TamilSaaga

200 ஆண்டு காலமாக சிங்கப்பூர் தமிழர்களுக்கு அருள் கொடுக்கும் அம்மன்… “சின்ன அம்மன்” என்று பக்தியுடன் அழைக்கப்பட்டு “மாரியம்மன்” ஆன மகாகதை!

சிங்கப்பூரில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் சைனா டவுனில் உள்ள மாரியம்மன் கோவிலை பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு சிங்கப்பூரில் வாழும் மக்களிடையே பிரபலமானது இந்த கோவில். இன்னும் சொல்ல போனால் நம் தாய் நாட்டை விட்டு சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்கு, அந்த கோவிலுக்குள் அடி எடுத்து வைத்தால் நம்மூரில் இருப்பது போன்றே உள்ளுற உணர்வு தோன்றும்.

சிங்கப்பூரில் இருக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வரும் மாரியம்மன் கோவிலின் வரலாறு உண்மையிலேயே சுவாரசியம் மிகுந்ததாகவும். சைனா டவுனில் உள்ள இந்த இடத்தில் ஒரு கோவிலை எழுப்புவதற்கு நம் ஆதி தமிழர்கள் பட்ட சிரமங்கள் எண்ணற்றவை. அவற்றைப் பற்றிய சிறு வரலாறு நாம் இப்பொழுது காணலாம்.

பிரிட்டிஷ் காலத்தில் தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சிங்கப்பூரில் குடியேறிய மக்களின் வழிபாட்டிற்காக 1827 ஆம் ஆண்டு இந்த கோயில் ஆனது கட்டப்பட்டது. இந்த கோவிலை கட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் திரு நாராயண பிள்ளை என்பவர்.

ஆங்கிலேயர் காலத்தில் பினாங்கில் இயங்கி வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் அவர் ஒரு எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார். சிங்கப்பூரில் முதல் முதலாக செங்கல் சூலையை நிறுவி அத்தொழிலில் வெற்றியடைந்ததால் நாராயண பிள்ளை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விரும்பப்பட்டார்.

எனவே அவர் கிழக்கிந்திய கம்பெனியிடம் வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்து கோயிலை அமைப்பதற்கு முதலில் தெலுக் ஆயர் ஸ்ட்ரீட் என்னும் இடத்தில் அனுமதி வழங்கியது.அப்பொழுது அம்மனுக்கு தேவைப்படும் அபிஷேகம் போன்றவற்றினை செய்வதற்கு தேவையான தண்ணீர் வசதி அங்கு இல்லாததால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்டாப்ஃபோர்ட் கால்வாய் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நகரத்தை மாற்றி அமைப்பதற்காக பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக அந்த நிலப் பகுதியும் வழங்கப்படவில்லை. இறுதியில் சைனா டவுன் வட்டாரத்தில் உள்ள சவுத் பிரிட்ஜ் எனப்படும் பகுதி 1823 ஆம் ஆண்டு பிள்ளையின் பெரும் முயற்சியின் கீழ் ஒதுக்கப்பட்டது.

முதல் முதலாக மரத்தாலான குடில் போல் அமைத்து மாரியம்மனின் சிறு விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு “சின்ன அம்மன்” என்று அழைக்கப்பட்டது. அந்த விக்ரகம் இன்றும் கோவிலுக்குள் இருப்பது இந்த கோவிலின் பழமையினை பறைசாற்றும் ஒரு விஷயமாகும்.

சின்ன குடிலாக இருந்த கட்டிடம் 1743 ஆம் ஆண்டு செங்கலும், சுண்ணாம்பு கலவையும் கொண்டு கட்டிடமாக எழுப்பப்பட்டது. அதற்கு பின்பு சுமார் 119 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டில் தான் நுட்பமான சிற்பக் கலைகளுடன், வேலைபாடுகளுடன் கூடிய கோவிலாக மாற்றப்பட்டது.கோவிலின் ராஜகோபுரம் ஆனது 1930 இல் மீண்டும் கட்டப்பட்டது.

இருப்பினும் தற்போது இருக்கும் சிற்பங்களுடன் இருக்கும் கம்பீரமான ராஜகோபரமானது 1960 ஆம் ஆண்டு மீண்டும் வடிவமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலங்களில் மாரியம்மன் கோயில் ஆனது தமிழர்களுக்கான புகலிடமாக அமைந்தது.

அப்பொழுது இருந்த தமிழர்கள் கோவிலை இரவு தூங்குவதற்காகவும், இந்துக்களுக்கான திருமணம் நடத்தும் இடமாகவும் உபயோகித்தனர். இந்த கோவிலில் நடக்கும் தீமிதி திருவிழாவானது மிகவும் புகழ் பெற்றதாகும். இன்றும் சிங்கப்பூரில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

மேலும் அம்மனுக்கு வழக்கமாக நடக்கக்கூடிய நவராத்திரி பூஜை, ஆடிமாத கூழ் ஊற்றும் திருவிழா ஆகிய விசேஷ திருவிழாக்களும் இங்கு நடக்கும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வரலாற்றினை சுமந்து, சொந்த நாட்டினை விட்டு சிங்கப்பூருக்கு வந்த தமிழர்களுக்கு அருள் பாலித்து வரும் மாரியம்மன் வரலாறு உண்மையிலேயே போற்றத்தக்கதாகும்.

Related posts