குடும்பம் மறந்து, பிள்ளைக் குட்டிகளை மறந்து, சுய விருப்பு வெறுப்புகளை மறந்து வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களை சொல்லி மாளாது.
எல்லாவற்றையும் விடுத்து, குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இரவும், பகலும் வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி மலேசியாவில் வேலைப் பார்த்து வரும் பாலசுப்ரமணியம் என்பவரது குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் குமுளூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்ப சூழல் காரணமாக, பாலசுப்ரமணியம் மலேசியாவில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கணவரிடம் தினம் Video Call-ல் பேசுவதற்காகவே மனைவி மீனா புது செல்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதில் தினமும் கணவரிடம் பேசியும் வந்திருக்கிறார். எல்லாம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருக்க, இந்த புது செல்போன் மூலமாக சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுரேஷும், மீனாவும் செல்போன் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பேசி வந்திருக்கின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழக ஆரம்பித்த பிறகு, ‘நானும் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறேன்’ என்று சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
இதற்காக கணவர் பாலசுப்ரமணியம் மாதாமாதம் அனுப்பும் பணத்தில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை, சுரேஷிடம் எடுத்துக் கொடுத்து உதவியிருக்கிறார் மீனா. இவை அனைத்தும் கணவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கிறது.
பணத்தை வாங்கிக் கொண்டு, மீனா கணவர் வேலைப்பார்த்த மலேசியாவுக்கே வேலைக்கு சென்றிருக்கிறார். வெளிநாடு செல்லும் வரை அமைதியாக, சாந்த சொரூபியாக பேசிய சுரேஷின் மாடுலேஷன், வெளிநாடு போன பின்பு வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனா, தான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை திரும்பக் கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த சுரேஷ், “பணம் வேணும்-னா வீடியோ காலில் வா” என்று தெரிவித்திருக்கிறான். அதை நம்பி வீடியோ கால் பேசிய மீனாவிடம், லைவ் Call-ல் ஆடைகளை அகற்றிவிட்டு பேசுமாறு வற்புறுத்தி இருக்கிறான். பணம் வேண்டுமெனில், டிரெஸ் இல்லாமல் பேசு என்று மிரட்டி இருக்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத மீனா, உடனடியாக அந்த தொடர்பை துண்டித்திருக்கிறார்.
ஆத்திரம் அடைந்த சுரேஷ், மீண்டும் மீனாவுக்கு கால் செய்து, “நாம் இருவரும் காதலிக்கிறோம், அதனால் தான் நீ எனக்கு 2 லட்சம் ரூபாய் வெளிநாடு செல்ல பணம் கொடுத்தாய் என்று உன் குடும்பத்தாரிடம் சொல்வேன். உன் வாழ்க்கையை சீரழித்துவிடுவேன். உனது பணமும் திரும்ப வராது” என்று மிரட்டி இருக்கிறான்.
இதனால் பயந்துபோன மீனா, சுரேஷின் பேச்சுக்கு அடிபணிய தொடங்கியிருக்கிறார். அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தும், அவன் சொல்லும் போதெல்லாம் Video Call-ல் நிர்வாணமாகவும் பேசியிருக்கிறார்.
எவ்வளவு தான் பொத்தி பொத்தி வைத்தாலும், ஒருக்கட்டத்தில் மீனாவின் குடும்பத்துக்கு, அவர் யாரிடமோ அடிக்கடி பேசுகிறார் என்பதும், அவருக்காக பண உதவி செய்கிறார் என்பதையும் கண்டறிந்துவிட்டனர். இதனால் விரக்தியடைந்த மீனா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஒரு வீடியோவாக பதிவு செய்து கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார்.
ஆண் நண்பரின் பேச்சைக் கேட்டு வீணாய் போனதாகவும், அவர் சொன்ன விஷயத்தையெல்லாம் தான் செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். “இதனால், விரக்தியடைந்த நான் இப்போ சாகப் போறேன்” என்று கழுத்தில் தூக்கு கயிறை தொங்கவிட்டவாறு இவை அனைத்தையும் பேசி மரண வாக்குமூலம் அளித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மீனா.
மனைவியை பற்றி உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று அனைவரும் தவறாக பேசியதால், அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியம், மீனாவின் இறப்புக்கு கூட வரவில்லை. இதனால், மீனாவின் உடலை அவரது உறவினர்களே தகனம் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஊருக்கு வந்த பாலசுப்ரமணியம், மீனா பயன்படுத்திய மொபைலை ஆய்வு செய்திருக்கிறார். அதிலிருந்த வீடியோக்களை கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
உடனடியாக சுரேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக லால்குடி டிஎஸ்பியிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, மலேசியாவில் வேலைப்பார்க்கும் சுரேஷ் மற்றும் அவனது பெற்றோர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுரேஷுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.