சிங்கப்பூரில் இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா எனும் பகுதி எப்படி உருவானது… அதன் வரலாறு என்ன…? ஆரம்பத்தில் எப்படி இருந்தது அந்தப் பகுதி? தமிழர்கள் அதனை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது எப்படி? இப்படி லிட்டில் இந்தியா பத்தின முழுமையான வரலாறைத்தான் நாம் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.
சிங்கப்பூர் ஆரம்பகாலம்
ஆரம்பகாலத்தில் சர் ஸ்டாம்ஃபோர்டு ரஃபேல்ஸ், சிங்கப்பூரை நகரைத் திட்டமிடுகையில், அந்தத் திட்டமான ’the Raffles Town Plan’-இல் லிட்டில் இந்தியா இடம்பெறவே இல்லை. முதலில் அந்தப் பகுதி லிட்டில் இந்தியா என்றே பெயர் பெறவில்லை. 1980களில் லிட்டில் இந்தியா என அந்தப் பகுதி பெயர் பெறுவதற்கு முன்னர் அது, ’Serangoon’ என்றே அறியப்பட்டது. 1828-ம் ஆண்டு வரையப்பட்ட சிங்கப்பூர் மேப்பில் அந்த சாலை, சிங்கப்பூர் தீவு முழுவதும் ஊடாகப் பயணிக்கும் சாலையாகவே வரையப்பட்டிருந்தது.
சைனா டவுன் மற்றும் ‘Kampong Glam’ ஆகியவற்றோடு சேர்ந்து சிங்கப்பூரின் முக்கியமான மூன்று கலாசார அடையாளங்களுள் ஒன்று லிட்டில் இந்தியா. இந்தியர்கள் அதிகம் வாழ்ந்து வருவதால், இது லிட்டில் இந்தியா எனப் பெயர் பெற்றது.
முக்கியமான காலக் கட்டம் 1819 – 1860
ஆரம்பகாலகட்டங்களில் ’Serangoon Road’ என்று அழைக்கப்பட்ட இதன் பெயர் மலாய் மொழியில் ’saranggong’ என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. அதேபோல், சதுப்புநிலப் பகுதிகளில் மட்டுமே வசிக்கும் ஒருவகையான ranggong பறவை அல்லது கோலால் அடித்து விளையாடும் ‘serang dengan gong’ விளையாட்டை ஒட்டி இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்கின்றன ஆய்வுகள். ஆரம்பத்தில் இந்தப் பகுதி பயிர்கள் அதிகம் விளையும் பகுதியாகவும், ’Serangoon’ துறைமுகத்துக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் முக்கியமான வணிக தளமாகவும் விளங்கியது. சிங்கப்பூரின் முக்கியமான துறைமுகப் பகுதியாக இது இல்லாவிட்டாலும் ’Johor gambier’ மற்றும் மிளகு உற்பத்தியாளர்கள், தங்கள் பொருட்களை இறக்கிவைக்கும் முக்கியமான தளமாக இது இருந்தது. இங்கு இறக்கப்படும் பொருட்கள் சிங்கப்பூர் நகருக்குள் மாட்டு வண்டிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
இதனாலேயே அந்த சாலைகளில் மாட்டு வண்டிகள் செல்வதும் போவதுமாக எப்போதும் நெரிசல் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் ‘Serangoon’ பகுதியில் பல்வேறு புதிய தொழில் வாய்ப்புகள் பெருகின. ‘Kallang’ மற்றும் ’Rochor’ ஆறுகள் அமைந்திருந்ததால், இயல்பாகவே நீர்வழிப் போக்குவரத்துக்கு முக்கியமான இடமாக அமைந்திருந்தது. இதனால், ‘Serangoon’ பகுதியைச் சுற்றி நிறைய கிராமப்புறங்கள் அமையத் தொடங்கின. இப்போதைய சையது அல்வி சாலை மற்றும் ’Balestier Road’ பகுதிகளைச் சுற்றி சீன மக்கள் அதிக அளவில் குடியேறத் தொடங்கினர். அவர்களின் முக்கியமான தொழில் வேளாண்மையாக இருந்தது. ’Kampong Kapor’ பகுதியில் இந்திய இஸ்லாமியர்கள் அதிக அளவில் குடியேறத் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் துறைமுகங்களில் பணியாற்றுபவர்களாகவும் அலுவலகங்களில் பியூனாகவும் பணியாற்றி வந்தனர்.
’Serangoon’ சாலைப் பணிகளுக்காக அப்போதைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் சிறைக்கைதிகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் பெரும்பாலும் பிரிட்டீஷாருக்கு வேலை செய்து வந்தனர். அந்தக் கைதிகள் ’Bras Basah’ சாலையில் இருந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அந்தக் கைதிகள் தங்கள் தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் அருகிலிருந்த பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். அவர்களைத் தொடர்ந்து மற்ற இந்தியர்களும் வணிகத்துக்கு உதவும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் நோக்கோடு இந்தப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இந்தியர்கள் அதிகம் வாழும் மாவட்டமாக இந்தப் பகுதி மாற அடித்தளமிட்டது இதுவே. ஆரம்பகாலகட்டங்களில் இந்தப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்பு சுரங்கங்களால், இந்தியர்கள் இந்தப் பகுதியை சுண்ணாம்புக் கால்வாய் என்றே அழைத்திருக்கிறார்கள். 1820-களில் கட்டப்பட்ட கட்டடங்களில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட மெட்ராஸ் சுன்னத்தின் முக்கியமான மூலப்பொருள் இங்கிருந்து கிடைத்த சுண்ணாம்பு. இந்த சுண்ணாம்பு சுரங்கங்களால் இந்தியர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
1860 – 1930 காலக் கட்டம்
1860-களில் சுண்ணாம்பு சுரங்கங்கள் மூடப்பட்ட நிலையில், ’Serangoon’ பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலானது. அவை நகர்ப்புறத்துக்கு பொருட்களைக் கொண்டுசெல்ல பயன்பட்டது. ’Rochor’ ஆற்றை ஒட்டிய மாங்குரோவ் காடுகள், நல்ல தண்ணீர் வசதி போன்றவை கால்நடைகள் வளர்ப்புக்கு முக்கியமான பகுதியாக இதை மாற்றின என்றே சொல்லலாம். அதேபோல், அப்போதைய சிங்கப்பூரின் முக்கியமான போக்குவரத்து வாகனமாகப் பயன்பட்ட எருமை மாடுகளைக் குளிப்பாட்டும் இடமாகவும் இருந்தது. இதனால், ‘Kandang Kerbau’ பகுதியைச் சுற்றி கால்நடைகள் தொடர்பான தொழில்கள், தொழிற்சாலைகள் பெருகத் தொடங்கின. ’Serangoon’ சாலையில் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்தப் பகுதி ஒரு கட்டத்தில், ‘Kampong Kerbau’ என்று பெயர் பெற்றது. இறைச்சிக் கூடங்கள் பால் விற்பனை மையங்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் என அந்தப் பகுதி பிஸியான மையமாக மாறியது.
கால்நடை வளர்ப்பு பிரதானமான தொழிலாக மாறிய நிலையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் 1900-களின் ஆரம்பத்தில் ‘Rochor’ கால்வாயை ஒட்டிய பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். 1930-களில் ‘Buffalo Road’ மற்றும் ‘Chander Road’ பகுதிகளில் மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பால் விற்பனை செய்வதைப் பார்க்க முடிந்தது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தயிர் கூடையோடு விற்பனை செய்வதும் அப்போது இயல்பான காட்சியாகவே இருந்திருக்கிறது.
கால்நடை விற்பனையை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் நடக்கும் வகையில், ’Serangoon’ பகுதியில் பழைய `Tekka Market’ கட்டப்பட்டது. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை ஓரிடத்தில் ஒழுங்குபடுத்தும் ஒரே நோக்கத்தோடு இந்த மார்க்கெட் கட்டப்பட்டிருக்கிறது. இறைச்சி, மீன் கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் என அந்த காலகட்டத்தில் இந்த மார்க்கெட் களைகட்டியிருக்கிறது.
வணிக மையமான காலக் கட்டம் : 1860-1930
மாவு அரைக்கும் கடைகள், செக்கு மையங்கள், மூங்கில் வேலை செய்யும் கடைகள் மற்றும் அன்னாசிப் பழ தொழிற்சாலைகள் என இப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வணிக நடவடிக்கைகளின் முக்கியப் பகுதியாக மாறியது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு இடையே தொடர்பு ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈர நிலமும் எருமைகள் அதிகம் வளர்க்கப்படும் பகுதி என்பதால், அதைச் சுற்றி இந்தத் தொழில்கள் பெருக்கெடுத்தன. காரணம், இந்தத் தொழிற்சாலைகளில் எருமைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் இருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்பட்டன. ஆரம்ப காலகட்டங்களில் இந்தப் பகுதியில் சீனர்களும் மலேசியர்களும் அதிக அளவில் குடியேறத் தொடங்கியிருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்தப் பகுதியில் இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமானது என்றே சொல்லலாம். உதாரணமாக, 1920-களில் சிங்கப்பூரை ஆண்டுவந்த பிரிட்டீஷ் அரசு இந்தியர்கள் அதிகம் பேரை வேலையில் சேர்த்தது. அவர்கள் வசிப்பதற்காக இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் கட்டப்பட்டன. ஆரம்பத்தில் அவை, ’Municipal Quarters’ அல்லது ‘Coolie Lines’ என்றழைக்கப்பட்டன. லிட்டில் இந்தியாவின் ‘Hindoo Road’ பகுதியில் அந்த குடியிருப்புகளை இப்போதும் நீங்கள் பார்க்க முடியும்.
இதையடுத்து, இந்தியர்களுக்குத் தேவையான புதிய தொழில்கள் செழிக்கத் தொடங்கின. பூக்கடைகள், ஜோசியக்காரர்கள், நகை வேலைப்பாடு செய்பவர்கள், தையல் கடைகள், பணம் வட்டிக்குக் கொடுக்கும் தொழில், உணவகங்கள் மற்றும் உடைகள் விற்பனை செய்யும் ஜவுளிக் கடைகள் என பல்வேறு தொழில்களும் இந்தப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போர் கொண்டுவந்த பேரழிவு
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான் ராணுவம் ‘Serangoon Road’ பகுதியைக் குறிவைத்துத் தாக்கியது. இதனால், இப்பகுதியில் இருந்த பல கட்டடங்கள் கடுமையான சேதமடைந்தன. தாக்குதலில் இருந்து தப்ப மக்கள் அங்கிருந்த கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் தஞ்சமடையத் தொடங்கினர். அதில், முக்கியமானது ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில். அந்த ஆலயத்தில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கானோர் எந்தவொரு காயமுமின்றி தப்பினர். இது காளியின் அருளால் நடந்த செயல் என்று அப்பகுதி மக்கள் மனதார நம்பினர்.
ஜப்பானியர்களின் தாக்குதலில் கேகே மருத்துவமனையும் தப்பவில்லை. தாக்குதலில் இருந்து தப்ப பெரிய அளவிலான ரெட் கிராஸ் கொடி மருத்துவமனையின் மீது கட்டப்பட்டது. ஆனால், மருத்துவமனை வளாகத்துக்கு பிரிட்டீஷார் துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு செல்லத் தொடங்கினர். இதையறிந்த ஜப்பானியர்கள், அரை மணி நேரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தினர். சிங்கப்பூரின் இரண்டாவது அதிபரான ’Benjamin Sheares’ அந்த நேரத்தில், கேகே மருத்துவமனையின் துணைத் தலைவராக இருந்தார். தாக்குதலில் படுகாயமடைந்த வீரர்களுக்கு அவருடன் இன்னொரு மருத்துவர் மட்டுமே அப்போது மருத்துவமனையில் இருந்தார். இருவரும் தங்களுக்குள் ஷிஃப்ட் போட்டுக்கொண்டு ஓயாமல் மருத்துவம் பார்த்தனர். அதேபோல், சுமார் 200 குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள மூன்று செவிலியர்கள் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்கள். பிரிட்டீஷ் படைகள் ஜப்பானியர்களிடம் 1942-ல் சரணடைந்தனர். அப்போது, சிங்கப்பூரில் ஜப்பானியர்களுக்கு எதிரான விஷயங்களைக் களையும் ‘Mass – Screening’ நடத்தப்பட்ட 28 இடங்களில் ’Serangoon’ பகுதியில் இருந்த ‘New World Park’ ஒரு இடமாக இருந்தது.
நகரமயமாக்கல்: 1945 – 1980
இரண்டாம் உலகப்போர் 1945-ல் முடிவுக்கு வந்தபிறகு ‘Serangoon Road’ பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மெல்ல மீண்டெழத் தொடங்கின. இந்தப் பகுதி மக்களால் பிஜிபி என்று அன்போடு அழைக்கப்படும் பி.கோவிந்தசாமி பிள்ளை, போர் நடந்தபோது, தனது 5 கடைகளையும் உறவினர்களிடம் கொடுத்துவிட்டு இந்தியா போனார். போருக்குப் பிறகு சிங்கப்பூர் திரும்பிய அவர், தனது கடைகளை சீரமைத்து தொழிலில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார். அப்பகுதியில் கோயில்கள் உள்ளிட்டவைகள் கட்டுவது தொடங்கி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பலவற்றையும் அவர் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து மற்ற வியாபார நடவடிக்கைகளும் லிட்டில் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது.
சிங்கப்பூர் முழுமையாக 1965-ல் சுதந்திரம் பெற்ற பிறகு, நகரை மீள்கட்டமைத்தல் மற்றும் சுத்தமாக்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். தொடக்கத்தில் நகர்ப்புறப் பகுதிகளின் மீது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக Serangoon உள்ளிட்ட பகுதிகளும் வளர்ச்சியடையத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் இப்பகுதியில் வசித்த மக்கள் பலர், மின்சார வசதி எதுவும் இல்லாமல் சுகாதாரமற்ற சூழலில் வசித்து வந்தனர். 1970-களின் மத்தியில், வீட்டுவசதி வளர்ச்சித் துறை சுமார் 4 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கி இப்பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தது. 1980-ம் ஆண்டில் பழைய ‘Tekka Market’ வசதியான வேறொரு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், 1981-ல் ’The Zhujiao Centre’ (தற்போதைய ’Tekka Centre’) கட்டப்பட்டது.
Serangoon ‘டு’ லிட்டில் இந்தியா: 1980-களுக்குப் பிறகான காலக் கட்டம்
1980களுக்கு முன்பு வரை இந்தப் பகுதி அதிகாரப்பூர்வமாக லிட்டில் இந்தியா என்று பெயர் பெறவில்லை. சிங்கப்பூரில் இருக்கும் அனைத்துவிதமான இனக்குழுக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் தொடர் முயற்சிகளின் விளைவாகவே இந்தப் பெயர் பெற்றது. இன்றைய நிலையில், லிட்டில் இந்தியா பகுதியில் எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தேவையான பொருட்கள் நிச்சயம் இருக்கும். அதேநேரம், இந்தியர்கள் தங்கள் சொந்த ஊரில் இருப்பது போலவே அவர்களுக்கான கோயில்கள் தொடங்கி உணவகங்கள் வரை உள்ளூர் ஃபிளேவரில் பறிமாறும் இடமாக தனி அடையாளமாக நிற்கிறது.
சிங்கப்பூருக்கு வரும் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த இந்திய பாரம்பரியம் பற்றி அறிந்துகொள்ள முக்கியமான இடமாகவும் லிட்டில் இந்தியா இருக்கிறது. லிட்டில் இந்தியா பற்றி வெளிநாட்டினரும் அறிந்துகொள்ளும் விதமாகக் கடந்த் 2017-ல் ‘the Little India Heritage Trail’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், லிட்டில் இந்தியா பற்றி வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். மூன்று தீம்களின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கான பயணமும் இந்தப் பகுதியில் திட்டமிட்டு, அதற்கான சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.