இந்த டிஜிட்டல் உலகில் இதுவரை நாம் கண்டிராத ஒரு மாபெரும் உலக அளவிலான முடக்கநிலை தற்போது அமலில் உள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கடந்த 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் பரவியதாக கருதப்படும் இந்த பெருந்தொற்று இன்று இந்த உலகின் ஓட்டத்தை சற்று நிறுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு, லட்சக்கணக்கான மக்கள் இறப்பு என்று ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக ஒரு நிலையற்ற நிலையே உலகெங்கிலும் நிலவுகிறது.
இதுஒருபுறம் இருக்க இந்த தொற்று பரவாமல் இருக்க பல நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து அதை செயல்படுத்தி வருகின்றன. நமது சிங்கப்பூர் அரசும் இந்த தொற்றை முழுமையாக ஒழிக்க தங்களால் முடிந்த அனைத்து செயல்பாடுகளையும் கையாண்டு வருகின்றது. மக்களாகிய நாமும் அதற்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றோம்.
இந்நிலையில் சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக தொற்றின் அளவு உயர்ந்து மீண்டும் குறைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் மீண்டும் தளர்வுகளை படிப்படியாக அளித்து வருகின்றது சிங்கப்பூர் அரசு. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வந்து வேலை செய்ய அனுமதி அழைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சுடன் அலுவலகம் செல்ல தொடங்கியுள்ளனர்.
அதே சமயம் சிங்கப்பூர் தனது எல்லைகளை விரைவில் திறக்க முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. வேலை பாஸ் எனப்படும் பாஸ் வைத்திருக்கும் பிற நாட்டு தொழிலாளர்களை மீண்டும் சிங்கப்பூர் வர அனுமதிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி விகிதங்கள் உலக அளவில் பல நாடுகளில் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால் இந்த முடிவினை எடுத்துள்ளது சிங்கப்பூர் அரசு.
ஆகையால் மீண்டும் அலுவலங்கள் மற்றும் பிற நாட்டு தொழிலாளர்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் ஒரு நம்பிக்கை துளிர்விடுகின்றது என்றே கூறலாம். தொற்றின் அளவு இன்னும் அதிக அளவில் குறையும் பட்சத்தில் சிங்கப்பூர் அரசு மேலும் பல தளர்வுகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.