வெளிநாட்டு வேலை என்பது பலரும் விரும்பி ஏற்கும் ஒரு விஷயம் தான், வெளிநாட்டுக்கு சென்றால் வெகு சில வருடங்களில் நமது குடும்பத்தின் வறுமை அகன்றுவிடும். நாமும் நம் சுற்றமும் நல்ல வாழ்க்கையை வாழலாம் என்ற பல கனவுகளோடு வெளிநாட்டிற்கு தங்கள் சொந்தபந்தங்களை விட்டுவிட்டு கடல்கடந்து செல்கின்றனர் பலர். இதில் பலரது வாழ்க்கை அவர்கள் எண்ணியதை போலவே சிறந்த ஒன்றாக மாறுகிறது. என்ன சொல்லி அழைத்து சென்றார்களோ அதே வேலை, நல்ல சம்பளம், முறையான ஓய்வு, என்று மகிழ்ச்சியாக வாழ, மற்றொரு பக்கம் இந்த வெளிநாட்டு வேலை தன்னுடைய கோர முகத்தை காட்டுகிறது.
இதற்கு இரண்டே காரணம் தான், நாம் செல்லும் வெளிநாட்டு வேலைக்குறித்து முறையாக விசாரித்து செல்லாதது, மற்றொன்று நம்பகமான ஏஜென்ட்களை தேர்வுசெய்யதது. இந்த தவறை செய்ததால் கேள்விக்குறியாகியுள்ளது ராமநாதபுரத்தை சேர்ந்த காதர் மொய்தீன் என்ற தொழிலாளர்களின் வாழ்க்கை. மொய்தீன் ஓட்டுநர் வேலையில் சேர சென்ற ஆண்டு கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார், ஆனால் அதற்கு பதிலாக சவூதி அரேபியா எல்லையில் உள்ள பாலைவன பகுதியில் அவருக்கு ஓட்டகங்களை மேய்க்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது.
காதர் மொய்தீன் வெளியிட்ட வீடியோ
ஓட்டுநர் வேலைக்காக வந்த தன்னை ஒட்டகம் மேய்க்க, சமையல் செய்ய அனுப்புவதாகவும் கண்ணீருடன் காணொளி ஒன்றை whatsapp மூலம் அனுப்பியுள்ளார். அந்த காணொளியில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கழுத்தில் கயிறு கட்டி இருக்குவதாகவும், கொத்தடிமைபோல நடத்தப்படும் தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறும் முதல்வருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார் காதர் மொய்தீன். மேலும் இந்திய அரசு உன்னை காப்பாற்ற வராது என்றும் துன்புறுத்துபவர்கள் கூறுவதாகவும், இங்கயே வைத்து உன் கதையை முடித்துவிடுவோம் என்று மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரவில் நிம்மதியாக உறங்ககூட முடியவில்லை என்றும், விரைந்து தன்னை மீட்குமாறும் கண்ணீர் மல்க அவர் கதறுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான ஏஜென்ட்களை தேர்வு செய்யாமல் செல்லும் பலரின் நிலைமை இதுபோன்ற ரணங்களை அனுபவிக்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றது என்பது கசப்பான உண்மை. விரைவில் இந்திய அரசும் தமிழக அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News Source : Polimer News