கடந்த இரண்டே வாரங்களில் பார்சல் சர்வீஸ் தொடர்பான மோசடியில் சிக்கி சிங்கப்பூரில் மக்கள் கிட்டத்தட்ட $1,82,000 சிங்கப்பூர் டாலர்களை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
பார்சல் மோசடி
சிங்கப்பூரில் இருப்பவர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடந்து வருவதாக சிங்கப்பூர் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. இதுதொடர்பான தகவல்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் என்கிற ரீதியில் உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வரும். அந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்தால், உங்கள் கிரடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களைக் கொடுக்கச் சொல்லும். அதைக் கொடுத்தால் அவ்வளவுதான்… உங்கள் கணக்கில் இருந்து தாமாகவே பணம் பறிபோகும்.
இப்படி பணம் பறிபோன பின்னர்தான், நீங்கள் ஏமாற்றப்பட்ட விஷயமே உங்களுக்குத் தெரியவரும். இப்படி ஒரு மோசடிதான் சிங்கப்பூர் மக்களைக் குறிவைத்து சமீபகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான மோசடியான இணைப்புகள் மூலம் சுமார் 130 பேர், 1,82,000 சிங்கப்பூர் டாலர்களைக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே இழந்திருப்பதாகப் புகார் பெறப்பட்டிருக்கிறது.
என்ன செய்யலாம்?
உங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்-ஸில் சந்தேகம் இருந்தால் உடனடியாக நீங்கள் புகார் செய்ய வேண்டும். 1800-255-0000 அல்லது https://str.sg/wCCM இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 1800-722-6688 என்ற எண்ணை அழைக்கலாம். முன்னதாகவே https://str.sg/wCCA என்ற இணையதளத்தில் இணைந்து ஏமாற்றப்படுவதைத் தடுக்கலாம் என்றிருக்கிறது சிங்கப்பூர் அரசு.. உஷார் மக்களே உஷார்.