சிங்கப்பூரில் கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் பதிவான வேலை வாய்ப்பு தொடர்புடைய மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் 20 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று உள்துறை இணை அமைச்சர் திரு டெஸ்மண்ட் டான் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 3) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
யியோ சூ காங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யிப் ஹான் வெங் தாக்கல் செய்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த திரு. டான், மேலே குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் மொத்தம் 4,722 வேலை வாய்ப்பு தொடர்புடைய மோசடி வழக்குகள் பதிவாகியதாகக் கூறினார். இவர்களில், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அது மோசடி செய்யப்பட்ட இளைஞர்களின் விகிதத்தை விட மிகக் குறைவு.
இளைய தலைமுறையினர் தான் அதிக அளவில் வேலைவாய்ப்பினை தேடுகின்றனர் என்பதாலும் இணைய தேடல் அவர்களிடையே தான் அதிக உள்ளது என்பதாலும் இந்த மோசடி சதவிகிதம் நம்மை ஆச்சர்யப்படுத்தவில்லை என்றார் அவர். வீட்டிலிருந்து எளிதாக வேலை செய்யும் வேலைகள் மீது மிகுந்த ஆர்வம்கொண்ட இளைஞர்கள் மீது குறிவைப்பதன் மூலம் இத்தகைய மோசடிகள் செயல்படுகின்றன, என்றும் அவர் கூறினார்.
பல மோசடி குழுக்கள் மோசடி செய்வதற்கென்றே மொபைல் செயலிகளை உருவாக்குகின்றனர், அவை பார்ப்பதற்கு உண்மையான செயலி போலவே தோற்றமளிப்பதாகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், இந்த Appsஐ பதிவிறக்கம் செய்து, புதிய கணக்குகளைத் திறக்கவும், பணத்தைப் பரிமாற்றம் செய்யவும், பொருட்களை வாங்கவும் அல்லது இடுகைகளைக் கிளிக் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்முலம் அவர்கள் கமிஷன்களைப் பெறுவார்கள் என்ற வாக்குறுதியும் அளிக்கப்படுகிறது.
ஆகவே இதுபோன்ற போலி விஷயங்களுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என்று அமைச்சர் கூறினார், இந்தக் கொடுமையை நிவர்த்தி செய்யவும், இதுபோன்ற மோசடிகளுக்கு மக்கள் இரையாகாமல் தடுக்கவும், பொதுக் கல்வி முக்கியமானது என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில் அதிகாரிகளின் அமலாக்க முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார் அவர்.