SINGAPORE: மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய Air Asia பயணிகள் ஏராளமானோர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்திற்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
சாங்கி விமான நிலையத்தில் செப்டம்பர் 10 அன்று நடந்த இந்த சம்பவத்தில், விமானத்தின் உள்ளே இருந்து ஒரு பயணி எடுத்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், “விமானத்திற்குள் பயணிகள் முழு இருளில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. மற்றொரு கிளிப்பில் மக்கள் பதட்டத்துடன் நின்று கொண்டு, விமானத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதை காண முடிகிறது.
Patrick Chan என்ற பயணி தான் இந்த வீடியோவை விமானத்திற்குள் இருந்து எடுத்திருந்தார்.
அந்த பயணியின் தகவலின்படி, மின் கோளாறு காரணமாக விமானம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
“சாங்கி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சிக்கிக் கொண்டது. விமானம் மின்கசிவு காரணமாக கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கேபினுக்குள் சிக்கிக் கொண்டோம்” என்று மற்றொரு பயணி தனது சமூக தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயணி ஒருவர், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் தங்களுக்கு இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாக பகிர்ந்துள்ளார். ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கு ஏர் கண்டிஷனிங் இல்லாமல் பயணிகள் உள்ளே சிக்கிக் கொண்டதாக கூறினார்.
இதுகுறித்து மதர்ஷிப் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த ஏர் ஏசியா மலேசியா, “ஏகே716 என்ற விமானம், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தபோது “சிறிய தொழில்நுட்ப சிக்கலை” சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளது.
மின் கேபிள் இணைப்பில் ஏற்பட்ட சிக்கலால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது, இதன் விளைவாக தரை மின் சாதனங்கள் “விமானத்திற்கான மின் பகிர்வை வழங்க இயலவில்லை”.
“எங்கள் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்களுக்கு முக்கியம். அதில் ஒருபோதும் சமரசம் செய்யப்படமாட்டாது” என்றும் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.