சிங்கப்பூரில் புங்கோல் பகுதியில் பல தேசிய தின அணிவகுப்பு பதாகைகளை சேதப்படுத்தியதாக 24 வயது இளைஞர் மீது இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வான் அஹ்மத் யூசோஃப் என்றும் அழைக்கப்படும் அஹ்மத் அப்துல்லா என்ற அந்த நபர், NDP அலங்கார பேனர்களை வெட்டி சேதப்படுத்தியதோடு, பொதுவெளியில் ஆயுதத்தை எடுத்துச் சென்றதற்காகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
நேற்று ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் புங்கோல் வாக், பிளாக் 211 A அருகே கருப்பு நிற கத்தி மற்றும் ஒரு ஜோடி கத்தரிக்கோலை எடுத்துச் சென்றதாக அஹ்மத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு குறித்து தகவலறிந்ததும், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பூங்கோல் பீல்ட், புங்கோல் சென்ட்ரல் மற்றும் புங்கோல் வாக் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பல சிங்கப்பூர் கொடிகள் மற்றும் பேனர்களை அவர் சேதப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த நபரை கண்காணிப்பில் வைக்க போலீசார் உத்தரவித்துள்ளனர். மேலும் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
அஹமத் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓராண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பொதுவெளியில் ஆயுதத்தை எடுத்துச் சென்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மேலும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் அளிக்கப்படலாம்.