TamilSaaga

இட்லி வித்தா தான் வீட்டுல அடுப்பெரியும்.. எதிர்நீச்சல் போட்டு தங்கைகளுக்கு தகப்பனாய் வாழும் “தேன்மொழி” – அசராத உழைப்பால் இன்று ஊரே வியக்க குடும்பத்தை உச்சிக்கு கொண்டுச் சென்ற ‘குலசாமி’!

ஒரு குடும்பத்தின் நல்லது, கெட்டது, வளர்ச்சி, வீழ்ச்சி, மரியாதை, அவப்பெயர் என அனைத்தும் விடிவது அந்த குடும்பத்தின் தலைப்பிள்ளை மீது தான். அது எழுதப்படாத விதி. அது ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி.. பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி. தந்தைக்கு பிறகு அந்த குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு அவரையேச் சாரும்.

அப்படி, ஒரு குடும்பத்தின் மூத்த மகளாய் பிறந்து, தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து, இன்று யாருமே கற்பனை கூட செய்து பார்க்காத உயரத்துக்கு தன் குடும்பத்தை கொண்டுச் சென்றுள்ளார் தேன்மொழி.

ஆம்! தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி, மிக மிக வறுமையான குடும்பத்தின் பிறந்த பெண். அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை. அதோடு துரதிர்ஷ்டமும் அவரை துரத்த, சிறு வயதிலேயே தன் தந்தையையும் பறிகொடுத்துவிட்டார். பிறகு, தனது பாட்டியுடன் ஈரோட்டில் வசித்து வந்த தேன்மொழி, அங்கேயே பள்ளிக் கூட படிப்பை தொடங்கினார். வறுமை காரணமாக, பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பு, பாட்டி கொடுக்கும் 300 இட்லி மற்றும் சாம்பாரை சைக்கிளில் வைத்து ஈரோடுச் சந்தையில் விற்க வேண்டிய நிலை தேன்மொழிக்கு. அதில் வரும் வருமானம் தான் அந்த குடும்பத்தின் ஆதாரம்.

இப்படியே அவரது பள்ளிப்படிப்பு நகர்ந்தாலும், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தார். இருப்பினும், அவரால் விரும்பிய மேற்படிப்பை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் பாட்டியுடன் சேர்ந்து காலையில் இட்லி, மதியம் சாப்பாடு என்று விற்பனை செய்ய தொடங்கினார். அப்போதும் மனம் தளராத தேன்மொழி, வியாபாரம் செய்து கொண்டே ஒரு மருந்து நிறுவனத்தில் வேலைக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்களின் ஆலோசனையின் படி, தொலைதூரக் கல்வியில் பி.காம் படித்து முடித்தார்.

மேலும் படிக்க – திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த “களேபரம்”… சிங்கப்பூர் செல்ல வேர்க்க விறுவிறுக்க வந்த 6 ஊழியர்கள் – ஒருத்தரும் “அதை” கவனிக்கல – டிக்கெட் கட்டணம் மொத்தமும் வீண்

ஒரு புறம் இட்லி வியாபாரம், மறுபுறம் மருந்து நிறுவனத்தில் வேலை, படிப்பு என்று 24 மணி நேரமும் சுற்றி சுழன்றார். பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் வலியுறுத்திய போது, ‘தங்கைகளை நான் தான் படிக்க வேண்டும்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு ஈரோட்டில் இருந்து மீண்டும் கரூருக்கு வந்த தேன்மொழி, அங்கேயே டைல்ஸ் விற்பனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது, எதிர்பார்க்காத விதமாக ஒரு விபத்தில் சிக்கிய தேன்மொழிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் பிளேட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், வறுமை காரணமாக எண்ணெய் கட்டு போட்டு அதனை சரி செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த இன்னலில் இருந்து மீண்டு வந்த தேன்மொழி, கடன் வாங்கி அதில் கம்பியூட்டர் ஒன்றை வாங்கினார். அதன் மூலம், Data Billing வேலையை கற்றுக் கொண்டு மீண்டும் சம்பாதிக்க தொடங்கினார்.

பிறகு அசராத உழைப்பை கொட்டிய தேன்மொழி, இன்று அந்த துறையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். இப்போது சுமார் 300 பெண்கள் தேன்மொழியிடம் பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரிக்கே செல்லாத தேன்மொழி, இன்று ஏகப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று Campus Interview மூலம் பெண்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறார். எதிர்காலத்தில் குறைந்தது 5000 பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.

இறுதியில், அந்த இயற்கையும் இவர் மீது அன்பு கொள்ள, தனக்கான ஒரு இணையை தேன்மொழி அடையாளம் கண்டுகொண்டார். முஜிபுர் ரஹ்மான் எனும் இளைஞர் இவரிடம் காதலை வெளிப்படுத்த, முதலில் தயங்கிய தேன்மொழி, பிறகு தன் கால் உடைந்த நேரத்தில் கூடவே இருந்து நம்பிக்கையூட்டிய ரஹ்மானுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இட்லி, சாப்பாடு என்று விற்றுக் கொண்டிருந்த தேன்மொழி இவ்வளவு பெரிய உயரத்தைத் தொடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தற்போது job world solution என்ற நிறுவனத்தின் மூலம் லட்சங்களில் வருமானம் பெற்று வருகின்றார். வாழ்வில் எத்தனை சறுக்கல் வந்தாலும், அதில் எதிர்நீச்சல் போட்டு திமிறி ஜெயிக்க வேண்டும் என்று உரக்கச் சொல்லி உயர்ந்திருக்கிறார் இந்த சாதனைப் பெண் தேன்மொழி.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts