மன்ஹாட்டனுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூயார்க்கின் யோங்கர்ஸில் உள்ள ஒரு 67 வயதான பெண் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே இருந்த ஒரு நபர் இனவெறி பேச்சுக்களால் அவர் மனதை காயப்படுத்தி பின் இரக்கம் என்பதே சற்றும் இல்லாமல் அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்தபோது ஷாப்பிங் செய்த பொருட்களை Trolleyயில் வைத்து அந்த பெண் எடுத்துச்சென்ற நிலையில் பின்னே நின்ற அந்த நபர் அவரை இனவெறி கருத்துக்களால் வசைபாட துவங்கியுள்ளர். உடனே அந்த நபரை புறக்கணித்துவிட்டு, தன் trolleyயுடன் அவரது கட்டிடத்திற்குள் நுழைந்த பிறகு தன் பையில் இருந்த சாவியை எடுத்து தனது வீட்டை திறக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் இருந்து வந்த அந்த மனிதன் அவரை கொடூரமாக தங்கியுள்ளான்.
இளகிய மனம் படைத்தோர் பார்க்கமுடியாத வகையில் சுமார் 90 வினாடிகளுக்கு மேல் இடைவிடாத தாக்குதலை அந்த பெண்மணி மீதி பிரயோகித்துள்ளார் அந்த நபர். 42 வயதுடைய அந்த நபர் தம்மெல் எஸ்கோ என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்டி ஆஃப் யோங்கர்ஸ் காவல் துறையின் கூற்றுப்படி, பெயர் குறிப்பிடப்படாத அந்த 67 வயதான பெண், கடந்த மார்ச் 11ம் தேதியன்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எஸ்கோ என்ற அந்த குற்றவாளி கட்டிடத்தின் முன் இருப்பதைக் கண்டுள்ளார். பின் அவரை கடந்து அந்த பெண்மணி முன்சென்றபோது “Asian Bi**h” என்று தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் அந்த நபர். ஆனால் அவர் பேசியதை கண்டுகொள்ளாமல் தனது வீட்டின் அறையை அவர் திறக்க துவங்கினர்.
அப்போது உள்ளே நுழைந்த அந்த நபர் இரக்கமே இல்லாமல் சுமார் 90 வினாடிகள் 120க்கும் மேற்பட்ட முறை அந்த பெண்ணின் முகத்தில் குத்தினார். அதன் பிறகு 7 முறை தனது காலால் அவரை உதைத்து இறுதியில் அவர் மீது காரி உமிழ்ந்துவிட்டு அங்கிருந்த வெளியேறினார். இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த CCTVயில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து மாலை 6.11 மணியளவில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனைடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மிருகத்தனமாக அடித்ததன் விளைவாக, அந்த பெண்ணின் தலை மற்றும் முகத்தில் பல காயங்கள் மற்றும் முக எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. மூளையில் இரத்தப்போக்கு இருப்பதாகவும் Yonkers காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 14ம் தேதி நிலவரப்படி, அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்ட அந்த நபர் அதே இடத்தில் வசிப்பவர் என்றும் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் அவர் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 25ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.