TamilSaaga

“சிங்கப்பூர், பொழுதுபோக்கு அம்சங்களில் தலைசிறந்த நகரம்” : ஆமா இங்கெல்லாம் போயிருக்கிங்களா சிங்கப்பூர்ல?

சிங்கப்பூர் உலகின் மிகவும் விலை உயர்ந்த நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனாலும்கூட பல்வேறு சிறந்த அனுபவங்களையும், மகிழ்ச்சியான பொழுதுகளையும் தரக்கூடிய முதன்மை நகரமாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்கப்பூர் மிகவும் சிறப்பான, மிகவும் சுத்தமான, மிகமிக சாத்தியக்கூறுகள் நிறைந்த, மிகச்சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுக்கான, தலைசிறந்த நகரம் .

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் கைதான நபர் – CNB அதிரடி

உயரமான மொட்டைமாடி நீச்சல் குளங்கள், உலகத்தின் முதல் இரவு நேர பூங்கா, பல நூற்றாண்டு பழமையான கோயில்கள், பூமியிலேயே சிறப்பான உணவு வகைகள், அசாதாரணமான முறையில் கட்டடங்களுக்குள் அமைந்த பசுமை மிகு தோட்டங்கள், அண்ணாந்து பார்க்கக் கூடிய எழில்மிகு கட்டிடங்கள், உலகத்தரம் வாய்ந்த பல்வேறு அரங்கங்கள், கடைவீதிகள், பழமையும் புதுமையும் கலந்த நவீனத்தின் கண்கவர் கலவை என சொல்லில் வடிக்க முடியாத அற்புதங்களின் நகரம் சிங்கப்பூர்! சமீபகாலமாக உலகத்தை உலுக்கிய தொற்று நோய்க்கு பிறகு ஏற்கனவே சுத்தமான சிங்கப்பூர் மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள்,  சிறப்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனது சுற்றுலாவின் சொர்க்கவாசல்களை மீண்டும் திறக்க ஆரம்பித்திருக்கிறது. அவைகளில் சிங்கப்பூர் போனால் இதையெல்லாம் செய்யாமல் வந்து விடாதீர்கள் என்று சிறப்பாக சொல்லக்கூடிய சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .

இந்த கட்டுரையின் ஆசிரியர் ஆரா. அருணா

விரிகுடா தோட்டங்கள்

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளம் இது. மிக அதிக தாவரங்களின் வகைகள், அவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற விதம், எல்லாமே பிரமிக்க வைக்க கூடியவை. காலார நடக்க மரத்தடி நிழல் தொடங்கி, 114 அடி உட்புற நீர்வீழ்ச்சியின் அமைப்பு வரை ‘அடடே’ போட வைக்கும் அற்புதமான இடம் இது!

சிங்கப்பூரின் தேசிய கண்காட்சி:

 தென்கிழக்கு ஆசியாவின் நவீன கலைகளின் ஒட்டுமொத்த மிகப்பெரிய தொகுப்பாக இந்த நேஷனல் கேலரி அமைந்துள்ளது.ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள், சிங்கப்பூரின் சிட்டிஹால் மற்றும் நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றம் எனும் இரண்டு அழகான தேசிய நினைவு சின்னங்களுக்கு இடையில் பரவியுள்ளது இந்த கலையகம். ஒரு நாள் முழுவதும் சுற்றித் தீர்க்கலாம் என்றாலும், கூட்டங்களையும் வரிசைகளையும் தவிர்த்து நிதானமாக சுற்றிப் பார்க்க வேண்டுமானால் கண்டிப்பாக நீங்கள் வாரநாட்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜுவல் சாங்கி விமான நிலையம்:

 சுற்றிப் பார்ப்பதற்காக விமான நிலையம் செல்ல வேண்டும் என்பது வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் ஜுவல் சாங்கி விமான நிலையம் வெறுமனே சாதாரண விமான நிலையம் அல்ல. கட்டிடக்கலைஞர் மோஷே சாஃப்டியால் வடிவமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு சுற்றுலாத்தலம் தான் இந்த விமான நிலையம் என்று கூட சொல்லலாம். ஷாப்பிங், உணவு, பொழுதுபோக்கு, களியாட்டங்கள், ஏழு அடுக்குன் உயரமான உட்புற நீர்வீழ்ச்சி, அழகான நடைபாதைகள், பசுமை நிறைந்த உட்புற காடு, 300-க்கும் மேற்பட்ட கடைகள் என இந்த விமான நிலையத்தில் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை எனலாம்.

புலாவ் உபின் :

அதி நவீன சிங்கப்பூரை பார்த்தவர்களுக்கு அதன் காட்டுப் பக்கத்தை, அதன் மிகப் பழமையான பக்கத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றினால் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு தீவு இது.

ஒரு காலத்தில் கிரானைட் குவாரிகளுக்கு மிகவும் பெயர் பெற்றதாக விளங்கிய இந்த புலாவ் உபின் தீவு அந்த குவாரிகள் 1970களில் மூடப்பட்ட பிறகு ,வேலை வாய்ப்புகள் இல்லாததால் அங்கிருந்த மக்கள் அனைவரும்  வெளியேறிய தொடங்கி  இன்றைக்கு 50க்கும் குறைவான மக்களே  வசிக்கின்ற, ஒரு பழமையான வாழ்க்கை முறையை பின்பற்ற கூடிய பகுதியாக இருக்கிறது.

நீங்கள் இந்த தீவுக்குள் காலடி எடுத்து வைத்தால் பல ஆண்டுகளுக்கு, நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சிங்கப்பூருக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வை நீங்கள் பெறலாம். இந்த இடத்தினை சென்றடையும் வழி கூட பழமையானது தான். சக்கிங் பம்பட்டில் பத்து நிமிடம் சவாரி செய்தால் இந்த தீவிற்கு போய் சேரலாம் .

மெர்லியன் பூங்கா :

 மெரினா விரிகுடாவை ஒட்டி இருக்கக்கூடிய நடைபாதை பூங்கா தான் இந்த மெர்லியன் பூங்கா. பெயரில் உள்ளது போலவே இந்த பூங்காவில் சிங்கப்பூரின் தேசிய சின்னமான மெர்லியன் புராதான உருவத்தின் இருபத்தி எட்டு அடி உயர சிலை உள்ளது. அரை மீன் அரை சிங்கம் என கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சின்னம் சிங்கப்பூரின் தொடக்க காலத்தை ஒரு மீன்பிடி கிராமமாக குறிப்பிடுகிறது. அதேசமயம் ‘சிங்கம் பூரா’ என்று வழங்கப்படுவதற்கு காரணமான சிங்கத்தின் தலையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது இந்த சின்னம். 1972-ல் கட்டப்பட்ட இது சிங்கப்பூரின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஹொவ் பார் வில்லா :

சிங்கப்பூர் என்றவுடன் இன்றைக்கும் கிராமத்து வீடுகள் வரை நினைவில் வரக்கூடியது டைகர் பாம் தைலம் தான். அந்த டைகர் பாம் நிறுவனத்தின் நிறுவனர் அவர்களால் 1930 களில் அமைக்கப்பட்டது இந்த வில்லா. பாரம்பரியமான சீன மதிப்பீடுகளை எடுத்துரைக்கும் விதமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரிவான சிற்பங்கள், வார்ப்பு வடிவங்கள் போன்றவற்றை கொண்டு இந்த வில்லாவை அழகுபடுத்தி இருக்கிறார்கள். இன்றைய நவீன உலகில் இந்த கட்டடம் அதன் வசீகரத்தை இழந்து இருப்பது போல தோன்றினாலும்,  மிக அழகாக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த இடம் ஆசிய கலாச்சார பூங்கா எனும் அளவிற்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் பேராலயம்

சிங்கப்பூர் சிவிக்  மாவட்டத்தின் நடுவில் உள்ள இந்தப் பேராலயம் திருமண கேக் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த மாவட்டத்தின் மிகப் பழமையான கட்டடங்களில் ஒன்றாகும். அதேபோல இதன் வடிவமைப்பு நியோ கோதிக் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பரபரப்பான நகரத்திற்கு மத்தியில் இது ஒரு சரணாலயம் போல் நிற்கிறது. இது சிங்கப்பூரின் மிகப் பெரிய கத்தீட்ரல் மட்டுமல்ல. மிகப் பழமையான ஆங்கிலிக்கன் வழிபாட்டு இல்லமும் ஆகும். இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை பல்வேறு மட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்க கூடிய ஒன்று.

தியான் ஹாக் கெங் :

தியான்  ஹாக் கெங் –  சிங்கப்பூரின் மிகப் பழமையான புத்த கோயிலாக , தெற்கு சீனாவின் பாணியில் கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு ஆணி கூட பயன்படுத்தாமல் கட்டப்பட்டு இருக்கிற ஒரு அழகான ஆலயம் இது. இப்போது அது புதுப்பிக்கப்பட்டு, அதன் டிராகன் பீனிக்ஸ் சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு பார்வைக்கு இருக்கிறது. இங்கே புகைப்படங்கள் எடுக்க முடியாது என்பதால் நேரடியாகச் சென்று தான் இதன் அழகை ரசிக்க வேண்டும்.

செந்தோசா :

சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில், 1236 ஏக்கர் பரப்பளவில் பரவி இருக்கிற ஒரு ரிசார்ட் ஆகும். இது யுனிவர்சல் ஸ்டுடியோ சிங்கப்பூர் மற்றும் மற்றும் எஸ்ஏ கடல்வாழ் உயிரினங்ளுக்கான பூங்கா போன்றவைகளை கொண்டிருக்கிறது.

செந்தூசா  கோல்ப் கிளப் மிகவும் பிரபலமானதாகும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு சுற்றுலா இயந்திரம் .

கிழக்கு கடற்கரை சாலை

கடலே அழகு ! கடற்கரை சாலை இன்னும் அழகு ! சிங்கப்பூர் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? சிங்கப்பூரின் உண்மையான அழகை ரசிக்க மிகவும் சரியான இடம் கிழக்கு கடற்கரை சாலை. இரண்டு மைல் நீளத்திற்கு இருக்கிற இந்த உயிரோட்டமான சாலை வண்ணமயமான பாரம்பரிய கடை வீடுகள், சிறந்த உணவகங்கள், சீன கலாச்சாரத்தை கற்பிக்கும் சில அருங்காட்சியங்கள், கடைகள் என அணு அணுவாக ரசித்து அனுபவிக்கத் தக்கதாக பரவியிருக்கிறது இந்த கிழக்கு கடற்கரை சாலை.

இன்னும் பட்டியலிட ஏராளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பட்டியல் தொடரும் ….நீங்கள் இதெல்லாம் பாக்காம வந்துடாதீங்க9h0

அன்புடன்

உங்கள்

ஆரா அருணா.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts