இந்திய விமான பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
பெருந்தொற்று காரணமாக இந்தியா – சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்து சேவை கணிசமாக குறைந்திருந்த நிலையில், இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அதிக விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்பட உள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்திருக்கிறது. .
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விரைவில் இந்தியாவிற்கு அதிக விமானங்களை இயக்க உள்ளோம். இந்திய விமான சந்தை மிகவும் வலுவாக உள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் அட்டவணைகளில் இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த தகவல் இடம்பெறும்.
அக்டோபர் மாதம் குளிர் கால அட்டவணையாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு அடுத்த ஆண்டு அட்டவணையாக இருந்தாலும் சரி, இந்தியாவுக்கு சிங்கப்பூரிலிருந்து அதிக விமானங்கள் இயக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து வாரத்திற்கு 73 விமானங்களை இயக்கி வருகிறது. அதேபோல் அமிர்தசரஸ், கோவை, ஐதராபாத், திருவனந்தபுரம், திருச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 6 நகரங்களில் இருந்து 38 விமானங்களை இயக்கி வருகிறது.
பெருந்தொற்று பாதிப்புக்கு பின் 75% விமானங்களே இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 100% இயக்கப்படும். மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஏர்பஸ் ஏ380 விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், அதேபோல் புதிய போயிங் 737-8 தயாரிப்பு விமானங்களை ஹைதராபாத், கொச்சி மற்றும் கொல்கத்தாவில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இயக்க இருப்பதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.