வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் மனைவியையும் நீண்டகாலம் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படியான சூழலில் அவர்களுக்கு உளவியல்ரீதியாக உடலுறவில் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும்?
Long Distance relationship
இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள், தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியைக் குடும்பத்தைவிட்டு பிரிந்து செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவும் இளைஞர்கள் முன் நிற்கும் மிகப்பெரிய சவால், தங்கள் இளம் மனைவிகளை விட்டுப் பிரிந்து குடும்பத்தின் மேம்பாட்டுக்காக வெளிநாட்டில் உழைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த மாதிரியான நேரங்களில் மொபைல் போனில் பேசுவது, மெசேஜிங் போன்றவைகள் மூலமாக மட்டுமே மனதுக்குப் பிடித்தமானவர்களோடு உரையாட முடியும். மனைவியைப் பிரிந்து பல மாதங்கள், ஏன் பல நேரங்களில் ஆண்டுக்கணக்கில் கூட வாழ நேரிடும். அப்படியான நேரங்களில், உடல்ரீதியான அடிப்படைத் தேவைகளைக் கூட ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். இப்படி தொலைதூரத்தில் இருக்கும் இருவர் இடையேயான உறவைத்தான் ’Long Distance relationship’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
இப்படி தனித்தனியாக வாழ வேண்டிய நிலை ஏற்படுகையில், உடல்ரீதியாக அவர்கள் இடையில் போதுமான அளவில் நெருக்கம் ஏற்படாது. அப்படியான நிலையில், மனம் ஒருவகையில் பித்துப் பிடித்தது போன்ற உணர்வில் உழன்று தவிக்கும். இது இயல்புதான் என்றும் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இதுபோன்ற ’Long Distance relationship’-இல் உடலுறவுரீதியாகவும் உளவியல் சிக்கல்கள் ஏற்படும் என்பதே நிதர்சனம். நார்மலான ரிலேஷன்ஷிப் போலல்லாமல், வெளிநாட்டில் கணவரோ அல்லது மனைவியோ வேலை பார்க்கையில், தங்கள் துணையை நீண்டகாலம் பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில் இருப்பவர்களுக்கு உடலுறவுரீதியாக ஒருவிதமான வெறுப்பு நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ரொமாண்டிக்கான ஒரு ரிலேஷன்ஷிப்பில் தொடு உணர்வு முக்கியமானது. ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல், கட்டிப்பிடித்தல், முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளுதல், உடலுறவு போன்றவை அடிப்படையான விஷயங்கள். ஆனால், ’Long Distance relationship’-இல் இருப்பவர்கள், ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளும்போது தான் இவையனைத்தும் சாத்தியம்.
’Long Distance relationship’ – கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
- எங்கோ ஒரு மூலையில் உங்கள் பாட்னர் இருந்து வேலை பார்ப்பது உங்களோடு, உங்கள் குடும்பத்துக்காகவும்தான் என்பதை மனதில் நிறுத்துங்கள். அவர்களுக்கு உரிய முறையில் நேரம் ஒதுக்கி, அவர்களோடு உரையாடுங்கள்.
- உங்கள் பாட்னரோடு சரியான முறையில் ‘Communication’-ஐ பரிமாறிக் கொள்ளுங்கள். டெக்னாலஜி அசுர வளர்ச்சி கண்டிருக்கும் இந்த சூழலில் வீடியோ, ஆடியோ கால்கள், செல்போன், மெசேஜிங் என பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் அவர்களோடு தொடர்பில் இருக்கலாம்.
- முடிந்தவரை அடிக்கடி நேரில் சந்தித்துக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அத்தோடு, மற்றவர்களுக்குப் புரியா வண்ணம், உங்களுக்குள் ரகசிய மொழியில் (Code Word) பரிமாறிக் கொள்வதற்கான வார்த்தைகளை உருவாக்கி, அதில் உரையாடுங்கள். இது உங்கள் இருவர் இடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
- அதேபோல், உங்கள் பாட்னர் குறித்த முக்கியமான தேதிகள், அதாவது பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கியமான நாட்களைச் சரியாக நினைவில் வைத்து வாழ்த்தத் தவறாதீர்கள். இதுபோன்ற முக்கியமான நாட்களில் உங்களிடமிருந்து கிட்டும் வாழ்த்து அவர்களுக்கு ரொம்ப முக்கியமானதாக இருக்கும்.
- சின்ன சின்ன கிஃப்ட்கள் மூலம் ஆச்சர்யப்படுத்துங்கள். முக்கியமான நாட்கள் என்றில்லை, உங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பாட்னருக்கு அவ்வப்போது அசத்தலான கிஃப்ட்கள் கொடுத்து அசத்துங்கள். இது, அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவதை உணர்த்துவதாக இருக்கும்.
- நீங்கள் கொடுக்கும் பரிசுகள் மனதுக்கு நெருக்கமானதாக, அதாவது பெர்சனல் டச்சோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துங்கள். நீங்கள், உங்கள் பாட்னரை எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள் என்பது தொடங்கி, உங்களின் கவலை, மன நிம்மதி, `Sex’ என எந்தவொரு விஷயமாக இருந்தாலும், போன் கால்கள், வீடியோ கால்கள் வழியாக உங்கள் பாட்னரோடு தயங்காமல் விவாதியுங்கள். உங்கள் உணர்வுகளை சரியாக அவர்களுக்குக் கடத்துங்கள். ’Long Distance relationship’-இல் இது ரொம்பவே முக்கியமானது.
- உங்கள் பாட்னரோடு பேசுகையில், அவர்களுக்காகவே முழுமையாக நேரம் ஒதுக்குங்கள், அந்த நேரத்தில் உங்களின் ‘Multitasking’ திறமையைக் காட்ட முயற்சிக்காதீர்கள். குறிப்பிட்ட நேரம் என்பது முழுமையாக உங்கள் பாட்னருக்கானது என்று ஒதுக்கி வைத்து விடுங்கள். இது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
- இதுபோன்ற ரிலேஷன்ஷிப்புகளில் உங்கள் பாட்னருக்கு நேரம் ஒதுக்குவது ரொம்ப முக்கியம். அதேபோல், ஒன்றாக அமர்ந்து படம் பார்த்து, அதைப்பற்றி விவாதிப்பது அல்லது ஒரே மாதிரியான சமையல் செய்து அதை ருசிபார்ப்பது என ஒன்றாக ஒரே வேலையைச் செய்து நேரத்தைப் பகிர்வது உங்கள் இருவரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும்.
- உங்களின் ’Long Distance relationship’ சிறிது காலமே நீடிக்கும் என்றால், இந்த பிரச்னைகள் நீங்கள் நேரில் சந்திக்கும்போது சரியாகும். ஒருவேளை நீண்டகாலம் நீடிக்கக் கூடியது என்றால், `Sexual Life’ வகையில் பார்த்தால், அது ஆரோக்கியமானது அல்ல என்பதுதான் நிதர்சனம்.