சிங்கப்பூரில் குறைந்த ஊதியத்திற்கு வேலைசெய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர்களின் வருமானம், திறன்கள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தொழிலாளியின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்தும் வருகின்றோம் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சக முகநூலில் வெளியிட்ட பதிவில் ‘சிங்கப்பூரில் உள்ள நமது குறைந்த ஊதிய தொழிலாளர்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும், அதே போல் அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதைகளையும் வழங்க வேண்டும். இதற்கு அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சக சிங்கப்பூரர்களின் ஆதரவோடு சமூகத்தின் முழு முயற்சியும் தேவைப்படுகிறது’.
‘The Progressive Wage Model மூலம் குறைந்த ஊழிய தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுடைய ஊதியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது துப்புரவு, பாதுகாப்பு மற்றும் இயற்கை துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பி.டபிள்யூ.எம். ஐ மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த முத்தரப்பு கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’.
‘மேலும் 2019ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, வேலை இட பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குறைந்த ஊதியத் தொழிலாளர்களின் வேலைச் சூழலை மேம்படுத்துவதையும் அரசு உறுதிசெய்து வருகின்றது’ என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.