போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கம் இன்று (ஏப். 27, 2022) தூக்கிலிடப்பட்டார்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை நாகேந்திரனின் சகோதரர் தொலைபேசி அழைப்பின் மூலம் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அவரது சகோதரியும் இந்தச் செய்தியை BBCயிடம் உறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூரில் 38 சின் மிங் டிரைவில் அவர் தூக்கிலிடப்பட்டார், மதியம் 1 மணிக்கு அவருடைய இறுதி பயணம் துவங்கியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதைப்பொருள் கடத்தல் வழக்கில் நாகேந்திரன் முதன்முதலில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நவம்பர் 2010ல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது தண்டனை மற்றும் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடுகள் ஜூலை 2011ல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
நாகேந்திரன் சார்பில் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட கருணை மனுவும் பலனளிக்கவில்லை. குற்றம் நடந்தபோது நாகேந்திரன் நல்ல மனநிலையில் இல்லை என்று வாதிடப்பட்டாலும், உள்துறை அமைச்சகம் நவம்பர் 5, 2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், நாகேந்திரன் குற்றத்தைச் செய்தபோது “அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும்” என்று உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியது.
சுமார் 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சிங்கப்பூர் அரசு எந்தவித பாரபட்சமும் காட்டாமல் இன்று நாகேந்திரனுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.