TamilSaaga

“தூற்றிய சொந்த ஊர்”.. உயிரை விட்ட தந்தை.. சிங்கப்பூரில் வேலைப்பார்த்து 5000 பேருக்கு சாப்பாடு போட்டு அக்காவுக்கு கல்யாணம் – மகன்னா இப்படி இருக்கணும்!

ஒரு ஏழ்மையான குடும்பத்தில் ஆண் பிள்ளையாக பிறந்தால், குடும்பத்தையே அந்த பிள்ளை தான் தாங்க வேண்டியிருக்கும். அந்த குடும்பத்தின் நல்லது, கெட்டது என அனைத்துக்கும் “பொறுப்பு” அந்த ஆண் பிள்ளை தான். கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால், ஊர் வழக்கில் சொல்வது போல், “தெக்குனாமுட்டி”யாக இருந்தால் அந்த குடும்பம் படும் பாடு இருக்கே… சொல்லி மாளாது. அப்படி “தெக்குனாமுட்டி” கம் “ஹீரோ” பற்றிய ஸ்பெஷல் கட்டுரை தான் இது.

நமது தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்துக்காக புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அளித்த பேட்டி இது. இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக..

“வணக்கம் சார்.. முதல்ல நான் இப்படி பேசலாமான்னு கூட தெரியல. ஏன்னா.. பேட்டி கொடுக்குற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல. என்னோட ஊரு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பக்கத்துல உள்ள ஆவுடையார் கோவில்.

அப்பா பலசரக்கு கடை வச்சு நடத்தி வர்றாரு. ரொம்ப கோவக்காரர். எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பார். அதுனால எனக்கும் அவரை பிடிக்காது. அம்மா, அப்புறம் ஒரேயொரு அக்கா. நான் டிப்ளமோ படிச்சிருக்கேன். பள்ளி நாட்கள்ல நல்லா படிச்சுக்கிட்டு தான் இருந்தேன். பதினொன்னாவது படிக்கையில தான் சேர்க்கை சரியில்லாம போயிட்டேன்.

மது, சிகரெட்-னு எல்லாமே அளவுக்கு அதிகமா போச்சு. காலேஜ் படிக்கிறப்போ என்னாலேயே என்னை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போயிட்டேன். என்னோட அக்காவ, அப்பா படிக்க வைக்கல. ஆனா, என்னை படிக்க வைச்சார். அக்காவுக்கு படிக்கணும்-னு கொள்ளை ஆசை. அதைத் தாண்டி நான்-னா அதுக்கு அவ்ளோ உசுரு. என்னை அப்படி பார்த்துக்கும். எனக்கும், என் வீட்லயே என் அக்காவை தான் பிடிக்கும்.

மேலும் படிக்க – அஞ்சா நெஞ்சம்.. குணத்தில் தங்கம்! – உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் சிங்கப்பூர் காவல்துறை – ராயல் சல்யூட்!

டிப்ளமோவுக்கு அப்புறம் என்னாலயும் படிக்க முடியல. அதாவது படிக்க வரல. ஒருக்கட்டத்துல, வீட்டுல திட்டிக்கிட்டே இருந்ததால, அக்கா கல்யாணத்துக்கு சேர்த்து வச்சிருந்த கொஞ்சம் நகையையும், பணத்தையும் எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். நேரா சென்னை போயிட்டேன். அங்க என்னோட நண்பர்கள் இருந்த ரூமுக்கு வந்து தங்கிட்டேன். டெய்லி எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தேன். ஒவ்வொரு நாளும் 1000 ரூவா செலவு செய்வேன். எதைப்பற்றியும் கவலைப்படல.

ஆனா நான் பணம், நகையோட ஓடிப்போனதுல ஒட்டுமொத்த குடும்பமும் இடிஞ்சு போச்சு. நான் ஓடிப் போனதை விட, உயிரோட இருக்கேனா? எங்க இருக்கேன்னு கூட தெரியாம என்னை பெத்தவங்க துடிச்சுப் போயிட்டாங்க. ரெண்டு, மூணு நாள்ல அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அம்மா, அக்கா கூட தேறிட்டாங்க. ஆனா, அப்பா உடைஞ்சிட்டார். “குடும்பத்தை பாரத்தை நானும் சுமந்து உதவியா இருப்பேன்னு நினைச்சவருக்கு மிகப்பெரிய இடிய தலையில இறங்கிட்டேன்”.

அப்புறம் 2 மாதம் கழிச்சு என் சித்தப்பாவுக்கு சேதி தெரிஞ்சு, அவர் என் நண்பர்களை விசாரித்து, மெட்ராஸ் வந்துட்டார். கரெக்ட்டா நான் தங்கியிருந்த ரூமுக்கே வந்துட்டார். என்னைப் பார்த்தவர் ஒரு வார்த்தைக் கூட பேசாம, “ஊருக்கு ஒரு தடவை மட்டும் வா”-ன்னு சொன்னார். பயந்துகிட்டே போனேன். மெட்ராஸில் இருந்து கிளம்பும் போது கூட எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா, ஊரை நெருங்க நெருங்க ‘ஐயோ.. இந்நேரம் நாம ஓடிப்போனது ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே”-ன்னு எனக்கு பயம் தாங்கல.

சரியா நைட்டு 10 மணிக்கு வீட்டுக்குப் போனேன். சத்தியமா என் அம்மாவும், அப்பாவும் விளக்கமாத்தால அடிப்பாங்கனு நினைச்சுத் தான் போனேன். என்னைப் பார்த்ததும் ஓடி வந்த எங்கம்மா என்னை அணைச்சு, “அம்மா மேல என்னடா கோபம்-னு” கட்டி அணைச்சுக்கிட்டாங்க. அவங்க கைப்பைடியில் இருந்த நான், அப்பா எங்க இருக்காருன்னு பார்த்தேன். சத்தியமா அந்த நொடியை இன்னமும் நினைச்சா என் ஈரக்கொலை நடுங்குது. என் அப்பாவை ஃபோட்டோவா மாட்டி வச்சிருந்தாக, விளக்கு ஏத்தி.

மேலும் படிக்க – “Work Permit”-ல் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. 2 நாட்கள் தமிழகத்தில் “observation”.. 2 நாட்கள் சிங்கையில் “Training” – 15 நாட்களில் குவிந்த வெளிநாட்டு ஊழியர்கள்

என்னை நினைச்சு நினைச்சு அந்த மனுஷன் ஏங்கியே செத்துட்டாரு. நான் வந்த விவரம் தெரிஞ்சு, சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. எல்லாரும் என்னை அவ்வளவு கேவலமா திட்டுனாங்க. என் அம்மா எல்லார்கிட்டயும் “அவன் புரியாம செஞ்சிட்டான்.. திட்டாதீங்க”-னு கெஞ்சுகிட்டு கிடந்துச்சு. ஆனா என் காதுக்கு எதுவும் கேட்கல. என் அப்பா படத்தை மட்டும் பார்த்துக்கிட்டே இருந்தேன். கண்ணீர் எதுவும் வரல.

அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு, என் வீட்டுக்கு வந்த சித்தப்பா என்னை ஒரு சைக்கிள் கடையில் வேலைக்கு சேரச் சொன்னார். நானும் போனேன். ஒரு நாளைக்கு 25 ரூவா சம்பளம். அப்பாவோட கடைய சித்தப்பாவே எடுத்து நடத்துனாரு. நான் அந்த கடையில் வேலை செஞ்சா, பொருட்களை திருடிடுவேன்னு பயம். அதனால என்னை சேர்த்துக்கல. ஆனா, யாருமே என்னிடம் “நகை, பணம் என்னாச்சு?”-னு கேட்கல. அக்காவுக்கு கல்யாணம் தொடர்ந்து தள்ளிப் போயிட்டே இருந்துச்சு.

இவ்வளவு நடந்தும், அம்மாவும் சரி.. அக்காவும் சரி என்னை ஒரு வார்த்தைக் கூட “ஏன் இப்படி செஞ்சன்னு கேட்கல”.. அப்பா செத்தும் அவங்க என்னை கேட்கல. அதுதான் என்னை கொன்னுச்சு. அவங்க அமைதி தான் என்னை கொன்னுக்கிட்டே இருந்துச்சு. அவங்க அமைதி தான் புள்ளையா பிறந்ததுக்கு ஏதாச்சும் பண்ணனும்-னு நினைக்க வச்சுது.

அப்போ தான் மலேசியாவில் வேலை செஞ்ச என் நண்பன்கிட்ட உதவி கேட்டேன். எப்படியாவது என்னை வேலைக்கு அழைச்சுக்கோ. பிச்சை எடுக்கக் கூட நான் தயார் தான்-னு சொன்னேன். என் அம்மா, அக்காவுக்கு பிறகு, அவ்வளவு சம்பவத்துக்கு அப்புறமும் என்ன நம்புன ஒரே “கடவுள்” அந்த நண்பன் தான். உடனே அவன் வேலை பார்த்த கம்பெனியிலேயே எனக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்தான். ஆனா, மலேசியா போக ஒரு பைசா என்னிடம் இல்ல.

அக்கா அவளுடைய தோட்டை கழற்றிக் கொடுத்தா. செருப்பால் அடிச்சது மாதிரி இருந்துச்சு. தோட்டை வாங்கிட்டு நேரா கொள்ளைக்கு போனேன். என் அப்பா செத்ததுக்கும் சேர்த்து அழுதேன். எவ்வளவு கேவலமான பிறவியா இருந்திருக்கேன்னு நினைச்சு நினைச்சு அழுதேன். இவ்ளோ அசிங்கத்தை செஞ்சும், என் அக்கா அவள் தோட்டை கழற்றிக் கொடுத்ததை நான் என்னன்னு சொல்வேன்!

அடுத்த மூணே மாசத்தில் மலேசியா போனேன். அதாவது, 2014ம் ஆண்டு போனேன். என் அப்பாவை அந்த கோலத்தில் ஃபோட்டோவுல பார்த்த அந்த நியாபகம், என்னை ஒரு நாளும் நிம்மதியா தூங்க விடல. சுணக்கமானேன். அப்போ அந்த “கடவுள்” நண்பன் என்னிடம், “இந்த கோபத்தை உன் வேலையில் காட்டு, உன் உழைப்பில் காட்டு”-ன்னு வழியை காட்டினான். மூணு வருஷம் மாடு மாதிரி வேலை செய்தேன். சத்தியமா சொல்றேன்.. பெருமைக்காக சொல்லல.. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தேன்.

மாதம் 30 ஆயிரம் வீட்டுக்கு அனுப்புவேன். ஒவ்வொரு முறை அந்த பணம் என் வீட்டை அடைந்து, அதை என் அம்மா “பணம் வந்துடுச்சுப்பா” என்று சொல்லும் போது எனக்கு கிடைத்த சந்தோசம் இருக்கு பாருங்க.. அதை விவரிக்க வார்த்தையே கிடையாது. அப்பாவை கொன்னு, அக்கா வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய இந்த பாவிக்கு என் அம்மாவின் ‘அந்த வார்த்தைகள்’ கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு.

சரியா 2017 ஜூன் மாதம் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்து இந்த முறை சிங்கப்பூர் போனேன். இன்னும் பெரிய சம்பளம். பெரிய பொறுப்பு. அக்காவுக்கு லேட்டா கல்யாணம் பண்ணாலும், ஊரே வியக்குற அளவுக்கு கல்யாணம் பண்ணேன். 5000 பேருக்கு சாப்பாடு போட்டேன். ஊரே வியந்து போச்சு. என்னை அசிங்கமா திட்டுன அத்தனை பேரும் என் அம்மாட்ட, “உன் புள்ளை சாதிச்சுட்டான்னு” சொன்னாங்க. இன்னொரு விஷயம், என் அக்கா கல்யாணத்துக்கு ஒரு ரூவா கூட நான் கடன் வாங்கல. ‘என்னை ஊருல யாரும் நம்ப மாட்டாங்க-ங்குற வெறியே என்னை ‘இன்னும் வேணும்.. இன்னும் வேணும்’-னு சம்பாதிக்க வச்சுது’.

ஆனா, இதை எல்லாத்தையும் பார்க்க என் அப்பா தான் என்னோட இல்ல. இவ்வளவு செஞ்சும் எனக்கு மன நிறைவு கிடைக்கல. என் அப்பா உயிரோடு இருந்து இதை பார்த்திருந்தா, நிச்சயம் அவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். சொந்த ஊரில் எனக்கு கிடைக்காத மரியாதையை மலேசிய மண்ணும், சிங்கப்பூர் மண்ணும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துச்சு. மலேசியா என்னை மனுஷனாக்கியது. முதன் முதலா நாலு காசு சம்பாதிக்க வச்சுது. சிங்கப்பூர் என்னையும் பார்த்து நாலு பேர் மதிக்கும் அளவுக்கு உயர்த்துச்சு.

2019-ல கொரோனா அதிகம் இருந்ததால, தனியா இருக்குற அம்மாவை பார்த்துக்க ஊருக்கு வந்துட்டேன். ‘சிங்கப்பூர் வந்து என்னோட தங்கிடுமா-னு எவ்வளவோ கூப்டு பார்த்துட்டேன். அம்மா ‘முடியதான்னு’ சொல்லிட்டாங்க. அப்பா வாழ்ந்த இடத்துல தான் நான் இருப்பேன்னு சொல்லிட்டாங்க. அதனால, நானும் என்னோட Bank Balance பணத்தை வச்சு, அப்பாவோட பல சரக்கு கடையை இன்னும் பெருசாக்கி நடத்தணும்-னு முடிவு செஞ்சேன். 6 லட்ச ரூபாய் செலவு செஞ்சு, கடையை இன்னும் பெரிதாக்கினேன். என் அப்பா கடையை நடத்துனப்போ, ‘சித்தக்கூர் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார்’-னு கடைக்கு பெயர் வச்சிருந்தார். இப்போ என் புது கடையோட பெயர் ‘ராமலிங்கம்’ பலசரக்குக் கடை.

ஆம்! இது என் அப்பாவோட பெயர். அவருக்கு சேவுகப்பெருமாள் அய்யனார் சாமியா இருந்திருக்கலாம். எனக்கு என் அப்பா தான் சாமி. அதனால் அவர் பெயரையே வச்சிட்டேன்” என்று கண்ணீர் தழும்ப முடித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts