எல்லைக்கட்டுப்பாடுகள் தளரத்தப்பட்ட நிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே நில போக்குவரத்து சூடு பிடித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் மக்கள் மணிக்கணக்கில் நின்று எல்லையை கடந்து வருகின்றனர்.
இந்நிலையில் JB சுங்கச்சாவடிக்கு வரும் வழியிலும் பெரிய அளவில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆகவே அதை தடுக்க ஜோகூர் அரசு ஒரு முன்னெடுப்பை செய்துள்ளது.
ஜோகூர் பாருவின் (JB) முக்கியமான இரண்டு இடங்களிலிருந்து ஜொகூர் பாரு சுங்கச்சாவடிக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலவச ஷட்டில் பேருந்து சேவை ஏப்ரல் 30ம் தேதி வரை இயக்கப்படுகிறது. ஜோகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் காசி, நேற்று ஏப்ரல் 21 அன்று வெளியிட்ட முகநூல் பதிவில் இதை தெரிவித்தார்.
பயணிகள் ஜாலான் துன் ரசாக் மற்றும் ஜாலான் ஜிம் கியூ ஆகிய இடங்களிலிருந்து இந்த பேருந்தில் ஏறி, ஜொகூர் பாரு பாங்குனன் சுல்தான் இஸ்கந்தர் (BSI) சுங்கச்சாவடியில் இறங்கலாம் என்று அவர் கூறினார். இந்த இடம் CIQ கட்டிடம் என்றும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச பேருந்து சேவை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும், மேலும் இது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களிலும் பொது விடுமுறை நாட்களில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த பேருந்து சேவை காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும்.
JB சென்ட்ரலில் இருந்து BSI கட்டிடம் நோக்கி உள்ள நடைபாதை பாலத்தில் காணப்படும் நெரிசலை நிவர்த்தி செய்ய, பல்வேறு துறைகள் மற்றும் ஏஜென்சிகளை உள்ளடக்கிய ஒரு பணிக்குழு இந்த ஏற்பாட்டை செய்யப்பட்டுள்ளதாக Onn Hafiz கூறினார்.
“அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் JB சென்ட்ரல் மற்றும் BSI ஆகியவற்றில் நெரிசலைக் குறைக்க முடியும். மற்றும் நுகர்வோருக்கும் ஆறுதல் அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று ஓன் ஹபீஸ் கூறினார்.
மேலும் இந்த இலவச சேவை மூலம் பயணிகள் JB சென்ட்ரல் – BSI பாதசாரி பாலம் வழியாக செல்லாமல், JB சுங்கச்சாவடிகளை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.