TamilSaaga

நானும் மதுரைக்காரி தான்… மீண்டும் ஒரு வெளிநாட்டு மருமகளை வரவேற்ற தமிழகம் – கோயிலுக்கு வந்தவர்கள் சாமியை மறந்து மணமக்களுடன் செல்ஃபி!

மிக அண்மையில் ஒரு வெளிநாட்டு மருமகளை தமிழகம் வரவேற்ற நிலையில், தற்போது அடுத்த ஃபாரீன் மருமகளை தமிழ் மண் வரவேற்றுள்ளது.

ஆம்! மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் காசிநாதன் -சூரியகலா தம்பதியின் மகன் காளிதாஸ். வயது 31. சிறு வயது முதலே படிப்பில் சுட்டியான காளிதாஸ், நன்றாக படித்து, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள நிறுவனத்தில் Software Engineer-ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.

உலகம் முழுக்க கோவிட் தொற்று பரவிய நிலையில், தனது சொந்த ஊருக்கு திரும்பிய காளிதாஸ், வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே, செக் குடியரசில் தன்னுடன் பணியாற்றிய ஹானா பொம்க்லொவா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஊருக்கு வந்த பிறகும், ஆன்லைனில் இருவரது காதல் நிற்காமல் போய்க் கொண்டிருக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

தங்கள் காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்த, அவர்களும் ஒப்புக் கொண்டனர். கிரீன் சிக்னல் கிடைத்ததை அடுத்து, ஹானா ஐரோப்பியாவிலிருந்து தமிழ்நாடு வந்து, தன் காதலர் காளிதாஸை மணமுடித்துள்ளார்.

இவர்களுடைய திருமணம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உப கோயிலான பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் மணமக்கள் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இந்த திருமணத்தில் மணமகனும் மணப்பெண்ணும் பட்டுவேட்டி, பட்டுசேலை அணிந்திருந்தனர். காதலி ஹானாவுக்கு தமிழக பாரம்பரிய முறை பிடித்திருந்ததால், அந்த கலாச்சாரத்தின்படியே காளிதாஸ் திருமண ஏற்பாடும் செய்திருந்தார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மணமக்களுடன் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காளிதாஸ் பேசியபோது, செக் குடியரசில் வேலை பார்த்தபோது இருவரும் நட்பாக பழகி வந்தோம். தமிழகம் வந்தவுடன், அவரை விட்டுப் பிரிந்ததுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலம் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன். அவரும் என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு காதலித்து வந்தோம். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிறகு, கண்டிப்பாக திருமணம் தமிழகத்தில் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படிதான் திருமணம் நடக்க வேண்டும் என அவரிடம் கூறிவிட்டேன்.

தமிழர் பாரம்பரிய முறைப்படி எப்படி திருமணம் நடக்கும் என்பதை அவரிடம் நான் தெரிவித்த போது, அவருக்கு அதே போல் திருமணம் செய்துகொள்வோம் என மகிழ்ச்சியாகக் கூறினார். இதையடுத்து இருவீட்டார் சம்மதம் தெரிவித்த உடன், திருமண தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் ஐரோப்பாவில் இருந்து தனது பெற்றோருடன் இங்கு வந்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி பட்டுப் புடவை கட்டி, தலை நிறையப் பூ வைத்து சொந்த பந்தங்கள் புடை சூழ எங்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

சமீபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த திருமால் பிரசாத், நைஜீரியாவைச் சேர்ந்த பட்ரிசியா இஃயின் எஜே என்ற பெண்ணை காதலிக்க, இவர்களது திருமணமும் வாலாஜாபாத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts