TamilSaaga

கோவிந்தா நாமம் சொல்லி நாவிற்கு சுவை சேர்க்கும் “திருப்பதி லட்டுக்கு” 308 வயது…

திருப்பதி என்றாலே நம் நினைவிற்கு வருவது லட்டும், மொட்டையும் தான். நெய் மணக்கும் லட்டினை ஒருவாய் எடுத்து நாவில் வைக்கும் பொழுதே அதன் மணமும், சுவையும் வித்தியாசமாக இருக்கும். நாம் வழக்கமாக ஸ்வீட் கடைகளில் லட்டு வாங்கி உண்டாலும் அது போல் லட்டு வேறு எங்கும் நாம் சுவைத்திருக்க மாட்டோம். அந்த பிரபலமான லட்டிற்கு இப்பொழுது 308 வயது ஆகின்றது என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?. ஆம் திருமலையில் உள்ள பெருமாளுக்கு லட்டு நெய்வேத்தியமாக படைக்கும் பழக்கமானது 1715 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

அவ்வகையில் பார்த்தால் லட்டிற்கு தற்பொழுது 308 வயது ஆகின்றது. முதல் முதலாக எட்டணாவிற்கு விற்கப்பட்ட லட்டின் விலை தற்பொழுது 50 ரூபாய். விலையில் மட்டுமே மாற்றம் இருந்தாலும் சுவையில் மாற்றமில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை திருப்பதியில் லட்டின் மூலம் மட்டும் தேவஸ்தானத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கின்றது. இந்த லட்டு இருக்கு புவிசார் குறியிடும் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள பொட்டு என்ற மடப்பள்ளியில் இதற்கென்றே உள்ள பிரத்தியேக பணியாளர்களால் தயாரிக்கப்படுகின்றது. ஒரு லட்டு தயாரிக்க கிட்டத்தட்ட 53 பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன என்பது சுவாரசியமான விஷயமாகும். அந்த காலத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரும் பக்தர்கள் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை சுவாமி தரிசிக்க அங்கு இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அப்பொழுது பக்தர்களின் பசியை போக்க அவர்களுக்கு பிரசாதம் வழங்கும் பழக்கம் இருந்தது. அதுவே நாளடைவில் லட்டாக மாறியது.

அப்பொழுது முதல், இப்பொழுது வரை ‘திருப்பதி லட்டு’ என்ற பெயரும் நிலைத்து நின்று மக்கள் பிரியமாக உண்ணும் இனிப்பு பொருளாக இன்று உள்ளது.

Related posts