TamilSaaga

சிங்கப்பூரில் காலை 9.30 மணிக்கு வேலைக்கு சென்ற ஊழியர்.. 10.40 மணிக்கு உயிரை பறிகொடுத்த கொடுமை! முதலாளிக்கு 79 லட்சம் அபராதம்!

SINGAPORE: பணியிடத்தில் பரிதாபமாக பலியான ஊழியரின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் சிங்கை நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, நவம்பர் 7ம் தேதி, எண்.31 சாங்கி சவுத் அவென்யூ 2 இல் உள்ள ட்ரைடெக் (Tritech) கட்டிடத்தில் ரோலர் ஷட்டரின் மோட்டாரை மாற்றுவதற்கு Lee Ee Ten நிறுவனம் சார்பில் 3 ஊழியர்களை அனுப்பியது. இதில், Tong Baorong என்ற ஊழியரும் அடக்கம்.

காலை 9.30 மணியளவில், அந்த மூன்று தொழிலாளர்களும் கட்டிடத்திற்கு வந்த பிறகு, ஷட்டருடைய மோட்டாரின் ஐசோலேட்டரை அணைக்க, ரோலர் ஷட்டருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஊழியர் டோங் ஏறினார்.

அவர் தரையில் இருந்து சுமார் 5.6 மீ உயரத்தில் இருந்த மோட்டாரை மாற்றத் தொடங்கினார். சக ஊழியர்கள் இருவரும், அந்த ஏணியை தாங்கிப் பிடித்துக் கொண்டே, புதிய மோட்டரை தூக்கிக் கொடுத்தனர்.

சரியாக காலை 9.40 மணியளவில், ஊழியர் டோங் மாற்று மோட்டாரை வெற்றிகரமாக பொருத்தினார். பிறகு அவர் ஐசோலேட்டரை இயக்கியபோது, ​​மோட்டாரின் உலோக சட்டகம் மற்றும் ஏணி உட்பட அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்து மின் கடத்தும் பொருட்களும் உடனடியாக இயக்கத்திற்கு வந்தது. இவையனைத்தும், பிரதான மின்சார விநியோகத்தின் நேரடி முனையத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

இதனால், ஊழியர் டோங் உடலில் மின்சாரம் பாய, அவர் ஏணியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலை 10.40 மணியளவில் மரணமடைந்தார். மின்சாரம் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க – சினிமாவை மிஞ்சிய ஆக்ஷன்… சிங்கப்பூரில் பள்ளிக்கு வெளியே கத்தியுடன் நின்று மிரட்டிய பெண்.. Machine Gun-னுடன் சுற்றிவளைத்த போலீஸ்.. கிளைமேக்சில் நடந்த ட்விஸ்ட்!

single-phase மின்சார இணைப்பில் இருப்பதாக கிடைத்த தவறான தகவலின் அடிப்படையில் தான் ஊழியர் டோங் உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால், உண்மையில் அப்போது Three-phase மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மூன்று தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய நியாயமான நடவடிக்கைகளை எடுக்க அவர்களின் நிறுவனமான Lee Ee Ten தவறிவிட்டது என்பது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளரான 65 வயது பெண்ணுக்கு 1 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்தவில்லை எனில், 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts