TamilSaaga

வசூலைக் குவிக்கும் “பொன்னியின் செல்வன்-2”.. சிங்கப்பூரிலும் உயரப் பறந்த சோழர்களின் கொடி.. சோழர்கள் பெயர் கொண்ட “Chulia” தெரு.. பிரிட்டீஷ் அரசு கண்டறிந்த “கற்பாறை” ரகசியம்!

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகம் “Characters Introduction”-ஆக இருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகம் அந்த ஒவ்வொரு Characters-களின் Detailing-ஐ கொடுத்துள்ளது. அதில், பிரம்மாண்டம், புரியும்படி கதை சொல்லல், நடிப்பு, வசனம், திரைக்கதை என்று அனைத்திலும் வென்றிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். கல்கியின் நாவலில் இருந்து விலகி, ஆங்காங்கே தனது கற்பனையை சற்று அள்ளித் தெளித்திருந்தாலும், ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்று அந்த புகார்களை மறக்கடிக்கச் செய்துவிட்டார்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமை விட ஒரு நடிகர் சிறப்பாக நடித்திருக்க முடியுமா? என்றால் “வாய்ப்பில்லை ராஜா” தான் பதிலாக வரும். சிலர் ஒருபடி மேலே சென்று, ‘பாகுபலி’ அளவுக்கு இல்லை என்று வரலாற்றையும், கற்பனையையும் கம்பேர் செய்து பேசிக் கொண்டிருக்க, நமது “தமிழ் சாகா” குழு சிங்கப்பூருக்கும், சோழர்களுக்குமான இணைப்பை வரலாற்றுத் தரவுகளுடன் சற்று தேடிப் பார்த்ததில் கிடைத்த சில ஆச்சர்ய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

இந்தியாவின் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சோழப் பேரரசர்கள் சிங்கப்பூரையும் ஆண்டிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர் ஒருவரின் ஆய்வு மூலம் தெரியவந்திருக்கிறது. சிங்கப்பூரில் சோழர்கள் பெயரில் இருக்கும் தெருக்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு இருக்கிறதா… ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன… தரவுகளை வைத்து அலசுவோம் வாங்க!

சோழப்பேரரசு

தமிழ்நாட்டின் கி.மு 300 முதல் கோலோச்சிய சோழப்பேரரசு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்றது. அந்த காலகட்டத்தில் சுமத்ரா தீவு என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்தோனேசியாவோடு சோழர்கள் மிகுந்த நட்பு பாராடிக் கொண்டிருந்தனர். இரு நாடுகள் இடையே கடல்வழி வாணிபமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆசியாவில் புகழ்பெற்ற அரசுகளாக இவை விளங்கின என்றே சொல்லலாம். அந்த காலகட்டத்தில் சோழப் பேரரசர்கள் சிங்கப்பூரின் மீது படையெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தக் கூற்றுக்கு சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது.

சோழப்பேரரசுக்கும் ஸ்ரீவிஜயா என்று அந்த காலகட்டத்தில் அழைக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு இடையே போர் ஏற்பட்டதாக வரலாற்றில் பதிவு உண்டு. அதாவது, ஸ்ரீவிஜயாவை ஆண்டுவந்த புத்தர்கள் சோழர்களுடனான உறவைச் சரியாகப் பேணாத சமயத்தில், அந்த நாட்டின் மீது சோழர்கள் போர் தொடுத்ததாகத் தெரிகிறது. இந்த இடத்தில் ஸ்ரீவிஜயா அரசைப் பற்றி பேசக் காரணம் என்னவென்றால், மலாய் தீவுக்கூட்டங்களை அப்போது அரசாட்சி புரிந்தது அந்த அரசுதான்.

கடல்புறங்களை எல்லையாகக் கொண்ட அந்த அரசு மீதுதான் சோழர்கள் போர் தொடுத்திருக்கிறார்கள். இது ‘Chola invasion of Srivijaya’ என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. கி.பி 1025-ம் ஆண்டு சைலேந்திர வம்சத்தில் வந்த மாறவிஜயதுங்க வர்மன் ஆட்சிக் காலத்தில் முதலாம் ராஜேந்திர சோழர் ஸ்ரீவிஜயா மீது போர் தொடுத்ததாகத் தெரிகிறது. போரில் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில், ஸ்ரீவிஜயா, கி.பி 1070 வரையில் சோழ ஆளுகையின் கீழ் இருந்ததாகப் பதிவுகள் சொல்கின்றன.

சரி ஏன் இந்தக் கதையைப் பேசுகிறோம் என்று கேட்கிறீர்களா… அப்படியே கொஞ்சம் டைம் டிராவல் பண்ணி 1843-க்கு வருவோம். சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரிட்டீஷ் அரசு சிங்கப்பூர் ஆற்றில் கற்பாறை ஒன்றை கண்டெடுக்கிறது. ஆனால், அந்தப் பாறையில் எழுதியிருப்பது என்ன என்பது பற்றி எந்தவொரு தகவலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் இருக்கும் எழுத்துகள் மலாய் தீவுக்கூட்டத்தை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்வதற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘Kawi’ எழுத்துருக்கள் என்பது மட்டும் தெரியவந்தது.

இதனால், அந்தக் கல் குறித்த தகவல்கள் 2019 வரை மர்மமாகவே இருந்து வந்தது. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர் ’Dr Lain Sinclai’ என்பவரின் ஆய்வு முடிவுகள் திருப்புமுனையை ஏற்படுத்தின. 2019 டிசம்பரில் வெளியான அவரது ஆய்வு முடிவுகளின்படி, அந்தக் கற்பாறையில் இருந்த ‘கேசரிவா’ என்ற வார்த்தையை அவர் கண்டுபிடித்தார். அது சோழப்பேரரசர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டங்களில் ஒன்று என்பதையும் அவர் நிறுவினார்.

இது, சோழப்பேரரசு சார்ந்த ‘பரகேசரிவர்மா’ என்ற பட்டத்தோடு தொடர்புடையதாகக் கருதப்பட்டது. இதனால், சிங்கப்பூரிலும் சோழப்பேரரசின் கொடி உயரப் பறந்திருக்கலாம் என்று வரலாற்றில் முதல்முறையாகப் பேசப்பட்டது.

சிங்கப்பூர் ஆற்று முகத்துவாரத்தில் கைப்பற்றப்பட்ட அந்த மர்மக் கற்பாறையில் இருந்த தகவல்கள் பற்றி சிங்கப்பூரை வடிவமைத்த, அந்நாட்டின் தந்தை என்று போற்றப்பட்ட ‘Sir Stamford Raffles’ உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் கடும் முயற்சி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

சிங்கப்பூரில் சோழர்கள் பெயர்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சோழர்கள் பெயரில் தெருக்கள் இருப்பதை சிலர் இதற்கு அடிப்படையாகக் கோடிட்டுக் காட்டத் தொடங்கினர். சிங்கப்பூரின் ஆரம்பகாலம் தொட்டே அங்கு இருந்துவரும் ஒரு தெரு, ‘Chulia’ தெரு. ’சோழ’ என்ற வார்த்தையையே சீனர்கள் ‘Chulia’ என்று உச்சரித்ததாகவும் சொல்கிறார்கள். மேலும், சிங்கப்பூரின் ‘South Bridge Road’ பகுதியில் ‘Chulia மசூதி’ என்ற பெயரில் இஸ்லாமிய மசூதி ஒன்று இன்றளவும் இருக்கிறது.

அதன் நிர்வாகம் பெரும்பாலும் தமிழ் இஸ்லாமியர்களிடமே இருந்து வந்திருக்கிறது. சிங்கபூரா என்று முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய சிங்கப்பூர் அரசைத் தோற்றுவித்தவர் ‘Sang Nila Utama’ என்றழைக்கப்படும் அரசர். இந்தோனேசியாவின் பாலேம்பேங் பகுதியில் பிறந்தவர் இவர் என்று ஒரு தகவல் இருந்தாலும், சோழப்பேரரசின் முக்கியமான பேரரசர்களில் ஒருவரான ராஜராஜ சோழன்தான் அவர். அவரது இன்னொரு பெயர்தான் அது என்ற ஒரு கருத்தும் வரலாற்று அறிஞர்களிடையே இருக்கிறது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts