சீனாவின் சோங்கிங் (Chongqing) நகரில் உள்ள ஒரு நபர், தனது காதலியுடன் சேர்ந்து, தனது மனைவி மூலம் பிறந்த குழந்தைகளைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தைகளைக் கொல்ல வற்புறுத்திய காதலி
நவம்பர் 2, 2020 அன்று, ஜாங் போ என்பவர் தனது இரண்டு வயது மகளையும் ஒரு வயது மகனையும் நகரின் Nan’An மாவட்டத்தில் 15வது மாடியில் உள்ள தனது பிளாட்டில் இருந்து படுக்கையறை ஜன்னல் வழியாக வெளியே வீசியிருக்கிறார்.
இதுகுறித்து குளோபல் டைம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், ஜாங் போ-வின் காதலியான யே செங்டுவான் (Ye Chengduan) குழந்தைகளை கொலை செய்யுமாறு அவரிடம் பலமுறை வற்புறுத்தி இருக்கிறார். அந்த நபருக்கு குழந்தைகள் இருப்பதை அவளும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த பெண் கூறியதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வர, தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில்,
“இந்த இரண்டு நபர்களின் செயல்கள் சட்டம் மற்றும் ஒழுக்கத்தின் அடி நாதத்தையே சிதைத்துவிட்டது. குறிப்பாக குற்றத்தின் நோக்கம் அருவறுக்கத்தக்க வகையில் உள்ளது. குற்றத்தின் வழிமுறைகள் மிகவும் கொடூரமானது. இந்த வழக்கு சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சட்டத்தின் படி தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் தாயான சென் மெய்லின், குற்றம் நடந்த நேரத்தில், கணவர் ஜாங் அவரது காதலி யே செங்டுவானுடன் வீடியோ காலில் இருந்தார் என்று கூறியுள்ளார். அப்போது அந்த காதலி, தனது மணிக்கட்டை அறுத்து, குழந்தைகளை வெளியே வீசும்படி மிரட்டியிருக்கிறார்.
இதனால் பயந்துபோன ஜாங், பின்னர் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு, தனது குழந்தைகளை ஜன்னலுக்கு வெளியே வீசி கொன்றிருக்கிறார்.
இரண்டு குழந்தைகளும் 2017-2019 வரை நீடித்த அவரது முந்தைய திருமண உறவில் பிறந்தவர்கள்
காவல்துறையின் கூற்றுப்படி, ஜாங்(Zhang) சென் என்பவரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2018-ல் மகளும், 2019 -ல் மகனும் பிறந்தார்கள். இந்நிலையில், ரெட் ஸ்டார் நியூஸிடம் பேசிய சென், ஜாங்கின் “உண்மையான” முகம் தான் முதலில் சந்தித்தபோது தெரியாது என்று கூறியுள்ளார்.
ஜாங்கை சந்தித்த சில மாதங்களுக்குள் சென் தனது முதல் குழந்தைக்கு கர்ப்பமானதால், அவருடன் குடும்பம் நடத்த முடிவு செய்தார். ஆனால், மகள் பிறந்த பிறகு, ஜாங்கின் ஆளுமை மாறியது என்று கூறுகிறார். நாளாக நாளாக இருவருக்குள்ளும் பிரச்சனை அதிகமாக, மகன் பிறந்த போது, விவாகரத்து பெற்றிருக்கின்றனர்.
பின்னர் அந்த நபர் பிறகு யே-வுடன் பழகத் தொடங்கியிருக்கிறார். இருவரும் 2019 ஆகஸ்டில் இருந்து ஒன்றாக குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளனர். விவாகரத்துக்கு பிறகு, ஜாங் மகனையும் சென் மகளையும் வளர்த்திருக்கின்றனர்.
அந்த நேரத்தில் தான், இரு குழந்தைகளையும் கொல்ல ஜாங் மற்றும் காதலி யே ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அதுவும் தற்செயலாக நடந்த விபத்து போல சித்தரிக்க முடிவு செய்து அதற்கேற்ப திட்டத்தை வகுத்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, யேவின் குடும்பம் 300,000 யுவான் (S$63,700) இழப்பீடாக வழங்க முன்வந்திருக்கின்றனர். ஆனால், பணத்தை வாங்க சென் மறுத்துவிட்டார். இந்த பணம் தன்னுடைய இரு பிள்ளைகளின் உயிரை மீட்டுத் தருமா? என்று சொல்லி அந்த தொகையை அவர் வாங்க மறுத்துவிட்டார்.