இந்த செய்தி ஒரு மிகையானதோ அல்லது ஊரில் உலகத்தில் நடக்காத ஒரு அரிய விஷயமோ அல்ல. ஆனால், எந்த கள்ள கபடமும் இல்லாமல் பெற்ற பிள்ளைகளுக்காக உழைக்கும் ஒரு தாயின் அன்பை கொச்சைப்படுத்துவது தான் வேதனை அளிக்கிறது.
இன்றும் நகரத்தில் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்தோருக்கு, வீட்டில் இருந்து அரிசி, புளி, மிளகாய் தேவையான அனைத்தையும் பெற்றவர்கள் எடுத்துச் செல்வார்கள். ஒரு சாம்பார் வைப்பதாக இருந்தால் கூட, தன் பிள்ளை கடையில் சாம்பார் பொடி வாங்கி அதை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, ஒரு மாதம் முன்பாகவே அந்த பொடிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அரைத்து, டப்பா டப்பாவாக கட்டி எடுத்துச் செல்வார்கள்.
நகரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கே இப்படி என்றால், தான் பெற்ற மகன் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றால்… அப்படித் தான் ஒரு தாயின் புகைப்படம் ஒன்று வைரலாகியது. ஆனால், அது தாயை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது தான் கொடுமை.
ஆம்! சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தனது மகனை காண ஒரு தாய் வந்துள்ளார். இந்நிலையில், மகனின் வீட்டில் மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்தப் பதவினை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஷேர் செய்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல. அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர்.
பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுருத்துங்கள். பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை” என்று உருவாக்கமாக பதிவிட்டார்.