சர்வதேச பணமோசடி வலையமைப்புடன் தொடர்புடைய £6,50,000 (S$1.2 மில்லியன்) மதிப்புள்ள 15 தங்கக் கட்டிகளை பிரிட்டனின் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) கடந்த புதன்கிழமை (ஜனவரி 26) பறிமுதல் செய்தது. கடந்த 2020ம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்தில் சிங்கப்பூர் பெண் ஒருவர் அந்த தங்கக் கட்டிகளை தனது கைப் பைகளில் எடுத்துச் சென்றபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு இந்த விசாரணைகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஜென்சியின் கூற்றுப்படி, அந்த பெண் சிங்கப்பூரில் இருந்து வந்து, இந்தியாவின் சென்னைக்கு விமானத்தைப் பிடிக்க ஹீத்ரோ விமான நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “சிங்கப்பூரில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து இந்தியாவில் உள்ள மற்றொரு நகைக்கடைக்கு தங்க கட்டிகளை எடுத்துச் செல்வதாக அவர் முதலில் NCA புலனாய்வாளர்களிடம் கூறினார். ஆனால் சிங்கப்பூரில் இருந்து லண்டன் வந்து பின் சென்னை செல்லும் அவரது விசித்திரமான வழித்தடம் குறித்து அதிகாரிகள் கேட்டபோது, அதற்கு அந்த பெண்ணிடம் எந்த விளக்கமும் இல்லை,” என்று நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“NCA-வின் மேலதிக விசாரணையில், அவர் தங்கத்திற்காக எடுத்துச் சென்ற விலைப்பட்டியல் போலியானது என்றும், அவர் சொன்னது போன்ற ஒரு நகைக்கடை சென்னையில் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த தங்க கட்டிகள் “சதேகத்திற்குரிய வருமானம்” என்று வகைப்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அப்பெண் அவரது பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், தங்கக் கட்டிகள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் செயல்படும் கிரிமினல் பணமோசடி வலையமைப்பைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது என்று NCA கிளைக் கமாண்டர் ஆண்டி நொய்ஸ் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணை பற்றி அறிந்துகொள்ள புலனாய்வாளர்கள் தங்கள் இந்திய சகாக்களுடன் இணைந்து பணியாற்றினர் என்றும் அவர் கூறினார். “குற்றவாளிகள் பணத்தை கடத்துவதற்கு தங்கம் ஒரு எளிமையான பொருளாகும், ஏனெனில் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான தங்கம் அதிக மதிப்பைக் கொண்டிருக்கும்,” என்று அவர் கூறினார். “மோசடி கும்பல் தங்கள் வழித்தடத்தை மறைக்க முயற்சிப்பதற்காக கடத்தல் தங்கத்தை லண்டன் வழியாக நகர்த்த முயன்றதாக நாங்கள் கருதுகிறோம். சென்னை வந்துசேரும்போது இந்திய சட்ட அமலாக்கத்தின் கவனத்தைத் தவிர்க்க அவர்கள் நினைத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.