Dubai: “நீ நல்லா இருப்படா… உனக்கெல்லாம் ஒன்னும் ஆகாது. உன்னை ஒருத்தனும் ஒன்னும் பண்ண முடியாது” என்று ஒரு காமெடியில் வடிவேலு சொல்வது போல், துபாய் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.
ஆம்! துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக வழங்கும், ‘வெண்டிங்’ மெஷின்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.
துபாயில் வசிக்கும் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து அங்கு வேலைப் பார்க்க வந்தவர்கள் தான். கட்டட வேலை, வெல்டிங் வேலை, கார் துடைக்கும் வேலை, மெக்கானிக், டெலிவரி என்று ஊதியம் குறைவான வேலைகளில் அதிகம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அங்கு வேலை செய்து வருகின்றனர்.
ஊதியமும் குறைவு… ஆனால் வீட்டுக்கு பணம் அனுப்பியாக வேண்டும். வாங்கிய கடனை அடைத்து, அதன் பிறகு அனுப்பும் பணமே அந்த குடும்பத்தின் தேவைக்கு பயன்படுத்தப்படும். இதனால், பல ஊழியர்கள் தங்களது மூன்று வேலை சாப்பாட்டை குறைத்து அந்த பணத்தை கூட மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பட்டினியாக நாட்களை கழிக்கின்றனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் அவர்கள் கடந்த ஆண்டே அறிவித்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக, தற்போது துபாய் முழுவதும், சூடான ரொட்டிகளை வழங்கும் ‘வெண்டிங் மெஷின்களை’ அவர் நிறுவியுள்ளார்.
இந்த உணவு இயந்திரங்கள், கடந்த செப்.17ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி மற்றும், ‘பிங்கர் ரோல்’ ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
துபாய் அரசின் இந்த தாயுள்ளம் கொண்ட குணம், உலக நாடுகளின் புருவங்களை ஆச்சர்யத்தில் உயரச் செய்துள்ளது.
இப்படியொரு திட்டத்தை நமது சிங்கப்பூரிலும் அறிமுகம் செய்தால் பயன் தருமா?