நாம் வாழும் இந்த வாழ்க்கையை “அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” என்பார்கள், அதை கடந்த சில நாட்களாக நமது சிங்கப்பூரில் நடக்கும் பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றனர். இந்த 2022ம் ஆண்டில், இரண்டு ஆண்டுகளாக நம்மை ஆட்டிப்படைக்கும் கொடிய பெருந்தொற்று குறைந்து வரும் அதே நேரத்தில் சிங்கப்பூரில் உயிரிழக்கும் தமிழக மற்றும் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகியுள்ளது என்பது வேதனை தரும் உண்மை.
சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், கடந்த ஜூன் 22ம் தேதி காலை 10.15 மணியளவில் ஒரு பணியிட விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட மனிதவளத்துறை அமைச்சகம் (MOM), இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான பெரியசாமி ராஜேந்திரன் என்ற தமிழக ஊழியர் ஒருவர், கிரேனின் சேஸின் அடியில் அமைந்துள்ள கருவிப்பெட்டியில் இருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, கிரேன் கடிகார திசையில் திரும்பி அவரை நசுக்கியதாக தெரிவித்தது.
இந்த விபத்து குறித்து சம்பத்தன்று காலை 10.20 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஹ்வா யாங் இன்ஜினியரிங் (Hwa Yang Engineering) நிறுவனத்தில் தான் பெரியசாமி ராஜேந்திரன் பணிபுரிந்து வந்துள்ளார். விபத்துக்கு பிறகு Khoo Teck Puat மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார். பிறகு, மருத்துவமனையிலேயே அவர் இறந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவுமாறு நமது தமிழ் சாகா நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜேந்திரனின் உறவினர்கள் நமது தமிழ் சாகா செய்திக்குழுவை தொடர்புகொண்டு பேசியபோது இன்னும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியம், வரம்பனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் பெரியசாமி என்பவற்றின் மகன் ராஜேந்திரன். அவருக்கு வயது 32, அவரது மனைவி சத்யா (30), மூத்த மகள் சர்மிளா (13), இரண்டாவது மகள் சர்மி ஷாலு (4) கடைசி மகன் சாரதி (7 மாதம்).
ராஜேந்திரன் சென்ற ஆண்டு சிங்கப்பூர் வந்து பணி செய்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். தற்போது ராஜேந்திரனின் 7 மாத கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகள் மற்றும் அவரது மனைவி ஆதரவின்றி நிற்கின்றனர்.
வரம்பனூரில் கஷ்டப்படும் அவர்களது குடும்பத்தாருக்கு உதவ நமது தமிழ் சாகா குழு தயாராக உள்ளது. ஆகவே அவர்களுக்கு உதவ விரும்பும் உள்ளங்கள் நமது குழுவை தொடர்புகொண்டு உதவலாம்.