உலக அளவில் பிரசித்திபெற்ற பல கோவில்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் நிச்சயம் நமது அண்டை நாடான இந்தியாவிற்கு சிறப்பான ஒரு இடம் உண்டு. உலகிற்கே பல சாஸ்திரங்களை கற்றுக்கொடுத்த தமிழர்கள் கட்டிய கோவில்கள் அங்கு லட்சக்கணக்கில் உள்ளது.
அந்த வகையில் போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நவபாஷாணத்தால் ஆனா முருகன் சிலையை கொண்ட கோவில் தான் பழனி ஆண்டவர் கோவில். முருகனுக்கு தென் இந்தியாவில் உள்ள அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.
இந்நிலையில் பிரசித்திபெற்ற அந்த கோவிலுக்கு நமது சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் அவர்கள் தற்போது சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருக்கும் சண்முகம் அவர்கள் ஹெலிகாப்டரில் பழனிக்கு சென்றுள்ளார்.
பின்னர் மலையடிவாரத்தில் இருந்து கேபிள் கார் மூலம் மேலே சென்று அவர் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சர் சண்முகம் மற்றும் TVS நிறுவன உரிமையாளர் சுதர்சன் ஆகியோர் இணைந்து மலைக்கோவிளுக்கு சரக்கு வாகனம் ஒன்றைகாணிக்கையாக வழங்கியுள்ளார்.
சிங்கப்பூர் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் தான் சண்முகம், அண்மையில் சிங்கப்பூரில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் நடந்த மாரத்தான் போன்ற போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களுக்காக அவர் ஓடி நிதி திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.