TamilSaaga

ஆலமரமாய் பல ஊழியர்களுக்கு கைக்கொடுத்த வீரையா… வெளிநாட்டு ஊழியர்கள் புடை சூழ மண்ணுக்குள் விடைபெற்றார் – சேர்த்து வைத்த புண்ணியங்களே அவர் பிள்ளைகளுக்கு போதும்!

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைப்பார்த்து வந்த தூண்டி வீரையா கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் தூண்டி வீரையா. வயது 48.

1990 தொடக்கத்திலேயே சிங்கப்பூர் சென்ற தூண்டி வீரையா தனது கடுமையான உழைப்பினால் அங்கு ‘Painting Inspector’-ஆக பணிபுரியும் அளவுக்கு முன்னேறினார். இத்தனைக்கு அவர் படித்தது ஒன்றாம் வகுப்பு மட்டுமே. வெறும் 1ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ‘Painting Inspector’-ஆக வேலைப் பார்த்த ஒரே ஆள் வீரையா தான் என்றால் அது மிகையாகாது. மிக முக்கியமான உயர்ந்த அந்தஸ்து கொண்ட இந்த வேலைக்கு நன்கு படித்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், அடித்திருக்கும் பெயிண்ட் சரியில்லை என்று இவர் சொன்னால்… மறுபடியும் முதலில் இருந்து ஊழியர்கள் பெயிண்ட் அடித்தாக வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஜூன்.23ம் தேதி மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிய வீரையா வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க – கடவுளே…! சிங்கப்பூரில் முதன் முதலாக 12 வயதுக்குட்பட்ட குழந்தையை காவு வாங்கிய பெருந்தொற்று – ஓடியாடி விளையாடிய பிள்ளையை ஒரே வாரத்தில் இழந்து துடித்த பெற்றோர்!

காலையில் வேலைக்கு சென்றால், மதியமே பணி முடிவடைந்துவிடும். அன்றைய தினம்… அதாவது ஜூன் 23ம் தேதி, வேலையை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் தனது அறைக்கு வீரையா திரும்பிவிட்டார். பிறகு சாப்பிட்டு அறையிலேயே படுத்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அசைவில்லாமல் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட மாலை 5 மணி அளவில், வீரையா உடலில் இருந்து எந்த அசைவும் இல்லாததை அறிந்த சக ஊழியர்கள் பதட்டமடைந்துள்ளனர்.

உடனே ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு, வீரையாவின் மகளுக்கு Video Call செய்துள்ளனர். வீரையாவுக்கு இரண்டு மகள், ஒரு மகன் என்று மொத்தம் 3 பிள்ளைகள். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது பெண் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அறையில் இருந்து சக ஊழியர்கள் வீரையாவின் மகளுக்கு Video Call செய்துள்ளனர். அவரும் Line-ல் வந்து அசைவற்று இருந்த தந்தையை பார்த்து அழுதிருக்கிறார். ‘அப்பா… என்னை பாருங்க’ என பலமுறை அவர் அழைத்தும் வீரையா உடலில் எந்த மாற்றமும் இல்லை.

பிறகு மருத்துவர்கள் வந்து சோதித்த போதுதான், அவர் இறந்தே மூன்று மணி நேரம் ஆகியிருந்தது தெரிய வந்தது. படுத்த சில நிமிடங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் இறந்திருக்கிறார். அவர் தூங்குகிறார் என்றே மற்றவர்கள் இருந்துள்ளனர். இறந்துவிட்டார் என்று யாருமே நினைக்கவில்லை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்ததால், சிங்கைக்கு புதிதாக வரும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதை வீரையா வாடிக்கையாக வைத்திருந்தார். புதிதாக வருபவர்கள் சிலருக்கு தங்க இடம் கிடைக்க தாமதம் ஏற்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து அவர்களின் அன்றைய தின சிக்கலை தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் விளங்கினார். அதனாலேயே எப்போதும் இவரைச் சுற்றியே ஜே ஜே-வென ஒரு கூட்டமே இருக்கும்.

இந்த சூழலில் அவரது மரணம், அனைவருக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. கடந்த (ஜூன்.26) காலை திருச்சி விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கு குடும்பத்தினர், உறவினர்கள் புடைசூழ, சடங்குகள் செய்து முடிக்கப்பட்டு வீரையாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடன் பல நண்பர்களும் கண்ணீருடன் கடைசி வரை நின்றனர். அத்தனையும் அவர் செய்த உதவிகளின் வெளிப்பாடே. வீரையாவின் பிள்ளைகளுக்கு அவர் சேர்த்து வைத்த சொத்துக்களை விட, இந்த புண்ணியமே போதுமானது!

இளைப்பாருங்கள் வீரையா!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts