TamilSaaga
Omicron in Singapore

“ஓமைக்ரான் சிங்கப்பூரில் அதிகம் பரவலாம்; கொரோனாவால் பாதித்தவர்களை மீண்டும் தாக்கலாம்” – சிங்கப்பூர் அரசு நேரடி எச்சரிக்கை

Omicron in Singapore: தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக நம்பப்படும் ஓமைக்ரான் வைரஸ் தான் இப்போது ஹாட் டாபிக். உலக சுகாதார அமைப்பு (WHO) இதைக் கவலைக்குரிய கோவிட் வகையாக பட்டியலிட்டுள்ளது. இதுவரை இந்தியா, அமெரிக்கா உட்பட 30க்கும் அதிகமான நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உஷாரான உலக நாடுகள் ஏகப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

எனினும், இந்த புதிய வகை தொற்று வெளிச்சத்திற்கு வந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், இதன் வீரியம் எந்தளவுக்கு இருக்கும் என்பதற்கான போதுமான சான்றுகள் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், ஓமைக்ரான் குறித்து பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. முதலில், ஓமைக்ரான் தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை எதுவும் ஏற்படுத்துவதில்லை என்று தென்னாப்பிரிக்க ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இந்த சூழலில், ஓமைக்ரான் குறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்டா மற்றும் பீட்டா வகைகளுடன் ஒப்பிடுகையில், ​​இந்த புதிய வகை ஓமைக்ரான் தொற்று அதிகமாகப் பரவக்கூடியதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, கொரோனாவால் முன்பு பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களைக் கூட, இது மீண்டும் தாக்கும் (reinfection) ஆற்றல் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

கடந்த சில தினங்களாக தென்னாப்பிரிக்கா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் இருந்து ஓமைக்ரான் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம். பல்வேறு நாட்டின் வல்லுநர்களிடமும் ஆலோசனை செய்து வருகிறோம். இது நமக்கு ஓமைக்ரான் குறித்த தெளிவை அளிக்கிறது. எனினும், தற்போது வரை ஓமைக்ரான் குறித்த பல கேள்விகளுக்கு நம்மிடம் விடையில்லை என்பதே உண்மை.

இந்த புதிய வகை தொற்று உலகம் முழுவதும் பரவும் சூழலில், சிங்கப்பூரிலும் அதன் பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் என்றே எதிர்பார்க்கிறோம். அதேசமயம், இப்போது நம் வசம் உள்ள தடுப்பூசிகள், இந்த ஓமைக்ரானுக்கு எதிராக வேலை செய்யுமா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை நமது வேக்சின்கள் தடுக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் விரைந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறோம்” என்று அந்த குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts