TamilSaaga

சிங்கப்பூரில் Dormitoryயில் புதிதாக 371 பேர் பாதிப்பு : நேற்று ஒரே நாளில் தீவில் 1443 பேருக்கு தொற்று – மூவர் பலி

சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 25) நண்பகல் நிலவரப்படி 1,443 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய நோய்த்தொற்றுகள் 1,000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,425 உள்ளூர் நோய்த்தொற்றுகள், 1,053 சமூக வழக்குகள் மற்றும் 371 தங்குமிட குடியிருப்பாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட 280 முதியவர்கள் அடங்குவர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 19 பேருக்கு நோய் நோற்று பரவல் இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் பெருந்தொற்றுக்கு மேலும் மூவர் இறந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் இதுவரை 21 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.

நேற்று சனிக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 85,949 பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 1,142 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நன்றாகவும் கண்காணிப்பிலும் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. மொத்தம் 165 தீவிர நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படுகிறது, அதேசமயம் 27 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 158 முதியவர்களும் அடங்குவர். கடந்த 28 நாட்களில், 97.9 சதவீத உள்ளூர் வழக்குகள் அறிகுறியற்றவை அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தன. மேலும் ப்ளூ ஸ்டார்ஸ் விடுதியில் தற்போதுள்ள கிளஸ்டர் மேலும் 24 வழக்குகள் இணைக்கப்பட்ட பின்னர் 243 ஆக அதிகரித்துள்ளது. உட்லேண்ட்ஸ் டார்மிட்டரி கிளஸ்டருடன் மேலும் நான்கு வழக்குகள் இணைக்கப்பட்டுள்ளன, அதில் இப்போது 68 வழக்குகள் உள்ளன.

Related posts