TamilSaaga

“இது நம்ம சிங்கப்பூர்” : முத்து முத்தா பத்து சிறப்பு – மறக்காமல் படிக்கவேண்டிய பதிவு

சிங்கப்பூர் – ‘ கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ‘ என்னும் வழக்கு மொழிக்கு வடிவம் கொடுக்கும் ஒரு அதிசயம். அதன் பரப்பளவிலும், உலகின் பல்வேறு நாடுகளோடு ஒப்பீட்டு அளவிலும் பார்க்கும்பொழுது, அது ஒரு மிகச் சிறிய நாடு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், பல நாடுகளின் முக்கிய பெரிய நகரங்களை விட சிங்கப்பூர் சிறிய நாடு.

ஆனால் அது கொண்டிருக்கக்கூடிய சிறப்புகளையும், தனக்குத்தானே அந்த நாடு உருவாக்கியிருக்கிற பல்வேறு தனி அடையாளங்களையும், அந்த அடையாளங்களுக்காக்கவும், தன்னுடைய சிறப்புகளுக்காகவும், உலக அளவில் அந்த நாடு பெற்றிருக்கிற பாராட்டுகளையும்,

இதையும் படியுங்கள் : “எதுவுமே இல்லை” என்பதிலிருந்து “எதுவும் சாத்தியம்” என்பதை சாதித்துக் காட்டிய நாடு

மதிப்பினையும்  பார்க்கும்பொழுது, அதன் உயரம், ஒப்பீடுகள் அனைத்தையும் தாண்டிய, ஒரு எட்டாத உயரமாகவே இருக்கிறது. அவைகளைத் தான் ஒவ்வொன்றாக தொடர்ந்து நமது ஆரா அருணாவின் பக்கங்களில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரமும், சிங்கப்பூரின் தனிச்சிறப்பாக கருதப்படும் முத்துக்கு முத்தான பத்து சிறப்புகள்  உங்கள் அருணாவின் பக்கங்களில்…!!!

1- சிங்கப்பூர் சுத்தத்திலும் சுத்தமான நகரம் ! 

‘ இதுவே சிங்கப்பூரா இருந்தா இப்படி எல்லாம் ரோட்டில் எச்சில் துப்ப முடியாது, இப்படி எல்லாம் கண்ட இடத்தில் குப்பை போட முடியாது, அங்கெல்லாம் அதற்கு பிரம்படியும், குறிப்பிட்ட அளவு தண்டனை  தொகையும் கட்ட வேண்டும் ‘  என்று கதை கேட்டு வளராத 80, 90 களின் குழந்தைகளே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சிங்கப்பூரின் சுத்தம் உலக பிரபலம்! துப்புரவு பணிக்கு எனவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட, பலம்வாய்ந்த, பொறுப்பான துப்புரவு பணியாளர்கள் சிங்கப்பூரின் சுத்தத்திற்கு கடுமையான பங்காற்றி வருகிறார்கள். குப்பைகளை சுத்தம் செய்வது, நாட்டினை, நகரத்தை, சுத்தமாக வைத்திருப்பது இவைகளையும் தாண்டி, தெருக்களில் குப்பைகளை வீசுவது, எச்சில் துப்புவது, பொது பொருட்களை நாசம் செய்வது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, ஆகிவற்றை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவித்து இயற்றப்பட்டு இருக்கிற சட்டங்களும் தான் சிங்கப்பூரின் தூய்மைக்கு பெரும் பங்கு வகித்து வருகின்றன. ‘சிங்கப்பூர் மாதிரி நம்ம நாட்டிலும் சட்டம் போட்டாத்தான் எல்லாம் வழிக்கு வரும்’ என்கிற அங்கலாய்ப்புகளை இன்றைக்கும் தமிழக கிராமங்களில் கூட பார்க்கலாம் என்பதுதான், சிங்கப்பூரில் சுத்தத்திற்கு மிகப்பெரிய சான்று என்றே நான் கருதுகிறேன்.

2- நகரங்களுக்குள்ளும் பசுமையை பயிர்செய்யும் சிங்கப்பூர்!

சிங்கப்பூருக்கு ‘கார்டன் சிட்டி’ என்னும் பெயர் உள்ளது, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்  அந்த அளவிற்கு பொது இடங்கள், சாலைகள், பெரிய பெரிய வணிக வளாகங்கள், பொது கட்டிடங்கள் அனைத்தையும் பசுமையை பயன்படுத்தி அழகுபடுத்தி வைத்திருக்கிறார்கள்.

மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகளையும், விவசாய நிலங்களையும், அழிக்க வேண்டிய கட்டாயம் வந்தாலும் கூட, அவைகளுக்கு பதிலாக இயன்றளவு அவைகளை சமன் செய்யும் விதமாகவே நகரத்திற்குள் பசுமையை பயிர் செய்கிறார்கள். ஆங்காங்கே தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கும் பசுமை நிறைந்த பூங்காக்கள், விரைவு சாலைகளின் மையங்களில் வளர்க்கப்படும் நிழல் தரும் பெரிய மரங்கள், மேல்நிலை பாலங்களில் கூட இரு புறங்களிலும் வளர்க்கப்படும் பூக்கள், புதர்கள், என எங்கெல்லாம், எந்த அளவிற்கு முடியுமோ, அங்கெல்லாம் பசுமையை படர விட்டு, தனது

‘ கிரீன் சிட்டி ‘  என்னும் பெயரை இப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நாடு சிங்கப்பூர்.

3 – அபராதம் மற்றும் உடல் தண்டனைகளை இன்றும் தொடரும்  சிங்கப்பூர் !

சிங்கப்பூர் சுற்றுலா பயண மேலாடைகள் சிங்கப்பூரை

‘ ஃபைன் சிட்டி ‘  ‘ Fine City ‘,

என்று பொதுவாக குறிப்பிடுவது உண்டு. அது முற்றிலும் உண்மையானதும் கூட. சாக்கடை பிரச்சனை தொடங்கி சாதி பிரச்சனை வரை, உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கூட ஓயாமல் நீதிமன்றப் படியேறி, ஆண்டுக்கணக்கில் வழக்கறிஞர், நீதிமன்றம் என அலைந்து, திரிந்து சலித்துப் போகும் குடியரசு நாடுகளின் சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, சிங்கப்பூரின் தண்டனை முறை உண்மையிலேயே ஆறுதலனாதும், குடிமக்களின் முறையான வாழ்வுக்கு உதவி செய்வதாகவும், அமைந்துள்ளது.

இன்றைக்கும் சிறுசிறு விதிமீறல்களுக்கான அபராதம் தொடங்கி, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற பெரும் சட்ட மீறல்களுக்கு, சிறை தண்டனையையும் தாண்டி, தடியடி, மரண தண்டனை போன்ற உடல்ரீதியான கடுமையான தண்டனைகள் இன்றைக்கும் அங்கே வழக்கத்தில் இருக்கின்றன. அதுதான் சிங்கப்பூரை குற்றங்கள் குறைவான, பாதுகாப்பான நாடாக மாற்றி இருக்கிறது என்றும் சொல்லலாம்.

4 – மது பிரியர்களின் மனம் கவரும் சிங்கப்பூர் !

சிங்கப்பூர் பயணம் செய்யக்கூடிய மது பிரியர்கள் தேடி செல்லக்கூடிய முதல் இடம் புகழ்பெற்ற ராஃபிள்ஸ் ஹோட்டலின் ( Raffles Hotel ) லாங் பார் ( Long Bar ).

சிங்கப்பூர் ஸ்லிங் காக்டெய்ல் –

( Singapore Sling Cocktail ) – அழகான செர்ரி- இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கக்கூடிய இந்த காக்டெய்ல்  அங்கோஸ்டுரா பிட்டர்ஸ், கிரெனடைன், ஜின்னுடன் மற்ற சில மது பானங்களையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. 1900 களின் முற்பகுதியில் ஒரு மதுக்கடைக்காரரல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பானம் இன்றைக்கு, ‘ சிங்கப்பூரின் பானம் ‘  என்றே மாறி சிங்கப்பூரை பார்வையிடும் எல்லாரும் கண்டிப்பாக பருக விரும்பும் ஒரு முக்கிய பானமாக விளங்குகிறது.

5 – ஆண்டு முழுவதுமே கோடையை கொண்டாடும் சிங்கப்பூர் !

சிங்கப்பூரின் புவியியல் அமைப்பானது ஏறக்குறைய பூமத்திய ரேகையில் அமைந்திருப்பதால், அதன் வெப்பநிலை ஆண்டு முழுவதுமே 28 முதல் 34 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கிறது. எனவே இது ஆண்டு முழுவதும் கோடை காலம் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உள்ளூர்வாசிகள் இந்த வெப்பத்தை தங்கள் கட்டடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குளிரூட்டிகள் மூலம் சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். இருப்பினும் கூட இதுவே ஒரு  தனித்துவமாக, வருடத்தின் இறுதியில் பெய்யக்கூடிய பருவமழை தவிர, ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான வாழ்வு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து சிங்கப்பூரின் சிறப்பாகவே மாறிவிடுகிறது.

6 – வணிக வளாகங்களின் நிலம் சிங்கப்பூர் !

ஆர்ச்சர்ட் –  சிங்கப்பூரில் மிக பரபரப்பான ஒரு சாலை !  2.2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு சொகுசு வணிக வளாகங்கள் வரிசைக்கிரமமாக அமைந்திருக்கின்றன. உள்ளூர் வாசிகளும் சரி, சுற்றுலா பயணிகளும் சரி, வார நாட்கள் ஆனாலும் வார இறுதி நாட்கள் ஆனாலும் கூட்டம் கூட்டமாக இந்த மால்களுக்கு வருவதை காணமுடியும்.

ஏறக்குறைய சிங்கப்பூரின் எல்லா முக்கிய நகரங்களிலும் அதற்கான ஒரு பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பொழுதுபோக்கு கூடிய இடமாகவும், நிதானமாக சுற்றி வருவதற்கான ஒரு சிறப்பு இடமாகவே இந்த வணிக வளாகங்கள் மாறியிருக்கின்றன.

7 – மிக அற்புதமான விமான சேவைகளின் நாடு சிங்கப்பூர் !

 சிங்கப்பூரின் விமான நிலையங்களும், விமானங்களும் உண்மையிலேயே மிகவும் அற்புதமானவை. குறிப்பாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தங்குவதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது . இலவச சினிமா, விதவிதமான அழகான மலர்த் தோட்டங்கள், என சிங்கப்பூருக்கு வரக்கூடிய அல்லது சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கி அடுத்த விமானம் எடுப்பதற்கு கடந்து செல்கிற பார்வையாளர்கள் எல்லாருக்கும் , நீச்சல் குளம் உள்ளிட்ட நவீன வசதிகளோடு கூடிய சாங்கி விமான நிலையம் ஒரு உலக அதிசயம் போலவே தென்படும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தேசிய விமான சேவைக்கான  தலமாகவும் சாங்கி விமான நிலையம் உள்ளது. தனது ஏர்லைன்ஸ் சின்னத்திற்கு ஏற்றார் போலவே விமான பணிப் பெண்களின் சேவைக்கும் புகழ்பெற்றது சிங்கப்பூர் விமானங்கள் .

8 – சுவையான, மலிவான, தெரு உணவுகளின் தாயகம்

சிங்கப்பூர்

அதிக விலை இருக்கக்கூடிய உயர்தர ஓட்டல்கள், உணவு விடுதிகளின் சுவை மற்றும் தரத்துக்கு இணையாகவே சிங்கப்பூரின் தெரு உணவுகளும் தனிச் சிறப்பு பெற்றவை . சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் கூட அத்தகைய உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். அதிக சுகாதாரம் மற்றும் தரத்தோடு இருக்கக்கூடிய அந்த உணவுகள் ஏறக்குறைய சிங்கப்பூரின் எல்லா பகுதிகளிலும் நிரம்பி இருக்கின்றன. ஹாக்கர் உணவு கடைகள் என்று வழங்கப்படும் இவை உலகப் புகழ் பெற்றவை. இந்த உணவுக் கடைகளில் செலவிடும் நேரம் சிங்கப்பூர் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான சிறந்த வழியும் கூட. சிங்கப்பூரில் உணவு கடைகளின் உணவுகளை சுவைக்காமல் சிங்கப்பூர் சுற்றுலா ஒருபோதும் நிறைவடைவதை இல்லை.

9 – மரினா விரிகுடா வியப்பின் சிங்கப்பூர்!

10 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னால் கடல் நீர் மட்டும் கொண்ட வெற்று நிலமாக இருந்த பகுதி என்று சொன்னால் யாருமே நம்பவே முடியாத அளவிற்கு வணிகம் மற்றும் சுற்றுலா பகுதியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த மெரினா விரிகுடா. கண்டிப்பாக  பார்த்து மட்டுமே பிரம்மிக்க வேண்டிய , வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட இடம் இது.

10 – லீ குவான் யூ – சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்று சொன்னாலே அரசியல், நிர்வாக, வரலாறு அறிந்த, சார்ந்த, எல்லாருக்கும் நினைவில் வரக்கூடிய ஒரு பெயர் லீ குவான் யூ. சுதந்திர சிங்கப்பூரின் நிறுவன தந்தையாக கொண்டாடப்படும் இவர்,தன்னுடைய வெளிப்படை தன்மைக்காகவும், மிகவும் துணிவான முடிவுகளை திடமாக எடுத்து செயல்படுத்தியதற்காகவும் இன்றைக்கும் ஒரு வரலாற்றுப் பாடமாகவே பார்க்கப்படுகிறார். இவ்வளவு நேரம் பட்டியலிடப்பட்ட இந்த சிங்கப்பூரின் சிறப்புகள் எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டவர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. 2015 இல் இறந்த இவர், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சிங்கப்பூரின் சிறப்புகளுக்காக தொடர்ந்து நினைவில் நின்று கொண்டே இருப்பார் என்பதும் வெள்ளிடைமலை.

 நன்றி !

அன்புடன் உங்கள் ஆரா அருணா !

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts