உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அயல்நாடுகளுக்கு சுற்றுலா செல்வது மிகவும் பிரியமான காரியம். சுற்றுலாவாக இருந்தாலும் சரி தங்கள் வேலைக்காக பிற நாடுகளில் வாழ்வதாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கு செல்ல ஆசை இருந்துகொண்டு தான் உள்ளது. ஒவ்வொரு நொடியும் அயல்நாடுகளுக்கு பயணம் செல்லும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
யாராக இருந்தாலும் அயல்நாடுகளுக்கு பயணம் செல்ல மிக முக்கியமாக இருக்க வேண்டியது பாஸ்போர்ட் அடுத்ததாக விசா! சில நாடுகளில் குறிப்பிட்ட நாட்டு மக்கள் விசா இல்லாமலும் பயணம் செல்லலாம். பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் குறிப்பிட்ட நாடுகளுக்கு மக்களால் பயணம் மேற்கொள்ள முடியும். அப்படி எத்தனை நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்ற எண்ணிக்கையை வைத்து ஒரு நாட்டின் பாஸ்போர்ட் எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை கணிக்க முடியும்.
Henley Passport Index என்ற அமைப்பு தான் இந்த கணிப்பை வெளியிடுகிறது. 2024 ஜூன் மாத அறிக்கையின்படி தொடர்ந்து நான்கு மாதங்களாக சிங்கப்பூர் தான் முதல் இடத்தில் உள்ளதாம்! ஏறத்தாழ 168 நாடுகளுக்கு விசா இன்றி சிங்கப்பூர் மக்களால் பயணம் மேற்கொள்ள முடியும். இதன் சதவிகிதம் 91.15 ஆகும்.
இதில் 159 நாடுகளுக்கு எந்தவிதமான ஆவங்களுமின்றி பாஸ்போர்ட் மட்டுமே வைத்து பயணம் செய்ய முடியும். மீதமுள்ள 9 நாடுகளுக்கு Electronic Travel Authorization எனப்படும் இணையவழி விசா கொண்டு பயணிக்கலாம்.
ஆசியாவிலேயே மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட்டாகவும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் விளங்கி வருகிறது. மேலும் ஆசியாவில் இரண்டாவதாகவும், உலக அளவில் 13 ஆவதாகவும் ஜப்பான் பாஸ்போர்ட் உள்ளது. இதன் புள்ளிகள் 89.55 சதவிகிதம் ஆகும்.
உலக அளவில் இரண்டாவதாக இத்தாலியின் பாஸ்போர்ட் உள்ளது. மொத்தம் 161 நாடுகளுடன் 90.49 சதவிகித புள்ளிகளையும் இது கொண்டுள்ளது.
இது போன்ற புள்ளிவிவரங்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது?
ஒரு நாட்டின் பாஸ்போர்ட்-டைக் கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்ற எண்ணிக்கையை வைத்து தான் அந்த பாஸ்போர்ட்-ன் மதிப்பு புள்ளிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் உலக நாடுகளுடன் குறிப்பிட்ட நாடு எவ்வளவு புரிந்துணர்வுடன் இருக்கிறது என்பதையும் நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த புள்ளிவிவரங்கள் கணக்கிடப்படுகின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் ஏன் முக்கியம்? ஏன் இதனை நாம் கவனிக்க வேண்டும்?
நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் உடன் விசா என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாடுகளும் பல வகையான விசாக்களை கொண்டிருக்கும். நீங்கள் பயணம் மேற்கொள்ளும் நோக்கத்தைப் பொருத்து அதன் வகை மாறுபடும்.
முதலில் இந்த விசாக்களுக்காக நீங்கள் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்க இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த நாட்டு அரசாங்கத்தின் அனுமதி பெற்றால் மட்டுமே நீங்கள் அந்த நாட்டிற்குள் நுழைய முடியும். இந்த செயல்முறைகள் மிக நீண்டதாக இருக்கும். இது எதுவும் இன்றி பாதுகாப்பாக ஒரு நாட்டிற்குள் நுழைய முடியும் என்றால் அதுதான் அந்த நாட்டு பாஸ்போர்ட் கொண்டுள்ள மதிப்பு. எந்த வித கூடுதல் ஆவணங்களுமின்றி ஒரு நாடு மற்ற நாட்டு மக்களை உள்ளே அனுமதிக்க அந்த நாடுகள் சிறந்த நட்புணர்வுடன் இருப்பது முக்கியம்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் இது போல் தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் மதிப்பு பற்றியும், விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம். இதற்காகத்தான் Henley Passport Index உலகின் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் பட்டியலை மாதம் தோறும் வெளியிட்டு வருகிறது.