இப்படியொரு கொலை சிங்கப்பூரிலேயே நடந்திருக்காது. சினிமா படங்களில் வரும் கொடூர வில்லன் கதாபாத்திரங்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு, ஒரு பணிப்பெண் சிங்கப்பூரில் இருந்திருக்கிறார். ஹாலிவுட் பட சைக்கோ த்ரில்லர் கொலை காட்சிகள் கூட தோற்றுவிடும்.
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், Seow Kim Choo (59 வயது) என்பவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தவர் தர்யாதி (29 வயது).
திடீரென ஒருநாள் Seow வீட்டில் இருந்து மரண ஓலம் கேட்கிறது. தலையில் வெட்டுக் காயத்துடனும், முகம் முழுக்க ரத்தத்துடனும் ஒருவர் அந்த வீட்டில் இருந்து ஓடி வருகிறார்.
ஆம்! இந்த அனைத்து நிகழ்வுக்கும் காரணம் தர்யாதி எனும் அந்த பணிப்பெண் தான்.
2016ம் ஆண்டு என்ன நடந்தது?
சிங்கப்பூரில் வசித்து வந்த Mdm சியாவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக 2016 ஜூன் மாதம் வீட்டு வேலைக்கு சேர்கிறார் தர்யாதி. இரண்டு மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்த தர்யாதி, ஹாங்காங்கில் இருக்கும் தனது காதலனை நினைத்து தினம் ஏங்கியுள்ளார். வீட்டில் பணப் பிரச்சனைகளும் இருந்ததால், இந்தோனேசியாவுக்குத் திரும்பி ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினாள். இதனால் அங்கிருந்து உடனடியாக செல்ல வேண்டும் என்று தர்யாதி கேட்க, வீட்டின் உரிமையாளர் Mdm சியாவ் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த தர்யாதி, Mdm சியாவ் குடும்பத்தையே கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.
ஆனால், மே 12, 2016 அன்று அவர் தனது டைரியில் இவ்வாறு எழுதியுள்ளார், “இந்த திட்டத்தை நான் விரைவாக நிறைவேற்ற வேண்டும். உயிருக்கு ஆபத்து இருந்தாலும் நான் தைரியமாக இருக்க வேண்டும். எல்லா ஆபத்துகளையும்/ விளைவுகளையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன், எந்த ஆபத்து வந்தாலும், நான் தயாராக இருக்க வேண்டும். அதை ஏற்கிறேன். இந்த திட்டம் வெற்றியடைந்து சீராக இயங்கும் என்று நம்புகிறேன். எனது முதலாளியின் குடும்பமே எனது இலக்கு. மரணம்!!!” என்று அதில் தன் கைப்பட எழுதியிருக்கிறார்.
ஜூன் 7, 2016 அன்று தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு அவர் வீட்டைச் சுற்றி ஆயுதங்களை மறைத்து வைத்தார்.
பிறகு, Mdm சியாவ் படுக்கையறைக்குள் நுழைந்த தர்யாதி, கத்தியைக் காட்டி பாஸ்போர்ட் கேட்ட போது உரிமையாளர் கூச்சல் போட்டிருக்கிறார். இதனால் இன்னும் ஆத்திரமடைந்த, தர்யாதி வயதான அந்த பெண்ணை கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று கதவை மூடிவிட்டு கழுத்து, தலை மற்றும் முகத்தை பலமுறை சரமாரியாக வெட்டினார்.
Mdm சியோவின் கணவர், ஓங் தியாம் சூன் தனது மனைவியை அழைத்த போது, அந்த பதிலும் இல்லை. அவர் கதவின் அடிப்பகுதியில் உள்ள இடைவெளி வழியாக கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்தபோது தரையில் இரத்தம் இருப்பதைக் கண்டார்.
பிறகு, கழிப்பறைக் கதவைத் திறக்க ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தியபோது, தர்யாதி இரண்டு கத்திகளால் சியோவின் கணவரையும் வெட்டினார். கழுத்தில் குத்தப்பட்ட போதிலும், ஓங் தர்யாதியை அடக்கி, கழிப்பறைக்கு வெளியே இழுத்துச் சென்றார்.
அவர் அவளது கைகளை கேபிளால் கட்டி அதன் பிறகு போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு, “இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த்” வழங்கிய ஒரு மனநல அறிக்கையில், கொலைக்கு முந்தைய இரண்டு வாரங்களில் தர்யாதி adjustment disorder-ரால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தது.
சிங்கப்பூரையே உலுக்கிய இந்த வழக்கில், தர்யாதியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தோனேசியாவில் டீன் ஏஜ் பருவத்தில் தான் பலமுறை கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், அதனால் தன்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
முதலில் தான் வீட்டு உரிமையாளரை கொல்ல விரும்பவில்லை என்றும், பாஸ்போர்ட் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியைப் பெறுவதற்காகத் தன் முகத்தை அறுத்துக்கொண்டு மிரட்டவே நினைத்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அதுமட்டுமின்றி, அந்த நிலையில் என்னாலேயே என் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று 94 முறை குத்தி குத்தி கொலை செய்தது குறித்து தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் தர்யாதிக்கு ஏப்ரல் 2021 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கொலை செய்ததற்கு எதிரான அவரது மேல்முறையீட்டு மனுவை இன்று (மார்ச் 31) நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆம்! தனக்கு கருணை காட்டுமாறு தர்யாதி முன்வைத்திருந்த வேண்டுகோளை நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.