SINGAPORE: ஆண்டுதோறும் சிங்கப்பூரின் தேசிய தினம் மிகுந்த சந்தோஷத்தோடு மக்களால் கொண்டாடப்படுகிறது. நம் நாடு நாம் வாழ வளர சிறந்ததொரு இடம் என்றே மக்கள் பூரிக்கும் வகையில் நாட்டை நேசித்து தேசிய தினம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய தின அணிவகுப்பு வரும் ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற அணிவகுப்பு இம்முறை மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே நூற்றுக்கணக்கனோர் முன்பதிவு செய்துள்ளனர்.
மக்கள் எந்தளவு சிங்கப்பூர் மீது பற்று வைத்துள்ளார்கள் என்பதற்கு முதல் தேசிய தின விழா ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
1966ல் நடந்த முதலாம் ஆண்டு தேசிய தின விழா பல ருசீகரமான உணர்ச்சிகரமான நிகழ்வுகளை கண்டது. சரியாக காலை 9 மணிக்கு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பதாங்கில் துவங்கியது.
அப்போது திரு.லீ குவான் யூ பிரதமராகவும், திரு.டோ சின் துணை பிரதமாரகவும் மற்றும் திரு.எஸ்.ராஜரத்தினம் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார்கள்.
அப்போது குடியரசு தலைவராக இருந்த திரு.யூசுப் இஷாக் அணிவகுப்பு வாகனத்தில் மக்களை நோக்கி கையசைத்து வந்தார்.
மக்கள் பாதுகாப்பு படை அணிவகுப்பை முன்னடத்திச் செல்ல இராணுவ வீரர்கள் அணிவகுப்பை மேற்கொண்டனர்.
சரியாக 10.40 மணிக்கு தேசிய தின அணிவகுப்பில் மழை குறுக்கிட்டது. மழையில் கலைந்து செல்லாமல் அணிவகுப்பை இராணுவம் மேற்கொள்ள அதனை காணும் மக்கள் தங்கள் தேசத்தின் பெருவிழா திருவிழா என்ற மனதோடு பெருமிதத்தோடு மழையில் நனைந்தபடியே நின்று தேசிய தின அணிவகுப்பை கொண்டாடினர்.
முதல் தேசிய அணிவகுப்பில் மட்டுமா மக்கள் இந்த உறுதியோடு நின்றார்கள்? என்றால் இல்லை. 1968 தேசிய தின விழாவிலும் மழை கொட்டித் தீர்த்தது. அந்த அடை மழையிலும் அசராமல் நின்று நமது தேசத்தின் பெருமை மிகு குடிமக்களாய் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள்.
நம்முடைய உயர்வுக்கும் வாழ்வுக்கும் வழியமைத்து தந்திருக்கும் தேசத்தின் பற்று, என்றும் அணையாத பெரு நெருப்பாய் சுடர்விட்டு ஜொலிக்கும்.