சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றவாளியான ஒரு பெண் HDB பிளாக்கின் மூன்றாவது மாடியில் இருந்து எகிறிக்குதித்து தப்ப முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தப்பிக்கும் முயற்சியை விவரிக்கும் வகையில் CNB தனது முகநூல் பதிவில் ஒரு தகவலை அளித்துள்ளது. அதில் “அந்த சந்தேக நபர் கீழே இறங்கும் முயற்சியில் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடிக்கு தாவினார்”.
“பிறகு அங்கிருந்து கீழே இருந்த மதில் சுவரை நோக்கி குதிக்க முயன்றுள்ளார், ஆனால் அப்படி அவர் செய்வதால் அவருக்கு காயம் ஏற்படக்கூடும் என்பதால் அவரை எங்களது CNB துறையினர் எச்சரித்தனர்”, என்று அந்த பதிவில் அவர்கள் கூறியுள்ளனர்.
“இருப்பினும் அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க நினைத்து இரண்டாவது மாடியில் இருந்து அவர் கீழே குதித்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஒரு அதிகாரி அவர் மேலிருந்து கீழே குதிக்கும் இடத்தை நோக்கி ஒரு குப்பை தொட்டியை வைத்துள்ளார், அது அவர் பத்திரமாக குதிக்க வழி வகுத்துள்ளது.
CNBன் விசாரணைகளின்படி, அதிகாரிகள் அந்த பெண்ணின் இருப்பிடத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே அவர் ஹெராயின் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் ஹெராயின் வைத்திருத்தல் அல்லது உட்கொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.