சிங்கப்பூரில் ஒரு சுவாரஸ்யம் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தமிழ் சாகா-வுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் இது.
இப்போதுள்ள கொரோனா சூழ்நிலையில், சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் இந்தியாவுக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. அங்கு செல்வது கூட அவ்வளவு சிரமமில்லை. ஆனால், மீண்டும் சிங்கப்பூர் திரும்பி வருவது எளிதான விஷயமல்ல.
இந்த ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சிங்கப்பூர் தனது எல்லைகளை மிக பலமாக அடைத்துள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் நல்ல விஷயங்களுக்கு… ஏன் கெட்ட விஷயங்களுக்கு கூட இந்தியா செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எங்கே, இந்தியா சென்றால், மீண்டும் சிங்கப்பூர் திரும்பி வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இதனால், பலரும் மனஉளைச்சலில் உள்ளனர்.
இந்த சூழலில் தான் சிங்கப்பூரில் பணிபுரியும் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிக சாமர்த்தியமாக செயல்பட்டு இந்த இக்கட்டான காலக்கட்டத்திலும் தனது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். சரவணனுக்கு தமிழகத்தில் அவரது சொந்த ஊரில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஜனவரி 25ம் தேதி அவர்களது ஊரிலேயே திருமணம் நடப்பதாய் இருந்தது.
ஆனால், ஊருக்கு சென்றால் சிங்கப்பூர் மீண்டும் திரும்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்து வைத்திருந்த சரவணன், மாற்று வழியை யோசித்தார். அதாவது, Visiting Visa-வுக்கு அப்ளை செய்த சரவணன், தனது பெற்றோர், மணப்பெண் மற்றும் அவரது பெற்றோர் என மொத்த 5 பேருக்கு மட்டும் VTL திட்டம் மூலம் Visiting Visa-ல் சிங்கப்பூர் அழைத்து வந்துவிட்டார்.
இங்குள்ள பிரபலமான கோவில் ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சரவணனுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் தனது கல்யாணத்தை திட்டமிடப்பட்ட நாளில், அதே முகூர்த்த நேரத்தில் தாலி கட்டினார்.
இப்போது அனைவருக்கும் மேலும் 2 – 3 மாதங்கள் Visiting Visa நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாதங்கள் சிங்கப்பூரிலேயே மனைவியுடன் குடும்பம் நடத்த சரவணன் தயாராகிவிட்டார். அதன் பிறகு மணப்பெண் இந்தியா செல்வாரா, அல்லது இருவரும் சிங்கப்பூரிலேயே தாங்குவார்களா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
கல்யாணம் நடக்குமா, நடக்காதா என்று அனைவரும் கவலை கொண்டிருந்த நேரத்தில், சமயோஜிதமாக செயல்பட்டு, யாரும் யோசிக்காத ஆங்கிளில் யோசித்து, தனது திருமணத்தை குறித்த தேதியில் சரவணன் நடத்தி முடித்திருக்கிறார். இதுவரை சிங்கப்பூரில் எந்தவொரு தொழிலாளரும், Visiting Pass-ல் பெற்றோர்களையும், மணப்பெண்ணையும் வரவைத்து சிங்கப்பூரில் கல்யாணம் செய்து கொண்டது கிடையாது. இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறையாகும்.
சரவணனுக்கு ஏற்பட்டது போன்ற இக்கட்டான சூழல் பல தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டில் ஏற்பட்டிருக்கிறது. திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதனால், பல தொழிலாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். ஆனால், சரவணனோ பிரச்சனையை கண்டு பின்வாங்காமல், அதனை எப்படி சால்வ் செய்வது என்பதை யோசித்து, மாற்று வழி கண்டறிந்து, தீர்வை கொடுத்துவிட்டார்.
ஒருவேளை திருமணம் தான் முக்கியம் என்று சென்றிருந்தால், அவரது வேலைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். வேலைக்கு பயந்து ஊருக்கு செல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் திருமணம் நின்றிருக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் சரவணன் எடுத்த முடிவு, இரு வீட்டாரின் கௌரவத்தை காப்பாற்றியதை விட, அப்பெண்ணின் பெயரை காப்பாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், கிராமங்களில் இன்றளவும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஏதாவது ஒரு காரணத்தால் அது நடைபெற முடியாமல்நின்றுவிட்டால், அதன் பிறகு அந்த பெண்ணின் மீது விழும் கறை, வாழ்நாள் மீது தொடர்ந்து கொண்டே இருக்கும். ராசியில்லாதவள் என்று போகிற போக்கில் முத்திரை குத்திவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, சரவணன் வேலையை விட்டும் செல்லாததால், அவரது நிறுவனத்தின் ஓனரிடமும் நல்ல பெயர் வாங்கி, அவரது ஆசிர்வாதத்துடனேயே திருமணத்தையும் முடித்துவிட்டார்.
Content Source: Nandana Air Travels