உலகில் முதல்முறையாக மனிதனின் வியர்வையில் இருந்து சார்ஜ் ஆகும் பேட்டரியை சிங்கப்பூரைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 3 பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் கரூர் தமிழர் குருநாதன் தங்கவேல் யார்… கரூரின் குக்கிராமத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அவர் சாதித்ததன் பின்னணி என்ன?
குருநாதன் தங்கவேல்
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆர்ச்சம்பட்டி என்கிற குக்கிராமம்தான் குருநாதன் தங்கவேலுவுக்கு சொந்த ஊர். அவரது தந்தை பசுமை விவசாயியான தங்கவேலுக்கு விஞ்ஞானியாக வேண்டும் என்பது சிறு வயது கனவு. ஆனால், குடும்ப சூழலால் விவசாயத்தில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அவர், தனது மகனுக்கு விஞ்ஞானி கனவை சிறுவயது முதலே ஊட்டி வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை கரூர் மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் படித்த குருநாதன், அடுத்த இரண்டு ஆண்டுகள் பள்ளிப் படிப்பை பிஷப் ஹீபர் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர், அதே குழுமத்தின் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் வேதியியலை எடுத்து படித்து முடித்திருக்கிறார். வேதியியலில் முதுகலை பட்டம் முடித்த அவருக்கு விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு மட்டும் உள்ளுக்குள் கனல் விட்டு எரிந்துகொண்டிருந்திருக்கிறது.
இதனால், அடுத்தபடியாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் சேர்ந்து பொறியியல் படிப்பையும் முடித்திருக்கிறார். அதன்பின்னர், கொரிய வேதியியல் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து செல்வதற்குள் சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்திருந்தார். கொரிய நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு, சிங்கப்பூரின் ‘Nanyang Technological University (NTU)’ பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தது இவரது கரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர் நாட்கள்
என்.டி.யூ பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவருக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றும் பேட்டரிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது சக ஆய்வாளர்களான பேராசிரியர் ‘Lee Pooi See’ மற்றும் ஆய்வாளர் ‘Lyu Jian’ ஆகியோரோடு இணைந்து மனித வியர்வையில் இருந்து சார்ஜ் ஆகும் பேட்டரியை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். வியர்வை மூலம் சார்ஜிங் ஆகும் பேட்டரி வடிவமைக்கப்பட்டிருப்பது உலக அளவில் இதுவே முதல்முறையாகும்.
எப்படி வேலை செய்கிறது?
வியர்வையை உறிஞ்சும் துணி ஒன்றில் இந்த பேட்டரியை பிரிண்ட் செய்துகொள்ள முடியும். அந்த பேட்டரியில் சில்வர் ஆக்ஸைடு மற்றும் துத்தநாகம் ஆகியவை எலக்ட்ரோடுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நெகிழ்வுத் தன்மை கொண்ட வெள்ளி இழை ‘Collector’-ஆக செயல்படுகிறது. வியர்வை அந்த துணியில் பட்டவுடன் எலக்ட்ரோடுகளுடன் வேதியியல் வினை புரிந்து மின்சாரமாக அது சேமிக்கப்படுகிறது. பொதுவாக ஸ்மார்ட் வாட்சுகள் போன்றவைகளில் பயன்படுத்த இந்த பேட்டரி சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல், ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முக்கியமான திருப்புமுனையாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடியா எப்படி வந்தது?
இதுகுறித்து பேசிய குருநாதன், “பொதுவாக வெயில் காலங்களில் நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது அதிக அளவில் வியர்வை வெளியேறும். உடலில் இருந்து இயல்பாகவே வெளியேறும் இந்த வியர்வையில் எலக்ட்ரோடுகள், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் ஆகியவை கலந்து வெளியேறும். இதனால், வியர்வையில் இருக்கும் இந்த வேதிப்பொருட்களைக் கொண்டு ஏன் சார்ஜிங் செய்யக் கூடாது என்று யோசித்தோம். இதுபற்றி தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வியர்வையில் சார்ஜ் ஆகும் பேட்டரியை வடிவமைத்திருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார்.
எப்போது விற்பனைக்கு வரும்?
இவர்கள் தயாரித்திருக்கும் பேட்டரி எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கிறது உள்ளிட்ட அளவீடுகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. கைகளில் அணிந்துகொள்ளும் படியான ஸ்மார்ட் வாட்சுகளுக்கான புதிய தொழில்நுட்பத்தையும் இவர்களது குழு உருவாக்கி வருகிறது. இந்த ஆய்வுகள் முழுமையடையும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் விற்பனைக்கு வரலாம். இதற்காகப் பல்வேறு நிறுவனங்களுடன் குருநாதன் தங்கவேலு குழுவினர் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.
கரூர் அரசுப் பள்ளியில் படித்த குருநாதன், உலக அளவில் மிகப்பெரிய விஞ்ஞானியாக உருவெடுத்திருப்பது, எத்தனையோ லட்சக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷன்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.