுசெய்யப்பட்டு குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு ஐந்தாண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமருக்கு எதிராக நடந்த இந்த நிகழ்வில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts