TamilSaaga

மிகுந்த மன அழுத்தம்.. “சிங்கப்பூர் விடுதிகளில் தனிமையில் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – Yale-NUS ஆய்வின் முடிவு

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், இங்கு வேலைசெய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இயக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தபோது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றனர். குறிப்பாக தங்குமிடங்கள் அல்லது வேலை செய்யும் இடங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையங்களை அணுக அனுமதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தங்குமிடங்கள் அல்லது அவர்களது அறைகளில் முழுமையாக காலத்தை நகர்த்திய தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமானது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பெருந்தொற்று பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த தனிமைப்படுத்துதல் பயனுள்ளதாக இருக்கும் என்றபோதும். இது அதிகரித்த மனநலச் சுமைக்கு தொழிலாளர்களை ஆளாகிறது என்று Yale-NUS கல்லூரியில் உளவியல் கற்பிக்கும் உதவி பேராசிரியர் ஜீன் லியு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வின் முடிவுகளை கூறியுள்ளது. மேலும் அக்குழுவின் அந்த அறிக்கை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி அன்று இடம்பெயர்வு மற்றும் ஆரோக்கிய இதழில் வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் அரசு தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி இரண்டு விடுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. இதனால் சுமார் 20,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர்.

ஏப்ரல் 21 அன்று, தங்குமிடங்களில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாமல் அவர்களின் தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மேலும் அந்த நேரத்தில், 7,266 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) நிலவரப்படி, மொத்தம் 54,815 தொழிலாளர்கள் இதுவரை பெருந்தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 2020ல் பெரும்பாலான தங்குமிடங்களில் தொற்றுக்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டபோதும் இன்றளவும் தொழிலாளர்களின் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. 1000க்கும் அதிகமான தொழிலாளர்களிடம் நேரடியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த ஆய்வின் முடிவுகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு ஆன்லைன் அல்லது நேரடியாக கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டு அவர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

Related posts