சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள், தங்கள் வயதான பெற்றோர், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வெளிநாட்டு வீட்டு வேலைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த எண்ணினால் மனிதவள துறை நிர்ணயித்திருக்கும் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
அப்படி வெளிநாட்டுத் தொழிலாளர்களை வீட்டு வேலைக்கு அமர்த்த எண்ணும் நபர்களுக்கு சிங்கப்பூர் குடிமகன்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வகுத்திருக்கிறது. அதைப்பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.
வீட்டு வேலை உதவியாளராக சிங்கப்பூருக்குப் பணிக்கு வருபவர்கள், அதற்காக வொர்க் பெர்மிட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். உதவியாளராகப் பணிக்கு வருபவர்களை (MDW) ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியைத் தவிர வேறு இடத்தில் பணியமர்த்தினாலோ அல்லது வீட்டு வேலை அல்லாத வேலைகளைக் கொடுத்தாலோ அவர்களைப் பணிக்கு அமர்த்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்ய வருபவர்,
- முறையான வொர்க் பெர்மிட் வைத்திருக்க வேண்டும்.
- மனிதவள அமைச்சகத்திடம் கொடுத்திருக்கும் முகவரியில் மட்டுமே பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்.
- வீட்டு வேலைகள் மட்டுமே செய்ய வேண்டும்.
- வேறொருவரிடம் பணியாற்றக் கூடாது.
விதிகளை மீறினால் என்ன தண்டனை?
- சட்டவிரோதமாக வீட்டு வேலைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துபவர்களுக்கு 10,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். அப்படி வேலைக்கு அமர்த்துபவர்கள், எதிர்காலத்தில் வீட்டு வேலைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தத் தடை செய்யப்படுவார்கள்.
- உரிய வொர்க் பெர்மிட் இல்லாமல், ஹெல்பர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு 5,000 முதல் 30,000 டாலர்கள் வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இதுபோன்ற தொடர்ச்சியாகக் குற்றமிழைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். வயதான பெற்றோர்களையோ அல்லது உங்கள் குழந்தைகளையோ பார்த்துக் கொள்ள ஹெல்பர்களின் உதவி தேவை என்பதை சிங்கப்பூர் அரசு புரிந்துகொள்ளும். அப்படி ஒருவரை வேலைக்கு அமர்த்தும் முன்னர் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்துக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் வீடு அல்லது உறவினர் வீட்டில் வயதான பெற்றோர் அல்லது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டு வேலைக்கு வருபவரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும்.
- அவர்கள் இரண்டு வீடுகளிலும் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடாது.
- உங்கள் பெற்றோர் அல்லது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஹெல்பர்கள் தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டால், அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் பற்றி மனிதவள அமைச்சகம் வகுத்திருக்கும் விதிகள் மற்றும் அதற்கான தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வேலை கொடுப்பவராக, உங்களிடம் வேலைக்கு வரும் ஹெல்பருக்கு உரிய முறையில் தங்கும் வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதிகளை நீங்கள் வழங்க வேண்டியது அவசியம்.
நேர்காணல்
மனிதவள அமைச்சகத்தின் விதிகளின்படி வீட்டு வேலைக்காக நீங்கள் பணியமர்த்தியிருக்கும் பெண், அமைச்சகம் ஏற்பாடு செய்யும் நேர்காணல் ஒன்றுக்குத் தேர்வு செய்யப்படலாம். அப்படி நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் அந்த நேர்காணலுக்குச் செல்வது கட்டாயமாகும்.
அந்த நேர்காணல் எப்படியிருக்கும்?
இதற்காக உங்கள் வீட்டு வேலை செய்யும் நபர் தேர்வு செய்யப்பட்டால், நேர்காணலுக்கான தேதி, நேரத்துடன் ஒரு கடிதம் உங்களுக்கு வரும். குறிப்பிட்ட நேரத்தில் அவர் அந்த நேர்காணலுக்கு வருகிறாரா என்பதை வேலை கொடுப்பவரான நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நேர்காணல் ஏன்?
மனிதவள அமைச்சகத்தின் நேர்காணல் என்பது வீட்டு வேலைக்காக வருபவர் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உரிய முறையில் தயாராகியிருக்கிறாரா, தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதை அறிவதற்காக ஏற்படுத்தப்படுவது. குறிப்பாக, முதல்முறையாக சிங்கப்பூருக்கு வீட்டு வேலைப் பணிக்காக வருபவர்கள், தங்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள இது உதவும். மேலும், வீட்டு வேலை செய்யும் நபர் பணிக்கு அமர்த்துபவரின் குடும்பத்துடன் சரியான முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்.
நடைமுறை என்ன?
இந்த நேர்காணலை மனிதவள அமைச்சகத்தின் சார்பில் Centre for Domestic Employees (CDE) எனப்படும் வீட்டு வேலைக்கான அமைப்பு நடத்தும். இது அரசு சாரா அமைப்பாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீட்டு வேலைப் பணியாளர்கள், தங்கள் சந்திக்கும் வேலை தொடர்பான பிரச்னைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (SNTUC) ஏற்படுத்திய அமைப்பு இது.
நேர்காணலின்போது CDE, ஹெல்பர்களிடம் அவர்களின் வேலை தொடர்பான விவரங்களைக் கேட்டுப் பெறும். சரியான உணவு, தூக்கம் போன்றவை கிடைக்கிறதா, பாதுகாப்பான சூழலில் வேலை செய்கிறார்களா போன்ற விவரங்களைச் சரிபார்பார்கள். மேலும், வீட்டு வேலைக்காக வரும் பணியாளர்களின் உரிமைகளும் பொறுப்புகளும் பற்றியும் தெரிவிக்கப்படும்.
எப்படி நடக்கும்?
இந்த நேர்காணல் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் 45 முதல் ஒரு மணி நேரம் வரை நடத்தப்படும். இதற்கான தேதி, நேரம் போன்றவை முன்னரே தெரிவிக்கப்படும். இதில் கலந்துகொள்ளத் தேவையான ஆவணங்கள்,
- நேர்காணலுக்காக அனுப்பப்பட்ட கடிதம்
- வொர்க் பெர்மிட் கார்டு
- வேலை ஒப்பந்தம்
- வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால்
நேர்காணல் நடக்கும் நேரத்தில் உரிய முறையில், அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வீட்டு வேலைப் பணியாளருக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நேர்காணலை ரெக்கார்டு செய்ய அனுமதியில்லை.
நேர்காணல் நேரத்தை மாற்ற விரும்பினால்
- நேர்காணல் ஏற்பாடுகளை மாற்ற விரும்பினால் நீங்கள் CDE-ஐத் தொடர்பு கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, உங்களிடம் வேலை பார்ப்பவரை நேரடியாக போன் மூலம் தொடர்பு கொண்டு நேர்காணலை முடித்துக் கொள்ளலாம்.
- நேரத்தை மாற்ற விரும்பினால், குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய 3 வேலை நாட்களுக்கு முன்பாகவே CDE-ஐத் தொடர்பு கொள்ளலாம்.
- 6303 6840
- interview@cde.org.sg – இதன் மூலம் நீங்கள் CDE-ஐத் தொடர்பு கொள்ளலாம்.
நேர்காணலில் உங்களின் வீட்டில் வேலை பார்க்கும் தொழிலாளி கலந்துகொள்ளவில்லை என்றால், அவரின் வொர்க் பெர்மிட் ரத்து செய்யப்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தொழிலாளியை ஊருக்கு அனுப்புதல்
உங்களிடம் வேலை பார்க்கும் வெளிநாட்டு வீட்டு வேலைத் தொழிலாளியின் பணிக்காலம் நிறைவடைந்தால், அவரை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு முன்னர் நீங்க சில விஷயங்களைச் செய்தாக வேண்டும்.
- ஊதியம் உள்ளிட்ட அந்தத் தொழிலாளி எழுப்பும் பிரச்னைகள் எல்லாவற்றையும் சரியான முறையில் தீர்த்து வையுங்கள்.
- அவரிடம் உரிய பாஸ்போர்ட் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
- விமான டிக்கெட் எடுக்கும் முன்னர், விமானத்தின் பயண நேரம், விமானங்கள் மாற வேண்டியிருந்தால் அதற்கு இடைப்பட்ட காத்திருக்கும் நேரம், பயணத்துக்காகக் கொடுக்கப்பட வேண்டிய செலவுத் தொகை போன்றவை குறித்து அவருக்குத் தெளிவாக விளக்கி, அதுபற்றி எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறுங்கள்.
- விமான டிக்கெட்டுடன் சேர்ந்து விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு அவர் செல்வதற்கான செலவுத் தொகையையும் நீங்கள் கொடுக்க வேண்டும். அத்தோடு, வொர்க் பெர்மிட் முடிந்த 2 வார காலத்துக்குள் அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
விடுமுறை
உங்கள் வீட்டில் பணியாற்றும் தொழிலாளி, சொந்த ஊரில் இருக்கும் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக விடுமுறையில் செல்ல விரும்பலாம். அப்படி அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் நிலையில், விடுமுறை நாட்களில் நீங்கள் ஊதியம் அளிப்பதில் இருந்து விலக்குப் பெறலாம்.
உங்கள் வீட்டில் பணியாற்றும் தொழிலாளி விடுமுறையில் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்னர்,
- செல்லத்தக்க பாஸ்போர்ட் அவரிடம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- அவருடைய நாட்டின் தூதரகத்தைத் தொடர்புகொண்டு Immigration தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.
- பாஸ்போர்ட்டுடன் வொர்க் பெர்மிட் கார்டை அவர் எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது இருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் அவர் திரும்ப வர முடியும்.
- அவரின் விமான டிக்கெட் அல்லது போக்குவரத்து ஆவணங்களின் நகல்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் உங்கள் தொழிலாளி விடுமுறை எடுத்துக் கொண்டால், அவரின் வொர்க் பெர்மிட்டை நீங்கள் ரத்து செய்ய முடியும். அப்படி செய்துவிட்டால், அவருக்கு மீண்டும் வேலை அளிக்க, இன்னொரு முறை நீங்கள் வொர்க் பெர்மிட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதியம்
உங்கள் வீட்டில் பணியாற்றும் தொழிலாளி விடுமுறையில் சொந்த ஊர் சென்றிருந்தாலும் நீங்கள் அவருக்கு ஊதியம் அளிக்க வேண்டி வரும். விடுமுறை முடிந்து அவர் சிங்கப்பூர் திரும்பும் நிலையில், விடுமுறை நாட்களுக்கான ஊதிய விலக்குக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 7 நாட்களில் இருந்து ஒருவருடத்துக்கு 60 நாட்கள் வரை ஊதிய விலக்கு கோரி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க – சிங்கப்பூரில் Covid-ல் இருந்து மீண்டவர்களுக்கும், primary vaccination series மற்றும் பூஸ்டர் டோஸ் கட்டாயமா?
ஆறு மாதத்துக்கு ஒரு முறை உங்கள் தொழிலாளியின் உடல்நலனை பரிசோதிக்கும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும். ஒருவேளை அவர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்தால், சோதனையைத் தள்ளிப்போடுவதற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளி திரும்ப வராவிட்டால் என்ன செய்யலாம்?
விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற உங்கள் தொழிலாளி சிங்கப்பூர் திரும்பாவிட்டால்,
- ஊதியம் அளிப்பதை நிறுத்த அவரின் வொர்க் பெர்மிட்டை நீங்கள் ரத்து செய்யலாம்.
- அவரின் விமனா டிக்கெட் அல்லது போக்குவரத்து ஆவணங்களை நீங்கள் சான்றாக சமர்ப்பிக்கலாம்.
சொந்த ஊர் சென்ற அவர் மீண்டும் சிங்கப்பூர் வரவில்லை என்பதை மனிதவள அமைச்சகம் உறுதி செய்த பிறகு, நீங்கள் செலுத்தியிருக்கும் பாதுகாப்புத் தொகை உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படும். இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படும் முன்னர், அந்தத் தொழிலாளி சிங்கப்பூர் வந்தால் அவரை உடனடியாக நீங்கள் திருப்பி அனுப்பிவைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களின் பாதுகாப்பு வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.
உங்கள் தொழிலாளி பணியாற்றாத மொத்த காலத்துக்கும் ஊதிய விலக்கு கோரி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இதை ஓராண்டுக்குள் நீங்கள் விண்ணப்பிக்க உரிமை உண்டு. குறிப்பிட்ட நாளில் இருந்து ஓராண்டு முடிந்தும் உங்கள் வீட்டு வேலைத் தொழிலாளி திரும்ப வரவில்லை என்றால், அவரின் வொர்க் பெர்மிட்டை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
தடை
பணியாளர்களைத் துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஒருவர் ஈடுபட்டால், வெளிநாட்டில் இருந்து வீட்டு வேலைக்காகத் தொழிலாளிகளைப் பணிக்கு அமர்த்த அவருக்குத் தடை விதிக்கப்படும்.
வெளிநாட்டுத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான சட்டத்தின் அடிப்படையில் கீழே குறிப்பிட்டிருக்கும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்குத் தடை விதிக்கப்படும்.
- தொழிலாளியைத் துன்புறுத்துதல்.
- சரியான முறையில் உணவு அல்லது ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குதல் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டால்,
- தொழிலாளியின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் வேலை வாங்குதல்.
- சட்டவிரோதமாக தொழிலாளியை வேலைக்கு அமர்த்துதல்
இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டதாக ஒருவர் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவரின் வீட்டில் பணியாற்றும் தொழிலாளியின் வொர்க் பெர்மிட்டை நீடிப்பது குறித்து அவர் விண்ணப்பித்தால், அதுபற்றி மனிதவள அமைச்சகம் விசாரித்தே முடிவெடுக்கும். தடை செய்யப்பட்டவர்கள், புதிய வொர்க் பெர்மிட் கேட்டு விண்ணப்பிக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் வொர்க் பெர்மிட் காலத்தை நீட்டிக்கக் கோரியோ விண்ணப்பிக்க முடியாது. குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைக் காலம் முடிவு செய்யப்படும்.