சிங்கப்பூரில் சிக்னல் பிரச்சனையால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்ட ரயிலில் சுமார் 50 பயணிகள் சிக்கிக் கொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் காலை 8.10 மணியளவில் உட்லண்ட்ஸ் நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
சிங்கப்பூர் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் லைனில் (TEL) உட்லண்ட்ஸ் நார்த் மற்றும் கால்டெகாட் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் பாதையில் சிக்னல் கோளாறு காரணமாக இன்று புதன்கிழமை காலை (ஏப்ரல் 27) தாமதமானது.
உட்லண்ட்ஸிலிருந்து உட்லண்ட்ஸ் நார்த் ஸ்டேஷனுக்குச் செல்ல 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாக ஒரு பயணி தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார், பொதுவாக இந்த இரு நிலையங்களுக்கு இடையில் பயணிக்க வெறும் இரண்டு நிமிடங்கள் தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று காலை 9.01 மணிக்கு, ரயில் சேவைகள் படிப்படியாக மீண்டு வருவதாக ட்விட்டரில் SMRT தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக காலை 9.09 மணிக்கு வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.
என்ன நடந்தது?
SMRT இன்று காலை 6.30 மணியளவில் வெளியிட்ட உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சவுத் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயிலில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறியது. மேலும் “எங்கள் பொறியாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்று அது மேலும் கூறியது.
இரு ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்ட ரயிலில் சுமார் 50 பயணிகள் சிக்கிக் கொண்டனர் என்றும். அவர்கள் காலை 8.10 மணியளவில் உட்லண்ட்ஸ் நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கினர் என்றும் அது கூறியது.
“உங்கள் பயணம் பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறோம்” என்று SMRT ஒரு ட்வீட் மற்றும் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.